விஷ்ணு எந்த சின்னத்தை அணிந்தார் ? விபூதியா நாமமா ?

இங்கு வைணவ கோவில்களில் உள்ள விஷ்ணு விக்கிரகங்களையும் விஷ்ணு படங்களையும் பார்த்தால்,நெற்றியில் நாமம் அணிந்திருப்பார்.ஆனால்,நூற்களில்,அவர் நாமம் அணிபவர் என்று கூறப்பட்டிருக்கிறதா ??அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் ?? இக்கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்…

விஷ்ணுவின் ஒரு அவதாரமும்,26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன, ராமர் விபூதியை அணிந்தவர் தான்.

“ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத்

இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும்,

“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது வால்மிகி ராமாயணம். இச்சுலோகத்தின் பொருள் :

“பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார் ”

இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல் விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றை சின்னமாக தரித்த சிவ பக்தர் என்பது உண்மையே .

அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்.

“ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா ” என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர் விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.

“சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம் ” எனும் பராசர ஸ்மிருதி சுலோகம்,விபூதியை திருபுண்டரமாகத் தரிப்பதால்,கேசவ மூர்த்திக்கும் லக்ஷ்மி தேவியாருக்கும் திருப்தியுண்டாகிறது என்று நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

மகாபாரதம் அநுசாஸனப் பர்வம்,அத்தியாயம் 45,46இல் , கிருஷ்ணர்,உபமன்யு மகாமுனிவரிடம் சிவ தீக்ஷைப் பெற்று ,சிவனை வேண்டி,கயிலையில் தவம் இருந்து,பல வரங்களைப் பெற்றார் என்று கூறுகின்றன..இதனால்,கிருஷ்ணர் ஒரு சைவர் என்பதும்,அவர் விபூதி அணிந்தவர் என்றும்,சைவ ஆச்சாரத்தை கடைபிடித்தவர் என்றும் புலனாம்…

மேலும்,விஷ்ணு என்பவர் சிவ பக்தரே என்பதனை உறுதி செய்ய, வேதம் மற்றும் இதிஹாசத்திலிருந்தும் சற்று பார்ப்போம்.

“தவச்ரியே மருதோ மர்ஜயந்தே ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம் பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந பாஸி குஹ்யம் நாமகோநாம் ” .என்று ரிக் வேதம் கூறுகிறது.இதன் அர்த்தம் :

“தேவர் எல்லோரும் சிவலிங்காதாரனையால் எல்லா ஐசுவரியமும் எய்தினர்..இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும் பரமபத வாழ்வடைந்தான் ”

சரப உபநிஷத் கூறுகிறது “பக்த்யாநம் ரதநோ விஷ்ணோ : ப்ரஸாத மகரோச்சிவ : ” . பக்தி நிறைந்தவர் விஷ்ணு,பிரஸாதிக்கிறவர் சிவபிரான் என்பது இதன் பொருள்.

சரப உபநிஷத் மேலும் கூறுகிறது “பக்த்யாநம் ரதநோ விஷ்ணோ :ப்ரஸாதமகரோச் சிவ : ” ….இதன் பொருள் :

“பக்தியினால் வணங்கிய சரீரமுடைய விஷ்ணுவுக்குச் சிவபிரான் அநுக்கிரகம் பண்ணினார் ” .

அடுத்து, “ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமர வர ஸேவிதம் மாமேவ ஜ்யோதி : ஸ்வருபம் லிங்கம் மாமேவோபாஸித்வயம் ” -பஸ்மஜாபால உபநிஷத்

“பிரம்ம விஷ்ணு இந்திராதி தேவசிரேஷ்டர்களால் சேவிக்கப்பட்டு வரும் ஜோதிஸ்வரூபமான என்னையே என்னையே லிங்காகாரமாய் உபாசிக்க வேண்டும் ” என்பது இதன் பொருள்.சிவ பெருமானை பிற தேவர்களுடன் விஷ்ணுவும், பூஜிக்கின்றனர் என்பது புலனாம்.

இப்படி ,உபநிஷதங்கள்,விஷ்ணுவை,சிவ பெருமானின் பக்தனாக கூறுகின்றன…அடுத்து இதிஹாசங்களில்,விஷ்ணு,ஒரு சிவ பக்தராகத் தான் திகழ்ந்தார் என்பதனைப் பார்ப்போம்..

மகாபாரதம் :

1.ஆதி பர்வம்,அத்தியாயம் 241 :

“கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி , ‘எல்லா வருணத்தாரும் யாதவரனைவர்களும் ….கடலில் உள்தீவுக்குச் செல்ல கடவர்’ என்று நகரத்தில் பறையறை அறிவித்தார்.”

2.வனப் பர்வம்:-

i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ”

ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’

3.துரோணப் பர்வம் :-

i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘

ii)அத்தியாயம் 202 :

‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’

‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’

4.கர்ணப் பர்வம் :-

i)அத்தியாயம் 21 : ‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக
கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’

ii)அத்தியாயம் 28 : ‘பரசுராமர் .. கடுந்தவம் புரிந்து ருத்ரரை பிரஸன்னராகும்படி செய்தார் ‘

5.சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 :
‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘

[ குறிப்பு : பிறராலும்,விஷ்ணுவாலும் பூஜிக்கப்பட்டு,வேதத்தில் முழுமுதல் பொருள் என்று வர்ணிக்கப்பட்ட ருத்திரன் என்பவர் சிவ பிரான்…அவர் மஹா ருத்ரர்…அவரை வணங்கும் திரிமூர்த்திகளில்,அழிக்கும் தொழிலை செய்பவருக்கும் ருத்திரர் என்று பெயர்…ஆனால்,மஹாருத்திரரான சிவனும்,திரிமூர்த்திகளில் இருக்கும் ருத்திரரும் ஒருவர் அல்லர்…இந்த சுலோகத்தில்,மஹேஸ்வரும் மஹாருத்ரரும் ஆன சிவ பெருமானை,திரிமூர்த்திகளில் ஒருவரான ருத்ரன் வணங்குகிறார் என கூறப்பட்டிருக்கிறது. அழிக்கும் தொழிலை செய்யும் ருத்ரரை,வேதம் முழுமுதல் பொருள் என்று கூறவில்லை… பிரம்மா,விஷ்ணு,ருத்ரர் எனும் திரிமூர்த்திகளுக்கும் மேலானவர் என்பதனை வேதம் கூறுகிறது.ஆதாரம் :

“ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் …சிவம் ” ( பிரம்ம விஷ்ணு உருத்திரர்களைக் கடந்த சிவபிரான்) – பஸ்மஜாபால உபநிஷத்

“சிவம்..ஹரிஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம் ” (சிவபிரான்,பிரம்ம விஷ்ணு ருத்திரர்களை சிருஷ்டித்தவன் ) -பஸ்மஜாபால உபநிஷத் ]

6.அநுசாஸனப் பர்வம் ,அத்தியாயம் 45 :

‘ஒவ்வொரு யுகத்திலும் கிருஷ்ணர்,மகேஸ்வரரால் ஆராதிக்கப் பெற்றார்.’

ராமாயாணத்தில்,ராமார் விபூதியணிந்தவரே என்பதனை மேலே,ஒரு ராமாயண சுலோகத்தில் பார்த்தோம்.மேலும்,’ராம ‘ எனும் நாமம் வைணவப் பெயர் அன்று.அது சைவப் பெயரே.இதற்கு ஆதாரம் :

“சிவோமா ராம மந்த்ரோயம் ” ( ராம நாமம் சைவம் ) -ராம ரஹஸ்ய உபநிஷத்

“ஹரா உமா “எனும் சைவ நாமங்களில் இருக்கும் ஈற்றெழுத்தை(ரா ,மா) சேர்த்ததால் ராமா என்று வருகிறது. ஆக,ராமர் என்பது சைவ நாமமே,வைணவ நாமம் அல்ல..இதனால்,பரசுராமரின் தந்தை(ஜமதக்கினி முனிவர்), பலராமர் மற்றும் ராமரின் தந்தைகள் சைவ சமயத்தவரே என்பது வெட்ட வெளியாம்.

ஆக,வேதத்திலிருந்தும்,இதிஹாசங்களிலிருந்தும்,விஷ்ணு ஒரு சிவபக்தர் தான் என்பதற்கு சில ஆதாரங்களைப் பார்த்தோம்.சிவபக்தர்களுக்கு விபூதியும் ருத்திராக்ஷமும் தான் அணிய வேண்டிய சின்னங்கள்..அப்படியிருக்கும்போது,சிவ பக்தரான விஷ்ணு,விபூதி அணியாமல்,நாமம் அணிபவர் என்று கூறுவது எவ்வளவு அறிவீனம் ?

வேதத்தில் விபூதியின் பெருமை அநேக இடங்களில் பேசப்படுகிறது… பஸ்மஜாபால உபநிஷத் முழுக்க முழுக்க விபூதியின் பெருமையை பேசுகிறது..அதே போல்,வைணவர்களின் சின்னமான நாமத்தை,வேதம் பேசவேயில்லையென்பதே உண்மை..வேதத்தில் நாமம் கூறப்படவேயில்லை.. சுமார் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,ராமானுஜர் அறிமுகப்படுத்தியது தான் ,நாமம்…உண்மை வைணவர்கள் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்…ஆதாரம் :

உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .

மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .

ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??இவ்வளவு ஆதாரங்களின்வழி,விஷ்ணு விபூதியணிபவர் என்று,அவர் ஒரு சிறந்த சிவபக்தர் என்றும் புலனாகிறது..

ஆகையினால்,ஜாபால உபநிஷதம் கூறுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..ஜாபால உபநிஷத்,கோமோஷோபாய :” (மோக்ஷத்துக்கு உபாயம் எது ?) எனும் ஒரு வினாவைத் தொடுத்து,அதற்கு ,”விபூதி தாரணா தேவ : ” (விபூதி தாரணமே அதற்குபாயம் ) என்று அதே பதிலைத் தருகிறது.அளவில்லா பெருமையை உடையது பஸ்மம் எனப்படும் விபூதி..ஆகையினால்,சைவர்களாகிய நாம் விபூதியை அணிய கூசக் கூடாது..

மேற்கோளுக்கு கையாளப்பட்ட நூற்கள் :

1. சமய சாதனம் மலர் 3 இதழ் 9(துறைசை ஆதீன வித்வானும் சித்தாந்த பண்டித பூஷணமும் ஆகிய. ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்கள்)

2.சுலோக பஞ்சக விஷயம் (ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்கள்)

3.சைவ பூஷண சந்திரிகை (சைவ சித்தாந்த மகா சரபம் நா.கதிரைவேற் பிள்ளையவர்கள்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s