சுப்பிரபோதம் -கிருத்துவர்களுக்கெதிரான கண்டன நூல்


சிவமயம்

யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய “சுப்பிரபோதம்”

யாழ்ப்பாணத்திலுள்ள கிறிஸ்து சமயாசாரிகளாகிய பாதிரிமார்கள், தங்களால் அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்யப்படும் “நற்கொடை” என்னும் பத்திரிகையில் “கந்தசுவாமிகோயிற் றிருவிழா” எனப் பெயர்கொண்ட ஏழாஞ் சங்கியையில், கந்தசுவாமி மெய்க்கடவுளல்லரென்றும், அவருடைய ஆலயங்களிலே செய்யப்படுந் திருவிழா முதலியவைகளினாற் பாவங்கள் விளைகின்றனவென்றும் சாதிக்கின்றார்கள். நாம் அப்பத்திரிகையைச் சித்தசமாதானத்தோடும் வாசித்து, அதிற் கொள்ளற்பாலனவற்றையும் தள்ளற் பாலனவற்றையும், அதிப் பிரபல நியாயங்களோடும், நமது சைவ சமயிகளுக்கு வெளிப்படுத்தக் கடவேம்.

பாதிரிகள், “கடவுளின் மகிமை ஓரளவிற்கு அவருடைய கிரியையினாலே பிரசன்னமாகின்றது. மனுஷனுடைய குணம் அவன் ஒழுக்கத்தினால் விளங்குகிறது. விருட்சத்தின்றன்மை கனியினால் வெளிப்படும். உயர்ந்த பொன் அதின் மாற்றினால் விளங்கும். அதுபோலவே நீங்கள் வழிபடும் கந்தசுவாமியின் தாரதம்மியத்தை அவருடைய விருத்தாந்தங்களால் கிரகிப்போம்” என்கிறார்கள். இது விவேகிகள் யாவருக்கும் ஒப்பமுடிந்த பக்ஷமன்றோ? ஆதலால், அப்பாதிரிகள் கந்தசுவாமியைக் கடவுளல்லரென்பதற்குக் கூறும் நியாயங்கள் ஒக்குமோ ஒவ்வாவோ என ஆராயாதொழிதல், மெய்க்கடவுளை உணர்ந்து வழிபட்டு முத்திபெற விரும்பும் மேன்மக்களுக்குத் தகுதியன்றே! கந்தசுவாமியிடத்திலே பதிலக்ஷணம் இன்றென்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டும் நியாயங்கள், கந்தபுராணத்திற் கூறப்படும் அவருடைய சரித்திரங்களுள், அவர் சரீரங்கொண்டு பிறந்தமையும் தெய்வயானையம்மையை விவாகஞ் செய்தமையும், கன்னிகையாகிய வள்ளியம்மையிடத்திற் சென்று அவளைத் தம்மோடு புணர்தற்குடன்படும்படி பிரார்த்தித்து, அவளுடன் படாமை கண்டு, தமது தமையனாராகிய விநாயகக் கடவுளை யழைக்க, அவர் யானைவடிவங் கொண்டு வந்தமை கண்டு அஞ்சித் தம்மிடத்தே அடைக்கலம் புகுந்த அவளைப் புணர்ந்தமையுமேயாம். இம்மூன்றுமுடையார் பதியெனப்படுதல் கூடுமோ கூடாதோவெனப் பரீக்ஷிப்போம். பிற்கூறியவாறே, ஒரு கன்னிகையிடத்திற் சென்று அவளுடைய தாய் தந்தையரது அநுமதியின்றி அவளைத் தன்னோடு புணரக் கேட்டலும், புணர்ச்சிக்குடன்படாதவளை உடன்படுத்தற்குத் தமையனை யழைத்தலும், தமையனாயினோன் நீதிகோடி அவளை அச்சுறுத்தன்முகத்தா லுடன்படுத்தலும், இடையூற்றினுக் கஞ்சித் தன்னிடத்தடைக்கலம் புகுந்தாளை ஆபத்துக் காலத்திற் புணர்தலும், பாவிகளாகிய மனிதரிடத்துக் காணப்படினும்; கல்வியறிவொழுக்கஞ் சற்றுமில்லாப் பேதைகளாலும் மிக இழிக்கப்படுவனவன்றோ? அப்படியேயாமாயில், இவைகளையுடையவரைக் கடவுளென்றேனும் கடவுளிடத்தே இவைகளுண்டென்றேனும் கொள்வது விவேகமா? இனி ஒருத்தியை விவாகஞ்செய்தல் மனிதருக்கேலுமாயினும் கடவுளுக்கு ஏலுமா? ஏலாதே! காமமுதலிய குற்றங்களையுடையவர் தம்மை வழிபடும் ஆன்மாக்களுக்கு அக்காமாதிகளை யொழித்து முத்திகொடுப்பதெப்படி? சரீர முண்டாமாயில், சர்வவியாபகத்துவ முதலிய இலக்கணங்களெல்லாம் இயையாவே! ஆதலால், பாதிரிகள் கூறியது ஒக்குமென்றே கொள்வமெனில், கூறுதும்:-

நமது பரமபதியாகிய பரமசிவன் பிரதமமகாசிருஷ்டி பாரம்பத்திலே யருளிச்செய்த முதனூல்கள் காமிகமுதல் வாதுளமிறுதியாகிய மூலாகமங்களிருபத்தெட்டுமாம். அவைகளில், பதியாவார் ஆணவம் மாயை கர்மம் என்னும் மும்மலங்களும் அநாதியேயில்லாதவரென்றும், அவருடைய சரீரம்சத்திகாரிய சரீரமன்றி மாயாகாரிய சரீரமன்றென்றும், சத்தியாவது அக்கினியிற் சூடுபோலச் சிவனுக்கு அபின்னமாகிய சாமர்த்தியமென்றும் விரித்துணர்த்தப்படும். சத்திமாகிய சாமர்த்தியமென்றும் விரித்துணர்த்தப்படும். சத்தி அருள் என்பன ஒருபொருட்சொற்கள். அவ்வாகமப் பொருள்களைச் சுருக்கியுணர்த்தும். இவ்வாறே,

“காயமோ மாயையன்று காண்பது சத்திதன்னால்”

“ஆரண மாகமங்க ளருளினா லுருவுகொண்டுகாரண னருளானாகிற் கதிப்பவ ரில்லையாகும்” – சிவஞான சித்தியார்.

எனக் கூறப்படுதல் காண்க. இவைகளை ஆராயுங்கால், நமது பரமசிவன் பதிலக்கணங்களிற் சிறிதுங் குறைவில்லாதவரென்பது ஐயந்திரிபறத் தெள்ளிதிற் றுணியப்படும். கந்தசுவாமி அச்சிவனுக்கு வேறாகாரென்பதும் அந்நூல்களாற் றெளியப்படும். மூலாகமங்களும் அவற்றின் வழிநூல் சார்புநூல்களும் இவ்வாறே சொல்லுகையால், கந்தசுவாமியை மெய்க்கடவுளல்லரென்று பாதிரிகள் கூறுவதனை நாம் ஒக்குமென்று கொள்ளுதல் கூடாது.

இதனால் கந்தபுராணகர்த்தா முதலிய சிவபுராண கர்த்தாக்களுக்குச் சைவாகமங்களே மெய்ந்நூல்களென்பது துணிவன்றெனக் கொள்வேமெனின், அது கூடாது.

“அந்தமி லாகமத்தி னரும்பத மூன்றுங்கூற” – கந்தபுராணம்: மேருப்படலம்.

“தத்த மாற்றங்க ணிறுவிய சமயிகள் பலருங் கத்து புன்சொலை வினவின ரவன்செயல் காணார் சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி யுய்த் துணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார்.” – அமைச்சியற்படலம்.

“ஆனதன் னியற்கைக ளனைத்துங் கண்ணுதல் வானவ னாகம மறையின் வாய்மையான் மேனிகழ் தொகைவகை விரிய தாகவே தானருள் புரிந்தனன் றலைவி கேட்கவே.” – உமைகயிலைநீங்குபடலம்.

“நாயகன் மொழிதரு நவையி லாகம மேயின முறைதெரி விரதனாகியே” – தக்கன் பூசைசெய்படலம்.

என சிவாகம மகிமை செப்புதலாலென்க. பிற சிவபுராணங்களுள்ளும் இவ்வாறு வருவனவற்றை யெடுத்துக் காடில் விரியுமென்றஞ்சி விடுத்தனம். இதனால் சைவாகமங்களே முத்திநெறிகாட்டும் மெய்ந்நூல்களென்பது புராண கர்த்தாக்களுக்குத் துணிவென்பது தெள்ளிதிற் பெறப்படும்.

அப்படியாயின், சிவபுராணங்கள் சைவாகமங்களோடு மறுதலைப்பட்டமை யென்னையெனில்,

“வேதக் காட்சிக்கு முபநிடத் துச்சியில் விரித்தபோதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன்மூதக் கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாயாதிக் காதியா யுயிர்க்குயி ராய் நின்ற வமலன்”

“ஞானந் தானுரு வாகிய நாயக னியல்பை யானுநீயு மாயிசைத்து மென்றா லஃதெளிதோ மோனந் தீர்கலா முனிவருந் தேறலர் முழுதுந் தானுங் காண்கில னின்னமுந் தன்பெருந் தலைமை.” – கந்தபுராணம்: அமைச்சியற்படலம்.

“உருவிலை நமக்கென வொன்று நம்வயி னருளுரு வவையெலா மென்ன” – உமைகயிலைநீங்குபடலம்.

“உருவுஞ் செய்கையு மோங்கிய பேருமுன் னருளினாற் கொண்டு” – ததீசிப்படலம்.

“நிலவு கின்றதன் னருளுருக் கொண்டு நிமலன்”

“காமரு வடிவா யெங்குங் காண்பன சந்தியங்கண்மாமய மாகிநின்றான் மன்னிய சிவனாம்” – உத்தரப்படலம்.

“அருளுரு வாகியே யகில மாவிக டருவதுங் கொள்வது மாகித் தாணுவாய்” – தக்கன் பூசைசெய்படலம்.

என பதிலக்கணங்கள் சைவாகமங்களிற் கூறியவாறே சிவபுராணங்களுள்ளும் கூறப்பட்டமை தெளிக. இனி,

“அருவமு முருவுமாகி யநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே யொருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலகமுய்ய”

“மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினா லளக்கொணாம னிறைவுடன் யாண்டுமாகி நின்றிடு நிமலமூர்த்தி யறுமுக புருவாய்த் தோன்றி யருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந் தருளினானே – திருவவதாரப்படலம்.

“ஆதலி னமது சத்தி யறுமுக னவனும் யாமும் பேதக மன்றா னம்போ பிரிவிலன் யாண்டு நின்றான்” – திருவிளையாட்டுப்படலம்

“முன்னவர்க்கு முன்னாகு வோர்தமக்கு முற்பட்டுத் தன்னை நேரிலா தீசனாந் தனிப்பெயர் தாங்கி யின்னுயிர்க் குயிரா யருவுருவமா யெவர்க்கு மன்னை தாதையா யிருந்திடும் பரமனே யவன்காண்”

“ஈசனே யவனாடலான் மதலை யாயினன்காணாசிலாவவ னறுமுகந் துண்மையா லறிநீபேசிலாங் கவன் பரனொடு பேதகனல்லன்றேசுலா வகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல்.”

“ஈட்டு மன்னுயி ரெவற்றிக்கு மிருவினைப் பயனைக்கூட்டு வானவ னாங்கவை துலையெனக் கூடின்வேட்ட மேனிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்காட்டு வான்முதற் றிறமெலா மாங்கவன் கண்டாய்.” – அவைபுகுபடலம்.

என வருஞ் செய்யுள்களால் கந்தசுவாமி சிவனுக்கு வேறல்ல ரென்று துணியப்படும்.

இப்படியாமாயின், பரமசிவன் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார் என்றும் கந்தசுவாமி தெய்வயானையம்மையை விவாகஞ்செய்து புணர்ந்தார் என்றும் வள்ளிநாயகியை இச்சித்துக் கூடினாரென்றும் கூறப்படுதலானும், புராணங்களிற் சொல்லப்பட்டவைகள் ஒன்றற்கொன்று மறுதலைப் படுகின்றனவன்றோவெனில், அன்று; பொருள் செம்பொருள் குறிப்புப்பொருள் என இருவகைப்படுமென இலக்கண நூல்கள் விதித்தலானும், சிவபுராணங்கள் சிலவிடங்களிற் குறிப்பாகப் பொருள் கொள்ளக் கிடக்குமென்பது ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சிவாநுபூதிமான்கள் இயற்றிய பல சாத்திரங்களினாலும் குருசம்பிரதாயத்தினாலும் தெள்ளிதிற் றுணியப்படுதலானும் என்க.

அற்றாயின், சிவன் பார்வதிதேவியைப் புணர்ந்தார் பிரிந்தார் என்பனவற்றிற்கும் கந்தசுவாமி தெய்வயானையம்மை வள்ளியம்மை என்னும் பெண்களிருவரைப் புணர்ந்தார் என்பதற்கும் பொருளென்னையெனிற் கூறுதும்:- ஆண் பெண் அலி என்னும் மூன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத்தையே சர்வான்மாக்களையும் தோற்றுவித்தலால் ஆண்பாற்படுத்துப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம்போல அச்சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே நிமித்தகாரணமாகிய அச்சிவம் அத்தொழிலியற்றுதற்குத் துணைக்காரணமாயிருத்தலால் பெண்பாற்படுத்து மாதாவெனவும், அச்சிவம் அச்சத்தியோடு கூடி உத்தியோகித்துச் சங்கற்பித்தலையே, அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத்தொழிலாகையால், உகந்து புணர்தலெனவும், அச்சங்கற்பம் இல்லாமையையே பிரிதல் எனவும், சொல்லியதென்றறிக.

“தேன்மலர்க் கமலத் தண்ணல் செய்தொழின் முற்று மாற்றா லானதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி” – கந்தபுராணம்: உத்தரப்படலம்.

எனக் கூறுமாற்றானு முணர்க. இனி அக்கினிசத்தி ஒன்றாய வழியும், கடப்படுவதும் விளக்கப்படுவதும் அடப்படுவதுமாகிய விஷயத்தில் சூடு விளக்கம் அடுதலாகிய தொழிலினால் பலவாதல்போல, கந்தசுவாமியினது சத்தி ஒன்றாயவழியும் கிருத்தியபேதத்தால்இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தியென மூவகைப்படும். அவற்றுள்,இச்சாசத்தியாவது ஆன்மாக்களை முத்தியிலடைவிக்கவிரும்புதல்;ஞானசத்தியாவது அவ்வான்மாக்களுடைய கர்மங்களையும் அக்கர்மங்களுக்கீடாகிய தனு கரண புவன போகங்களை உபாதானத் திரயத்தினின்றும் தோற்றுவிக்கு முறைமையையும் அறிதல்;கிரியாசத்தியாவது அவ்வான்மாக்களுக்குக் கர்மசமத்துவம் பிறப்பிக்கும் பொருட்டுக் கர்மங்களைப் பக்குவாபக்குவமறிந்து கூட்டிப் புசிப்பித்துத் தொலைப்பித்தல்; கந்தசுவாமிக்கு இம்மூன்று சத்திகளுமே புராணங்களில் முறையே வள்ளியம்மை வேலாயுதம் தெய்வயானையம்மையெனக் கூறப்பட்டன. சைவாகமங்களை ஓதியுணராதார் இவற்றினுண்மைப் பொருளை யுணராது மயங்குவர்கள். இத்தேசத்தில் தேவாலயங்களனைத்தினும் வருஷந்தோறும் கந்தபுராணம் பிரசரிக்கப்படினும் பிரசாரகர்கள் பெரும்பான்மையும் சைவாகமவுணர்ச்சி யில்லாதவராகையால், உண்மைப் பொருள் பரவாதொழிந்தது. செம்பொருளாகிய சிற்றின்பப் பொருளே உண்மைப்பொருளென்று பிரசரிக்கையால், பெருங்கேடு விளைந்தது. சில விவேகிகள் கோயிலதிகாரிகளை நோக்கி, கோயில்களிலே கந்தபுராணப் பிரசாரம் பண்ணுங்கால், செம்பொருளாகிய சிற்றின்பப் பொருளே உண்மைப் பொருளென்று பிரசரிக்கையால் சைவசமயிகளுக்குப் பெருங்கேடு விளைகின்றது. அதுகண்ட பாதிரிகள் நம்மையும் நமது சமயத்தையும் நமது கடவுளையுந் தூஷிக்கிறார்கள். ஆதலால், சைவாகமங்களை ஓதியுணர்ந்த மேன்மக்களைக் கொண்டு உண்மைப்பொருளாகிய பேரின்பப் பொருளையே பிரசரித்தல்வேண்டும் என்று போதிக்கும்பொழுது, அது அக் கோயிலதிகாரிகளுக்கு விஷமூட்டினாற்போலிருக்கின்றது. கோயிலதிகாரிகளுள்ளும் பிறருள்ளும் அநேகர், தங்களால் இச்சிக்கப்பட்ட கன்னிகைகளை அவர் தாய் தந்தையர்கள் தங்களுக்கு விவாகஞ்செய்து தருதற்கு உடன்படாதவழி, துட்டர் பலரைச் சேர்த்துக்கொண்டு இராக் காலத்திற் சென்று, அக்கன்னிகைகளைத் திருடிக்கொண்டு வந்து, பின்னர் விவாகஞ் செய்து கொள்ளுகிறார்கள். அது கண்டு தங்களைக் கண்டிப்பாரை நோக்கி, நமது கடவுளாகிய கந்தசுவாமி செய்தபடியே செய்தோம்; அது குற்றமன்று என்கிறார்கள். இப்பாதகர்கள், வள்ளியம்மை திருமணப் படலத்துக்குக் குறிப்புப்பொருளாகிய பேரின்பப்பொருளே யன்றிச் செம்பொருளாகிய சிற்றின்பப் பொருள் மெய்ப்பொருளன்றென்று யாவருமறிந்து கொள்வார்களாயின், தங்கள் குற்றத்தைக் குணமென்று பேதைகளுக்கு ஒப்பித்தல் கூடாதென்று சிந்தித்தே, வியபிசாரத்தோடு தேவநிந்தையாகிய அதிபாதகத்தையு முடையவர்களாய்ப் பிறரையும் அதிபாதகர்களாக்கி, எரிவாய் நரகத்துக்கு ஆளாகுகிறார்கள். இவர்கள் இவ்வாறு செய்தலால், அநேகர் புராணங்களுக்குச் சிற்றின்பப் பொருளே மெய்ப்பொருளென்று கருதி, காமாதி தோஷங்களையுடையவர் கடவுளாவது எப்படியென்று சைவ சமயத்தை வெறுத்து, புறச்சமயங்களிற் பிரவேசிக்கிறார்கள். ஆதலால், கோயில்களெங்கும் சைவாகமங்களை ஓதி யுணர்ந்தவர்களும் நல்லொழுக்க முள்ளவர்களுமாகிய மேன்மக்களைக்கொண்டு கந்தபுராணத்தினுண்மைப் பொருளைப் பிரசரிப்பிக்கில், கேட்போர்களுக்கு இவ்வாறு கேடுவிளைதலின்றிச் சிவபத்தியே வளரும்.

பாதிரிகள், சண்டை சலஞ்சாதித்தல் தாசி சதுர் சங்கீதம் பரஸ்திரி கூட்டம் வாத்திய முழக்கம் வாணவிளையாட்டு முதலிய வேடிக்கைகள் யாவும் திருவிழாவில் உண்டென்றும், அவை கந்தருக்கும் காமுகருக்கும் வாய்ப்பென்றும் இகழ்கின்றார்கள். நமது சைவாகமங்களிலே, ஆலயங்களைக் கட்டு முறைமையும், அவைகளிற் பிரதிட்டை பூசை முதலியவை செய்யுமுறைமையும், அவைகள்செய்தற்குரிய ஆசாரியர்களது இலக்கணமும், அவைகளில் தரிசனஞ்செய்யு முறைமையும், இவைகளில் வழுவினோர் பெறுந்தண்டமும் விரிவாக உணர்த்தப்படும். இக்காலத்திலே, கோயிலதிகாரிகள் பெரும்பான்மையும் சைவாகமவுணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவபத்தியுமில்லாதவர்களாயும், சிவத்திரவியாபகரத்திலும் வியபிசாரத்திலுமே கருத்தைச் செலுத்துவோர்களாயுமிருத்தலாலும், அக்கோயில்களுக்குப் பொருள் கொடுப்போர்களும் அவ்வாறே புண்ணிய பாவப் பகுப்புணர்ச்சியின்றி, கோயில்களில் வெகுசனங்கள்முன் தாங்கள் பெறும் உபசாரத்தையும் தாசிகள் கூட்டம் வாண விளையாட்டு முதலிய வேடிக்கைகளையுமே பொருளென மதித்தலாலும், சில கோயிலதிகாரிகள் பூசை திருவிழாக்களைக் குத்தகை கூறி விற்றலாலும், பொய் களவு வியபிசாரம் சிசுவதை வழக்கோரம்பேசல் முதலிய பெரும்பாதகங்களைச் செய்யும் பிராமணர்கள் கோயிலதிகாரிகளிடத்திலே பொருள்கொடுத்துப் பூசை திருவிழாக்களையும், அவற்றோடு சிவத்திரவியாபகாரமாகிய அதிபாதகத்தையும் விலைக்குக் கொள்ளுதலாலும், அதனால் சைவாகம வுணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவபத்தியுமுள்ள பிராமணர்கள் விலக்கப்படுதலாலும், நமது தேவாலயங்கள் சைவாகம விதிப்படி நடவாதொழிந்தன. ஐயையோ! இதனாற்றானே,

“ஆற்றரு நோய்மிகு மவனிமழை குன்றும் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்கூற்றுதைத் தான்றிருக் கோயில் ளானவைசாற்றிய பூசைக டப்பிடிற் றானே”

“முன்னவனார் கோயிற் பூசைகண் முட்டிடின் மன்னவர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றுங் கன்னங் களவு மிகுந்திடுங் காசினி யென்னரு ணந்தி யெடுத்துரைத் தானே – திருமந்திரம்.

என கூறியவாறே சைவமன்னர்களுடைய அரசு ஒழிந்தது; மழை குன்றிற்று; பஞ்சமிகுந்தது; கொள்ளை நோய்கள் பெருகுகின்றன. பாதிரிகள் இவையெல்லாமாராயாமல், நமது சைவ சமயிகள் பலராலே தேவாலயங்களில் நடத்தப்படும் தீயொழுக்கங்களைக் கண்டு சைவசமயத்தை யிகழ்தல் பேதைமையன்றோ? நூலின்வழி யொழுகாரது குற்றம் நூலின்மேலதா? இல்லை! இல்லை! நமது தேவாலயங்களில் நடப்பனவாகப் பாதிரிகள் எடுத்துக் காட்டும் தீயொழுக்கங்கள் நமது நூல்களில் விலக்கப்பட்டனவென்பது காண்பிப்பாம்.

1. ஆசாரியலக்கணங்களில்லாது பாவிகளாயிருக்கும் பிராமணர்களைக்கொண்டு கோயில்களில் பிரதிட்டை பூசை திருவிழா முதலியவை செய்விக்கில், கடவுள் அங்கே சாந்நித்தியமாய் அருள்செய்யாரென்றும், அதனால் உலகத்திற்குக் கேடு உளதாமென்றும், சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாக, இக்காலத்தார் தங்கள் தங்கள் கருத்துக் கிசைய நடந்த பிராமணர்கள் எத்துணைப் பாதகர்களாயினும், அவர்களையே மேன்மக்களென்று பிரதிட்டை பூசை திருவிழா முதலியன செய்ய நியோகிக்கிறார்கள்.

2. உருத்திரகணிகையர் வியபிசாரம் மதுமாமிசபக்ஷணம் முதலிய பாதகங்களின்றி, சிவவேடம் பூண்டு, சிவபத்தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாக இக்காலத்தார் கோயில்களெங்கும், மது மாமிச பக்ஷணமுடையவர்களாய் வரைவின்றி யாவரையும் புணரும் ஸ்திரீகளை உருத்திரகணிகையரென்று நியோகிக்கின்றார்கள்.

3. தேவாலயங்களிலே புணர்ச்சி செய்தல் பெரும் பாதகமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாக இக்காலத்தில் சில கோயில்களிலே அவைகளினதிகாரிகள் புராணங் கேட்கவும் திருவிழாத் தரிசிக்கவும் வரும் பரஸ்திரீகளிற் சிலரோடும் தாசிகளோடும், இம்மையி விகழ்ச்சிக்கும் மறுமையில் நரகவேதனைக்கும் சிறிதுமஞ்சாமல், வியபிசாரஞ் செய்கின்றார்கள்.

“மற்றொருவர் மனையானை வாஞ்சையுறப் பரிசித்தகுற்றமறக் கூரழல்வாய்ச் சூசியினாற் குத்திடுவர்முற்றுமுடற் றாமிரத்தின் முழுக்கனலு மொழுக்கிடுவர்மற்றமுள நிரயவிதத் தினுமழுத்தி வருத்துவரே.”

“மனமுருக விழிகுளிர வாஞ்சையுறப் பார்த்திடினுமுனமுரைத்த துயரவிதங் கண்டனினு முற்றுவிப்பர்நினைவழிய வலிதொலைய நிலைமையினை நீங்குதற்குத்துனியதனை முறையறவே துய்ப்பிக்குந் தூதுவரே.”

எனவும் பரஸ்திரீகளைத் தீண்டினோர் இச்சித்தோர்களுக்கும்,

“ஈசர்திரு வாலயத்து மிடர்கடியும் புனற்றடத்தும்வாசமலர்த் திருநந்த வனத்திடையு மடத்தினுளுமாசுகளைந் தருந்தியன னமதுனமற் றையதொழிலுங்கூசமறப் புரிகின்ற கொடியாரை மிகக்கொதித்தே.”

“இக்கெனவே செக்கிடையிட் டியந்திரிப்பர் யமதூதர்துக்கமுற நரகவித மெனைத்தனைத்துந் தொகுத்தொறுப்பருக்கிரவா ரழனிரயத் தொடுக்கிடுவ ரொழுகிவிழத்தக்ககதிர் மதியளவு மவரதனிற் றவிப்பாரே.” -சிவதருமோத்தரம்: சுவர்க்கநரகவியல்.

எனவும் ஆலயங்களிற் புணர்வோர்க்கும், நரகவாதனை விதித்தருளிய கந்தசுவாமிக்கு இப்பாதகங்களை உவப்பென்று வேண்டியவாறே பிதற்றும் பாதிரிகளது மடமைக்கு யாமென் செய்வோம்.

4. தேவாலயங்களில் கணிகையர்களைத் தீண்டலும், இச்சித்துப் பார்த்தலும், அவர்களோடு பேசலும், சிற்றின்பப் பாடல்களை படித்தலும், கேட்டலும், கலகஞ் செய்தலும், பாவிகளை நன்குமதித்தலும், புண்ணியவான்களை அவமதிசெய்தலும் பிறவும் பிராயச்சித்தங்களாற் றீராத பெரும் பாதகங்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாகக் கோயில்களில் பெரும்பான்மையும் இப்பாதகங்களெல்லாம் நடக்கின்றன.

நமது சைவசமயிகள் அநேகர் சைவாகமவுணர்ச்சி சிறிதுமின்மையானும், பாவத்துக்கஞ்சாமையானும், தங்களிடத்தே பொருளுமதிகாரமுமாத்திர முள்ளவழித் தங்களை யாவரும் மேன்மக்களென்று நன்கு மதித்தலானும், தாம் தாம் வேண்டியவாறே பாவங்களைச் செய்து இம்மையிற் பரசமயிகளாவிகழப்பட்டு மறுமையில் எரிவாய் நரகத்திற்கு ஆளாகின்றார்கள். ஒரோவழிச்சிலர் தங்கள்மேல் வைத்த இரக்க மிகுதியினால்,

“ஈசனே காப்பி னல்லால் யாரையும் பிறராற் றம்மா லாசறப் போற்றலாகா ததுதுணிவாகும்”

எனத் துணிந்து, தங்களைக் கண்டத்தவழி அவர்கள்மேற் பெருவைரங்கொண்டு, அவர்களை யிகழ்ந்து, அவர்களுக்கு இடையூறுசெய்யப் புகுகின்றார்கள். ஐயையோ! இது எவ்வளவு அறியாமை!

நமது சைவசமயிகள் ஒற்றுமையுடையர்களாய்த்திரண்டு, தேவாலயங்களெங்கும் சைவாகமங்களில் விதித்த இலக்கணங்களமைந்த பிராமணர்களைக்கொண்டே பிரதிட்டை பூசை திருவிழா முதலியவற்றை விதிவழுவாது இயற்று வித்தலும், வாணவிளையாட்டு முதலிய வேடிக்கைகளின் பொருட்டுப் பொருளைச் செலவழித்தலை யொழித்து, சிவபத்திமான்களும் பண்ணோடோதவல்லவர்களுமாகிய ஓதுவார்கள் பலரை நியோகித்துப் பூசாகாலத்தும் உற்சவகாலத்தும் யாவருக்கும் மனங்கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்ப ஆனந்தவருவி சொரியச் சிவன்மேல் அன்பு செனிக்கும் பொருட்டுத் தேவாரமுந் திருவாசகமுமாகிய தமிழ் வேதத்தை ஓதுவித்தலும், சைவப்பிரசாரகர்களை நியோகித்து வாரந்தோறுங் கடவுளது மகிமையையும் புண்ணிய பாவங்களையும் அவற்றின் பலங்களையும் கடவுளை வழிபடும் முறைமையையும் குறித்துச் சனங்களுக்குப் போதிப்பித்தலும் செய்வார்களாயில், அறியாமை நீங்கும்; பாவந்தேயும்; புண்ணியம் வளரும்; சிவபத்தி தழைக்கும்; மாதமும்மழை பெய்யும்; பஞ்சமொழியும்; கொள்ளைநோய் குன்றும்; உலகம் உய்யும்.

என்பேலிறாகவிறைச்சியறுத்திட்டுப் பொன்போலெரியிற்பொரியவறுப்பினும் அன்போடுருகியகங்குழைந்தார்க்கன்றி என்பொன்மணியினையெய்தவொண்ணாதே. -திருமந்திரம்.

திருச்சிற்றம்பலம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s