மதுரை வாதம்

காமகோடி ஸ்ரீ சங்கராச்சாரியார் மதுரை நகர சபையில் பேசிய செய்தி 5-9-1963 தினமணியில் வந்தது. அதில் ‘ஞான சம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டியதும் சமணர்கள் கழுவி லேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த சம்பவத்தை இன்றும் மதுரையில் உற்சவமாக கொண்டாடுகிறோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கு சிறந்ததான நம் சமயம் இப்படிப்பட்ட கொலை செய்யும் கொடூரமான செயலிலீடுபட்டதென்பது கேட்பதற்கே அனுசிதமாக இருக்கிறது’ என்கிறாரவர். அதில் ‘நம்சமயம்’ என்ற சொல் அவற்றைக் கலவடஞ் செய்வதாயிருக்கிறது.

‘சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது’ என்கிறாரவர். அப்படி யாரால் எந்நூலில் சொல்லப்படுகிறது? அவ்விவரம் அப்பேச்சிலில்லை. அச்சம்பவம் ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகளாற் பெரிய புராணத்திற் சொல்லப்படுகிறது. அச்சுவாமிகள் சோழசாம்ராஜ்யத்தின் முதன் மந்திரியா யிருந்தவர்கள்; மந்திரிக்குரிய எல்லா இயல்புகளும் நிரம்பப் பெற்றவர்கள். அது நினைவிலிருக்க வேண்டும். பெரிய புராணம் சைவ சமயப் பிராமண நூல்களி லொன்று. ஸ்ரீ ஆசாரி யாருக்கு அச்சைவ நூற்பயிற்சி அத்துணை ஆவசியக மில்லை. அதனாற் போலும் வீதியில் எவரோ சொன்னதைக் கேட்டுச் சொன்னவர் போலச் ‘சொல்லப்படுகிறது’ என்கிறாரவர்.

சமணர் கழுவில் ஏற்றப்பட்டவரே. ஏற்றுவித்தார் பாண்டிய மன்னர். அவர் ‘மந்திரியாரை நோக்கித் – துன்னிய வாதிலொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் – முன்னமே பிள்ளையார்பா லனுசித் முற்றச் செய்தார் – கொன்னுனைக் கழுவிலேற்றி முறை செய்கவென்று’ கட்டளையிட்டார். முறை – நீதி.

அக்கட்டளையை நிறைவேற்றியவர் அம் மன்னரின் முதன் மந்திரியாயிருந்த ஸ்ரீ குலச்சிறையார் அவரும் ‘பண்புடையமைச்சனா’ர் என்பதறிக. அவர் ‘பாருளோ ரறியு மாற்றாற் கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையிலேற்’ றினார்.

ஏறிய சமணர் ‘நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடி யிட்ட – வெண் பெருங்குன்றத்தெண்ணா யிரவர்’ மாத்திரமே யாவர்.

ஸ்ரீ சம்பந்தப் பெருமானார் தம் 16000 அடியார்களோடும் மதுரைக்கு வந்து மடத்தில் தங்கி யிருந்தார்கள். அவர்களையும் அத்தனை உத்தமர்களையும் கொல்ல விரும்பி அம்மடத்தில் தீ வைத்தனர் 8000 சமணர். தீ யிட்டுக் கொல்லு முயற்சி ஒரு பெருங் குற்றம். அதற்குத் தண்டனை கழுவேற்றமே என்பது அப்பாண்டியர் சமண மன்னரா யிருந்த போது அச்சமண ராச்சியத்தின் சட்டமா யிருந்தது. அவர் அச்சட்டத்தைப் பிரயோகிக்க உத்தரவிட்டார் மந்திரியார் அத்தண்டனையைக் கொடுத்து அவ்வுத்தரவை நிறை வேற்றினார். சமணர் அத்தண்டனைக்கு ஆளாகத்தானே வேண்டும். அச்சம்பவம் அவ்வளவில் அரசாங்க விஷயம். அதைச் சமய விஷயமென்பது மயக்கம். ஸ்ரீ ஆசாரியாருக்குக் கழுவேற்றப்பட்ட விஷயத்தில் அனுசிதம் என்ன இருக்கிறது? கொலைத் தண்டனை விதியாத அரசு எதுவுமில்லை.

அச் சம்பவத்துக்குச் சமயம் பற்றிய முக்கியத்துவம் வேறு. இராவணவத மின்றி இராமஜயமில்லை. கம்ஸனாதியோர்வத மின்றிக் கிருஷ்ணஜயமில்லை. இரணியவதமின்றி நரசிம்மஜயமில்லை அப்படியே ஸ்ரீ சம்பந்தப் பெருமானாரின் சைவஸ்தாபன் வெற்றியுமாம். அவ்வெற்றிதான் மதுரை முதலிய எல்லாச் சைவ ஸ்தலங்களிலும் பன்னூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உற்சவம். இராவணன், கம்ஸன், இரணியன் சார்பினருக்கு இராம, கிருஷ்ண, நரசிம்ம ஜயங்கள் ஜயங்களாகத் தோன்றா. கொலை செய்யும் கொடூரமான செயல்களாகவே தோன்றும். அங்ஙனந்தான் ஸ்ரீ சம்பந்தப் பெருமானாரின் வெற்றியும் வேற்றுச் சார்பினர், தோல்வியுற்றோரின் சார்பினருக்கு விபரீதமாகத் தோன்றும். ஸ்கந்தஷஷ்டியென்பது ஸ்கந்தனின் வெற்றி விழா. அது சைவாலாயங்களிலெல்லாம் – நடந்து வருகிறது. ஆனால் சூரசம்மாரமின்றி அவ்விழா நடப்பதில்லை. அதனால் அவ்விழாவைச் சூரசம்மாரத் திருவிழா வென்றும் உலகம் சொல்லும். அது போல் அச்சைவ ஸ்தாபன வெற்றி விழாவைக் கழுவேற்றி விழாவெனவும் உலகஞ் சொல்லலாயிற்று. அவ்வளவு தான்.

“திருமலை நாயக்கரிடத்தில் மந்திரியாயிருந்த நீல கண்ட தீட்சிதர் சம்பந்தரின் வரலாறு பற்றி ‘சிவலீலை’ என்ற நூலில் விளக்கியிருக்கிறார். அதில் சமணருக்கும் சம்பந்தருக்கும் நடந்த பந்தயத்தில் சமணர்கள் தாங்கள் தோல்வியுற்றதால் பந்தய பிரமாணப்படி தாங்கள் கொடுத்த சத்திய வாக்கை காப்பாற்றிக் கொள்ள தாங்களே கழுவிலேறி தங்களை மாய்த்துக் கொண்டனர் என்று இந்நூலில் காணப்படுகிறது. …..இந்த நிலையில் மதுரையில் ‘சமணரைக் கழுவேற்றிய லீலை’ உற்சவம் என்ற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறா ரவர். சமணர் சத்திய வாக்கினர். தம் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தாமே கழுவிலேறித் தம்மை மாய்த்துக் கொண்டனர் என்பது சமணரைப் பற்றிய புகழ்ச்சியாகும். தீட்சிதர் ‘சமண லீலை’ என்றொரு புத்தகம் எழுதியிருந்தால் அதில் வருதற்குரியது அப்புகழ். சிவலீலைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சிவபிரானை இகழ்ந்து வாதித்தவர் சமணர். தீட்சிதர் யாரை எங்கே புகழ வேண்டு மெனத் தெரிந்திலர் போலும். அப்புகழைப் பொருளாகக் கொண்டது ‘சமணர் கழுவிலேறிய லீலை’ என்ற புதுப் பெயர். அவ்விழாச் சமணர் கோவில்களில் நடைபெறுவதே நியாயம். ‘கழுவி லேற்றிய’ உற்சவம் சைவக் கோவில்களுக்குரியது; அங்கு நாளிதுவரை நடந்தும் வருகிறது. அப்பழம் பெயரைக் கேட்டு முகஞ்சுழித்தல் ஏற்றுவித்த மன்னர், ஏற்றிய மந்திரியார், அச்சம்பவத்தை விளக்கிய மற்றொரு மந்திரியார் ஆகியோர் மேல் நல்லெண்ணமில்லை யென்பதைக் காட்டுகிறது.

பன்னிரு திருமுறை சைவ சமய வரம்பு நூல். அத்தொகுதிக்குச் சில கோவில்களில் வழிபாடுகளும், விழாக்களும் நடக்கின்றன. பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறை. கழுவில் ஏற்றினார் என்ற சம்பவம் அதிலுள்ளது. அந்நூலையும் சாமானிய மாக்குகிறது அப்புதுப் பெயர்.

அவ்விரு மந்திரித் தலைவரின் திருவுள்ளத்துக்கும் மாறானது அத்தீட்சித மந்திரி தம் லீலையிற் சொன்னது. அ·தாராய்ச்யா லடிபடு மென்பதுந் காட்டப்பட்டது. ஆகலின் அது தள்ளத் தக்கதேயாம். அத்தீட்சிதர் சைவ சமயத்துக்குப் பிரமாண புருஷரல்லர். அவரைப் பற்றிக்கொண்டு சமணர் கழுவி லேறிய லீலை என அச்சைவ சமய உற்சவத்துக்குப் புதுப் பெயர் வைப்பது அவ்வுற்சவத்தின் பொருளைக் கெடுத்து அச்சமயத்தின் வரம்பை அழித்து விடும். அம்மட்டோ? துவாத சாந்த ஸ்தமெனச் சைவ நூல்களாற் போற்றப்பட்டு வருவது மதுரைமா நகர். அதனை விரைந்து நாத்திக நிலய மாமாறு செய்து இழுக்குப் படுத்தியும் விடும் அப் புதுப் பெயர்.

சைவ சமயப் பெருமக்களே! சைவ சமய ஆசாரியன்மார் ஆற்றியருளிய சைவ ஸ்தாபன வைபவ சத்திய சம்பவங்களுட் பல மிகக் கீழ்த்தரமான முறையில் விளம்பரஞ் செய்யப்படுகின்றன. அதனைச் சிறிதே கண்திறந்து பார்க்க மாட்டீர்களா?

————————————————————————————————————————————————-

சமண, பெளத்த மதத்தினர் சமூக சேவையும் மக்கள் பெற்ற பயனும்

‘சமணமும் பெளத்தமும் இந் நாட்டில் செல்வாக்குப் பெறலாயின. இவ்விரு சமயத்தவரும் பொதுமக்களுக்குக் கல்வியும் மருத்துவமும் உதவினர். எல்லா மக்களையும் ஒரு தாயீன்ற பிள்ளைகளாகக் கருதினர். தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகளால் அல்லலுற்ற மக்கள் பலர், இச் சமயத்தவர் புரிந்த கல்வி மருத்துவ உதவிகளைப் பாராட்டி இச்சமயங்களைத் தழுவினர். இத்தழுவலால், சைவமும் வைணவமும் வலிமையும் செல்வாக்கும் குறைந்து காணப்பட்டன’ (28-6-1955 தமிழ்நாடு)

என்கிறார் நவீனர். சமணமும் பெளத்தமும் நாத்திகங்கள். அவை பொதுமக்களுக்குச் சேவை செய்தனவா? சரி. சைவத்தை விட்ட திருநாவுக்கரசர் சமணரே யானார். பெளத்தராகவில்லை. ஏன்? அம்மட்டோ? அவர் பெளத்தரை வாதில் வெல்லவுஞ் செய்தார். அது வேண்டுமா? அவ்வாதில் அவர் தாபித்த சமணப் பகுதி எது? அவ்விரண்டுமே அவ்வச் சமயங்களின் அடிப்படை யென்பதை நவீனரறிக. சமூக சேவை அவ் வாத விஷயங்களில் சேராது. அது எல்லாச் சமயங்களுக்கும் பொது; தமிழகத்தில் தொன்று தொட்டு எல்லாச் சமயத்தாருஞ் செய்து வருவது. ஒன்றிரண்டு சமயங்களே அதைத் தம் தருமமாகக் கொண்டிருந்தன வெனக் கூறுவது அறியாமை. திருநாவுக்கரசர் மாபெருஞ் செல்வர். பெரிய புராணம் ‘மாசின் மன’, ‘காவளர்த்தும்’ எனத் தொடங்கும் பாடல்களால் அவர் செய்த நலன்களைப் புகழ்ந்தது. அப்போது அவர் சமண் சமயம் புக வில்லை. ஆகலின் சமணர் செய்த சமூக சேவையில் மதி மயங்கி அச்சமயத்துக்கு அவ்வரசர் போனாரென்பது பொய். நம்பர் அருளாமையினால் அச் சமயத்தின் அடிப்படையே மேலானதெனக் கண்டு அச்சமயத்திற் சென்றாரவர். அப்படிச் செல்பவரே அச் சமயத்தின் மெய்ப் பயனைப் பெறுவார்.

‘சமயத்துறையின் அடிப்படை உண்மைகளை நன்கு கற்று, உணர்ந்து, செயற்படுத்தினால் தான் அந்நிலையை அடைய முடியும்’ (29-10-1955 தமிழ்நாடு)

என்கிறார் நவீனரும். அதனை விட்டுச் சோறு, துணி, மருந்து, கல்வி வாழ்க்கை யொப்பந்தம் (கலியாண மன்று) முதலிய உடற் சுகத்துக் காசைப்பட்டுச் சமயம் மாறுவது மானங்கெட்ட செயல். உயிர் நலக் கருதுபவன் தன்னுயிர் போவதாயினும் அது செய்யமாட்டான். ஒவ்வொரு சமயத்து மக்களுள்ளும் பிச்சைக்காரர், அங்கஹீனர், பிணியர், மூடர் முதலியோர் பல்லாயிரவ ருளர். நவீனர் கூறும் சமூகசேவை இலெளகீகம். அதைச் செய்து, ஒரு சமயத்தார் இன்னொரு சமயத்தவரைத் தம் சமயத்துக் கிழுக்கவும், அவ்வந்நிய சமயத்தார் தம் சமயத்தவரை அச் சமயத்துக்குப் போகாதபடி தடுத்து நிறுத்தவும் முற்படுதல் வெட்கக் கேடான காரியம். அம்முறையை மெச்சுபவரும் வெட்கங் கெட்டவரே. அது சேவையன்று, இலஞ்ச மாகும். அவ்விருதிறச் சமயத்தவரும் அச்சேவையால் பிறிதொரு நோக்கத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர் நேர்மையான சேவகரல்லர்; கள்ள வுள்ளத்தினரே. சைவசமயம் அப்படி வளர விரும்பவில்லை. அதன் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய பிரசாரங்களே அதன் வளர்ச்சிக்குரிய நேரிய வாயில், சம்பந்தரும், வாகீசரும், வாசகரும் சைவத்தைப் பாடசாலை; மருத்துவ நிலயம், பிரசவ விடுதி, அநாதை யாசிரமம் முதலியன அமைத்துச் சமூக சேவை செய்து மீட்கவில்லை, அந்நேரிய வாயிலொன்றானே மீட்டனர். சமூக சேவையால் வளர்ந்தன எனப்பட்ட சமண பெளத்தங்கள் தொலைந்தன.

இதன் மூலம் பல பொய்களை அவிழ்த்து விடும் கூட்டத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது.

வாய்மையே வெல்லும்!

“சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக்
கைவந் திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்
பொய் வந் துழலும் சமய நெறி புகுத வேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s