காமதகனர்


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

காமதகனர்

“பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே”

– சேரமான் பெருமாள் நாயனார்

உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும்.

காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத
காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும்
காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே
காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும்.

என்று காமத்தின் தன்மையைத் திருவிளையாடற்புராணம் தொகுத்துரைக்கின்றது.

“மணிநகையாரே தெய்வம், வாக்கு உபதேசம், கொங்கைத்
துணைகுரு பீடம், பாதத்துணை வருடுவதே பூசை
அணைவது முத்தி… காமன் ஆகமங்கள் என்றான்”

என்றபடி காமன் ஆகமங்களில் வல்லவர்களே உலகில் அதிகம். காமனை வெல்லுவதென்பது எளிதான காரியமல்லவே. காமத்தையும் காலத்தையும் வெல்லும் ஆற்றல் நாம் பெறவேண்டுமாயின் அவற்றை வென்ற சிவபெருமானுடைய பெருங்கருணைக்கு ஆளாக வேண்டும்.

காமதகனம் பற்றி வடமொழி லிங்கபுராணம் விரிவாகப் பேசுகின்றது.

சூரபன்மாதியரின் கொடுமையால் தீமையின் வலிமை மிகுந்து உலகம் அல்லலுற்றது. அவுணர்களை அழிக்க இறைவனைப் பணிந்து பரவினர் நல்லோர். கயிலையில் மோன மூர்த்தியாக – யோகியாக – தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து நால்வர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றி சொல்லாமற் சொல்லும் குருமூர்த்தியாக எழுந்திருளியிருந்தார் சிவபெருமான். இமவான் மகளாக அவதரித்து உமையம்மையார் பெருமானைத் திருமணம் புரிந்து கொள்ளக் கடுந்தவம் இயற்றி வந்தாள். இவர்கள் திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றி அசுரர்களை அழித்தாக வேண்டும். யோகியாய் விளங்கும் இறைவன் போகியாக மாற வேண்டும். அவருக்கு உமையம்மைபால் மனம் செல்ல வேண்டும். ஆம் அவருக்கு காமம் வரவேண்டும்! என் செய்வது விண்ணோர் கூடினர். இந்திரன் காமனை அழைத்துச் சிவபெருமான் மீது மலரம்பு தொடுக்கப் பணித்தனன். மன்மதன் அஞ்சினான். இந்திரனால் அழிவதை விடச் சிவபெருமானால் உய்வடைவது உயர்வு தரும் எனத் துணிந்தான். சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். சிவபெருமான் மோனங்கலைந்து கண் திறந்தார். நெற்றிக்கண் வீழ்த்தது. மன்மதன் சாம்பலானான். காமன் மலர்களைத் தானே சிவன்மீது செலுத்தினான்! கல்லெறிந்த சாக்கியருக்குக் கதியளித்த கண்ணுதற் கடவுள் மலர் எறிந்த மன்மதனை மாய்த்துவிட்டார்! என்ன நியாயம்! ஆம், மன்மதன் மலர் எய்திய போதிலும் அவன் உள்ளம் பக்தியால் அதனைச் செய்யவில்லை. சக்கியர் கல்லெறிந்த போதிலும் அவர் உள்ளம் சிவபெருமான் மீது கனிந்து பக்தி மிகுந்திருந்தது. செயலை விட நோக்கம் தான் முக்கியம். ஆதலால் தான் மன்மதன் கதி அவ்வாறாயிற்று. மன்மதன் பாணம் மாதேவனை மயக்கிவிடவில்லை என்பது ஈண்டு கருதத்தக்கது. தனது அமர காதலனை மன்மதன் மாய்ந்தது கண்டு இரதிதேவி புலம்பினாள். இறைவனைப் பலவாறு துதித்துப் பரவினாள். தனக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டினாள். சிவபெருமானும் அவள் நிலைக்கு இரங்கி, அருவமாய் தன் தொழில் செய்யுமாறு மன்மதனைப் பணித்து உயிரளித்து அருள்புரிந்தார்.

“எரிபுனை நமது நோக்கால் இறந்தநின் உடலம் நீறாய்
விரைவொடு போயிற்றன்றே வேண்டினள் இரதியன்னாட்
குருவமாய் இருத்தியேனை உம்பரோ டிம்பர்க்கெல்லாம்
அருவினை யாகியுன்றன் அரசியல் புரிதி என்றான்”

என்று இந்நிகழ்ச்சியைக் கந்தபுராணம் பேசும். இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனைக் கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யும்னனாகத் திருமால் பெற்றெடுப்பார் என்றருள் புரிந்தார் சிவபெருமான் என வடமொழிப்புராணம் பேசும். காம பாணத்தை விட உமையின் தவமே இறைவனது மோனங்கலையக் காரணமாயிற்று. பார்வதி தன்தவத்தினாலேயே சிவபெருமானை அடையப் பெற்றார் என்று குமாரசம்பவம் விளக்குகின்றது. சிவபெருமான் உமையை மணந்தருளினார்.

எந்த நெற்றிக் கண்ணிலிருந்து காமனை எரித்த நெருப்புத் தோன்றியதோ, அதே நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி அறுமுகச் செவ்வேளாகி, பார்வதி பாலனாகி – பூவுலகில் அசுரர்களை மாய்த்து அமரர் இடரும் அவுணர் உயிரும் அழிய அருள் புரிந்ததைக் கந்தபுராணம் விரிவாகக் கூறும்.

காமனை எரித்த இறைவனைக் காமதகன மூர்த்தி என்று போற்றுகிறோம். இதில் சில தத்துவங்கள் பொதிந்துள்ளன. இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில் உலகுயிர்கள் செயலிழந்து கிடந்தன என்னும்போது அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மை புலப்படும். இறைவி மலைமகளாய் அவதரித்துத் தவம் இயற்றினாள் இறைவனை மணக்க, இறைவனோ தட்சிணாமூர்த்தி ஆக யோக நிலையில் இருந்தார்.

ஒரு சிறந்த கணவனை அடையப் பெண்ணும்

ஒரு சிறந்த மனைவியைப் பெற ஆணும் அருந்தவம் இயற்ற வேண்டும்.

தவத்தினாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும் மனைவிக்குத் தகுந்த கணவனும் வாய்க்கும் என்ற தத்துவமும் இதில் வெளிப்படுகின்றது. காமதகனம் நடைபெற்ற பிறகே குமாரசம்பவம் ஏற்பட்டது என்பது காமம் நீங்கித் த்வயோகத்தால் பிள்ளை பெறுவதே சிறப்புடையது என்பதனைப் புலப்படுத்தும்.

திருச்சிற்றம்பலம்.

Leave a comment