சைவபூஷண சந்திரிகை

சிவமயம்

சைவபூஷண சந்திரிகை

————–

யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி
சைவசித்தாந்த மகாசரபம்
நா.கதிரைவேற் பிள்ளை
இயற்றியது

————–

இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட

நூல்கள்

1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருப்பல்லாண்டு
4. பஸ்மசாபாலவுபநிடதம்
5. பராசரஸ்மிருதி
6. சைவபுராணம்
7. இலிங்கபுராணம்
8. கூர்மபுராணம்
9. கந்தபுராணம்
10. பெரிய புராணம்
11. தணிகைப்புராணம்
12. பேரூர்ப்புராணம்
13. திருவிரிஞ்சைப்புராணம்
14. சிவஞானபோதம்
15. சிந்தாந்தசிகாமணி
16. சூதசங்கிதை
17. அத்தியாத்ம இராமாயணம்
18. அத்தியாத்ம இராமாயணம்
19. மகாபாரதம்
20. சூரசங்கிதை
21. மானவசங்கிதை
22. உபதேசகாண்டம்
23. பிரமோத்தரகாண்டம்
24. சிவதருமோத்தரம்
25. வாயுசங்கிதை
26. அகத்திய பக்தவிலாசம்
27. சைவசமயநெறி
28. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்
29. திருப்போரூர்ச் சந்நிதி முறை
30. உருத்திராக்க விசிட்டம்
31. சடகோபர் திருவாய்மொழி
32. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
33. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

——————————————————————————

பதிப்புரை

சைவபூஷண சந்திரிகை என்னும் இச்சீரியநூல் 57 ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் நீதிபதியாக நிலவிய வே. மாசிலாமணிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி மாயாவாததும்ச கோளரி சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களால் எழுதி 1900-ம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இதன்கண் சைவத்தின் மேன்மையும் அதன் சாதனங்களாகிய விபூதி, உருத்திராக்கம், பஞ்சாக்ஷரம் தின அநுஷ்டானம் முதலியவற்றின் சிறப்புகளையும் விளங்கும்படி எழுதியிருப்பது மிகவும் போற்றத்தக்கது. இந்நூல் தோன்றியபோது அக்காலத்துப் பெரியோர்கள் இதனைப்போற்றிச் சிறப்பித்தனர். இத்தகைய அருமையான நூல் இப்போது மறைந்து விடாதபடி அச்சிட நேர்ந்தது. ஆசிரியர் நாவலரின் மாணவர் வழிவந்தவராகையால் அவர்களுடைய அச்சுக்கூடப் பிரசுரமாக வரலாயிற்று. இதனைச் சிவநேயர்கள் ஆதரிப்பாராக.

ச. பொன்னுஸ்வாமி,
தருமபரிபாலகர்.

——————————————————————————–

சிறப்புக் கவி

ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர் அவர்களின் மாணாக்கரும்
இந்நூலாசிரியரின்
ஆசிரியர்களுள் ஒருவருமாகிய
யாழ்ப்பாணத்து நல்லூர்
வித்துவசிரோமணி
க.தியாகராசபிள்ளை அவர்கள்

இயற்றியன.

பொன்பணியும் பொறிப்பணியு மணிப்பணியு
மிரும்பணியிற் பொறுத்த மாயன்
வன்பணியு மறைப்பணியு மறைபணியு
முணராத மதியத் தேவ
னென்பணியு மிரும்பணியும் பெரும்பணியிற்
கொளுமுதல்வ னெந்தை யேழை
யென்பணியு மிடத்தணியுங் கரும்பணியின்
மொழிபணியு மேன்ற நாதன். (1)

வருமீற்றி னொருநுதலி னெரிநீற்றி
னுளதாகி வைப்பார் வைகுங்
கருநீற்றவ் வருளூற்றவ் விழிபூற்றின்
வயிற்றோன்றிக் கருணை மேனி
யுருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின்
விழிமணியி னுண்மை யோர்ந்து
வுருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும்
பெருங்கருணை யுலகத் தாக. (2)

விண்மணியிற் புகழணிமன் னரசணியிற்
சிறக்குமணி மெய்மை சான்ற
கண்மணியிற் றிருநீற்றிற் களிக்குமணி
குவளையணி களமராமெங்
கண்மனிவேற் பிள்ளைதவத் தணுமாசி
லாமணியுங் கருதிக் கேட்ப
வண்மணிசை வப்பெரியோ ரணியுமணி
நிலவவுஞற் றிட்டான் மாதோ.

அன்னவன்யா ரெனினம்மாட் டடைந்துபெருங்
க்லைபலவு மறிந்தோன் மெய்கண்
டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான
போதமுத லறிவு நூல்கண்
முன்னவன்பிற் றெரிந்துபோ திப்பவனஞ்
சிவகுகனை முன்னுந் தாசன்
நன்னமா யாவாத கோளரிநங்
கதிரைவே னாவல் லோனே.

——————————————————————————–

சிவமயம்
சைவபூஷண சந்திரிகை

காப்பு

வேத சிவாகமத்தான் மெய்ச்சமய மென்றுதெளி
போதசிவ சித்தாந்த பூடணவொண் மைக்கருளு
மீரா யிரமருப்பி யேறிவிளை யாட்டருளு
மோரா யிரமருப்பி யோர்.

கடவுள் வணக்கம்

பரமசிவன்

சிவஞானத் தவர்க்கருளும் பதியாவ னாகமத்துச் செல்வன் யாவன்
தவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார் தாணு வாகி
அவஞானத் தவர்க்கறியா வண்ணலெவன் றிருநீறு மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந் தலைமேற் கொள்வாம்.

வழிபடு கடவுள்

ஒருமானை வலத்தானை யொருவானை யிடத்தானை யுலகம் போற்ற
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த வலத்தான் றன்னைப்
பெருமானை யெனதுளக்காட்டமர்வானை யெமக்கருளைப் பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சந் நிதியானைச் சாவணனைச் சார்ந்து வாழ்வாம்.

விபூதி

சித்தாந்த மெய்ச்சமயச் சிவநெறிக்கு வித்தாகித் திருமாலாதி
பெத்தாந்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு பெருக்கி மும்மைக்
கொத்தாந்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க் கொண்டார்க் குற்ற
பித்தாந்த மதப்பிணியைத் தபுமருந்தாந் திருநீற்றைப் பேணியுய்வாம்

உருத்திராக்கம்

நிலைகலங்கா தெங்குநிறை யருட்கடலின் வயிற்றோன்றி நிகரின் ஞானத்
தலையொளிகான் றியாம்பிரம மெனத்தடுமா றும்மிருள்கடங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன விழைவி னீந்து
மலைமகணா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு மணியைத் தாழ்வாம்.

——————————————————————————–

நூல்

சைவபூஷணம் விபூதி ருத்திராக்கங்களே :

பரமசிவ னமலன் பத்தர்க்குச் சின்ன
முருவுடலிற் கண்டியு நீறும்.

சிவபெருமான் பிறப்பு இறப்பு இன்றி என்றும் உள்ளவர். எங்கும் நிறைந்தவர்; எல்லாம் செய்யவல்லவர்; இயல்பாகவே யெல்லாம் அறிபவர். தமது அநுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர்; தம்வயமுடையவர்; ஆன்மாக்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக வுடையவர்; இவ்விலக்கணங்களை யுடையவர் அவர் ஒருவரே யன்றி வேறில்லை. ஆதலால் அவரே பசுபதி என்று மெய்யன்புடன் வழிபடுகின்றனர் சைவர் அல்லது சிவனடியார் என்று கூறப்படுபவர். ஒருவனையே தனக்கு நாயகனாகக் கொண்ட பதிவிரதையானவள் தன்னாபகனாற் கொடுக்கப்பட்ட திருமங்கிலியம் மோதிரம் முதலியவற்றைத் தன் கற்புநிலைக்குச் சாதனமாகத் தரிந்தொழுகுவள். அதுபோலச் சிவபெருமானையே பரமபதி யெனக்கொண்டு வழிபடும் ஒவ்வொருவருக்குந் தத்தம் அன்பினிலைக்கு அடையாளமாகத் தரிக்கத் தக்கன சிவசின்னங்களாகிய விபூதி உருத்திராக்ஷம் என்னும் இரண்டுமேயாம். எவள் திருமங்கிலிய முதலிய அடையாளங்களைத் தரித்தற்குக் கூசுகின்றனளோ அவள் குலமகளெனப்படான். மற்றைய ஆபரணங்க ளெல்லாவற்றைபுந் துறந்திருந்தாலுந் திருமங்கிலியத்தைக் குலமகளிர் துறந்திருக்கார். அதுபோல எவ்வணிகளையுந் தரியாமலிருந்தாலுஞ் சிவசின்னங்களைச் சிவனடியவர் (சைவசமயிகள்) என்றுள்ளார் தரியாதிருத்தலாகாவாம். ஆதலால் சைவசமயிகட்கு விபூதி உருத்திராக்க தாரணம் இன்றியமையாததேயாம்.

விபூதிருத்திராக்கஞ் சிவவடிவமே :

விபூதி உருத்திராக்கங்கள் சிவசின்ன மெனவும், திருவேடம் எனவும்படும்.

“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயனுந் தானு மரனனெத் தொழுமே.”

எனஞ் சிவஞானபோதஞ் செப்புதலால், அவை யிரண்டுஞ் சிவபெருமானென்றே கொள்ளற்குரியனவாம். காமக் கிழத்தியரது வடிவிலே காணப்படும் ஆடை, சாந்து, அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர் வுறுவாரைக் காட்சிமாத்திரையானே வசீகரித்து இன்பஞ் செய்தல்பற்றிச் சிவபத்தி யுடையார்க்கு இவை திருவேடமாகக் கொள்ளப்பட்டனவாம்.

சேலுங்கயலுந்திளைக்குங் கண்ணாரிளங்கொங்கையிற் செங்குங்குமம்
போலும்பொடியணிமார்பிலங்குமென்றுபுண்ணியர்போற்றிசைப்ப.
– திருப்பல்லாண்டு.

அக்கினி சிவபெருமானது வடிவமாகும். சந்திரன் யாகவடிவாய் விளங்குவன். ஆதலால் அதனை அமிர்தமென்று கூறுவர் பெரியர். இவ்வுலகங்கள் யாவும் அக்கினியாற் சுடப்பாடு வெந்து சாம்பரானமையாற்றான் பரிசுத்தமடைந்தது. அக்கினியினிடத்து அவிபெய்து உயர்வை யடைந்தவர்கள் விபூதி தரித்தலாகிய பாசுபத விரதத்தை யநுட்டித்தனர். இது பற்றியன்றோ தென்புலத்தாரும் அக்கினியை யுண்பார்கள். தேவர்கள் சந்திரகலையை அமிர்தமாகப் பானம்பண்ணி வருகின்றனர். ஆதலால் உலகம் அக்கினி சொரூபமே. அவ்வக்கினி சிவபெருமானது திவ்வியவடிவேயாம். சந்திரன் சிவசத்தி வடிவாகும். இதனாற்றான் பரிசுத்தம் வாய்ந்த சிவாக்கினியினிடத்தினின்றுந் தோன்றிய விபூதியைச் சிவபெருமான் தமது திருமேனிக்கண் தரித்தனர். ஆதலின் அது பரிசுத்தமுள்ளதும், அதனைச் செய்வதும், அமிர்தம்போ லெவரானுங் கைக்கொள்ளப்படுவதும், புத்தி முத்திகளைக் கொடுப்பதுமாகும்.

ஆதலாலுலகமழலினல்வடிவேயவ்வழலெமதுருவாமாற்
நோதறுசேர்மன்றேவிநல்வடிவாங்கொழுஞ்சுடரழலிடைப்பட்ட
வேதமினீற்றையெமதுமெய்யணிவோ மெறிதிரைக்கருங்கடலுடுத்த
தீதிலாவுலகநீற்றினையணிந்தேதீர்த்திடுந்தீவினைச்சிமிழ்ப்பே.
-இலிங்கப்புராணம்.

தேவாதியருஞ் சிவசின்ன தாரணர் :

விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.

மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்
கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்
சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறு
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.
-சூதசங்கிதை.

விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே :

சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், கர்த்தற் கடவுளராய் விளங்கும் எம்பெருமாளுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர். “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ¡ பரணா: – தக்ஷ¢ணாயாந் திகி விஷ்ணு” எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி §க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், “சிவேநவிஷ்ணு நாசைவ” எனவரும் சூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து “த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் – பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்” என்னும் இராமாயண சுலோகத்தானும், “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷ¡த் ருத்ர மிவாபரணம் – பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா” என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், “கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் – புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி” எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், “சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்” எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.

விபூதி வரலாறு :

திருவருளுருவாகிய உமாதேவியார் தமக்குப் பத்தினியாகத் தோன்ற, ஆணவமலத்தை நீக்கியருளும் வேதியராகிய சிவபெருமான் பிரளய வெள்ளமே நீராகவும், அளவில்லாத அண்டங்களே மண்டபங்களாகவும், சமுத்திரத்தாற் சூழப்பட்ட பூவுலகமே வேதிகையாகவும், விஷ்ணு, பிரமன், அரி முதலிய தேவர்கள் யாவரும் அவிப்பாகமாகவும், உயிர்களே பசுக்களாகவுங் கொண்டருளித் தமது நெற்றியாகிய குண்டக்கணுள்ள அக்கினிக் கண்ணினின்றும் அக்கினியை மூட்டி யாகஞ் செய்தனர். அந்த யாகத்தினின்றுந் தோன்றிய வெண்திருநீற்றை அகங்கார மமகாரமாகிய அகப்புறப் பற்றுக்களழியுமாறு விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களுஞ் சரீரத்தில் தரிக்குமாறு அமைத்தனர் என நூல்கள் கூறாநிற்கும்.

பூதியா முறைமையும் புகலக் கேட்டியாற்
கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
வேதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.

ஊழியே பாணிக ளுலப்பி லண்டமே
கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
யாழிசூழ் புலியலி யரிமெய் யாதியா
வாழிமா மெய்மைவண் பசுக்க ளாலியா.

நெற்றியங் குண்டத்து நெடித டங்கிய
பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினான்.

-தணிகைப் புராணம்

விபூதி தாரண பலம் :

விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது. காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர். அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம். அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.

பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினா
மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
தகைநல மளிப்பது தவள நீறரோ.

– தணிகைப் புராணம்

விபூதி தரிக்குங் காலங்களில் ஓதவேண்டிய திருநீற்றுப் பதிகத்தைக் காட்டுவாம். அ·து திருவருண்ஞானச் செல்வராய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராற் கூன்பாண்டியனுடைய வெப்புநோயைத் தீர்த்தற்காகவும், எம்மனோரது பிறவித் துன்பங்களை வேரறக் களைதற்காகவும் ஓதியருளப்பட்டது. ஆதலால் தரிக்குங் காலத்து ஒவ்வொருவரும் அதனை மெய்யன்புடன் ஓதக்கடவர்.

திருநீற்றுப் பதிகம்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்.

மந்திரமாவதுநீறு வான்வர்மேலதுநீறு
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுநீறு
தந்திரமாவதுநீறு சமயத்திலுள்ளதுநீறு
செந்துவர்வாயுமைபங்கன் றிருவாலவாயான்றிருநீறே. (1)

வேதத்திலுள்ளதுநீறு வெந்துயர்தீர்ப்பதுநீறு
போதந்தருவதுநீறு புன்மைதவிர்ப்பதுநீறு
வோதத்தகுவதுநீறு வுண்மையிலுள்ளதுநீறு
சீதப்புனல்வயல்சூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (2)

முத்திதருவதுநீறு முனிவரணிவதுநீறு
சத்தியமாவதுநீறு தக்கோர்புகழ்வதுநீறு
பத்திதருவதுநீறு பாவலினியதுநீறு
சித்திதருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே` (3)

காணவினியதுநீறு கவினைத்தருவதுநீறு
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறுதிரு வாலவாயான்றிருநீறே (4)

பூசவினியதுநீறு புண்ணியமாவதுநீறு
பேசவினியதுநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகொடுப்பதுநீறு வந்தமதாவதுநீறு
தேசம்புகழ்வதுநீறு திருவாலவாயான்றிருநீறே. (5)

அருத்தமதாவதுநீறு வவலமறுப்பதுநீறு
வருத்தந்தணிப்பதுநீறு வானமளிப்பதுநீறு
பொருத்தமாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (6)

எயிலதுவட்டதுநீறு லிருமைக்குமுள்ளதுநீறு
பயிலப்படுவதுநீறு பாக்கியமாவதுநீறு
துயிலைத்தடுப்பதுநீறு சுத்தமதாவதுநீறு
வயிலைப்பொலிதருசூலத் தாலவாயான்றிருநீறே. (7)

இராவணன்மேலதுநீறு வெண்ணத்தகுவதுநீறு
பராவணமாவதுநீறு பாவமறுப்பதுநீறு
தராவணமாவதுநீறு தத்துவமாவதுநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே (8)

மாலொடயனறியாத வண்ணமுமுள்ளதுநீறு
மேலுறைதேவர்கடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவதுநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே (9)

குண்டிகைக்கையர்களோடு சாக்கியர்கூட்டமுங்கூடக்
கண்டிகைப்பிப்பதுநீறு கருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகையதுநீறு
வண்டத்தவர்பணிந்தேத்து மாலவாயான்றிருநீறே. (10)

ஆற்றலடல்விடையேறு மாலவாயான்றிருநீற்றைப்
போற்றிப்புகலிநிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித்தென்னனுடலுற்ற தீப்பிணியாயினதீரச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவர்நல்லவர்தாமே. (11)

திருச்சிற்றம்பலம்

——————————————————————————–

(1) மந்திரம் – மந் – நினைப்பவனை, திர – காப்பது, நீறு – பாவங்களையெல்லாம் நீறாக்குவது. தந்திரம் – சிவாகமம். செந்துவர் – செந்நிறமுடைய பலளம்.

(2) போதம் – ஞானத்தெளிவு

(3) சித்தி – அணிமா முதலிய அட்டமாசித்திகள்.

(6) அருத்தம் – மெய்ப்பொருள்.

(7) எயிலது – எயில் – மும்மதில். அது – பகுதிப்பொருள் விகுதி. அட்டது – அழித்தது. அயில் – கூர்மை

(8) இராவணன் – அழுதலைச் செய்தவன், இலங்கையரசன். பரா – பரையின், வணம் – வடிவம்.

(10) குண்டிகைக்கையர் – சமணர், சாக்கியர் – புத்தர், கண்திகைப்பிப்பது என்க.

(11) அடல் – வெற்றி. புகலி – சீகாழி. தென்னன் – கூன்பாண்டியன்.

——————————————————————————–

விபூதி வகை :

விபூதி பற்பம், மகாபற்பம் என இருவகைப்படும். அவற்றுள் மகாபற்ப மென்பது அத்துவித ஞானத்தைக் கொடுத்துச் சிவசாயுச்சிய முத்தியைக் கொடுத்தலால் அ·து சிவபெருமானேயாம். அந்த மகாபற்பம் விளங்கப் பெற்றவருஞ் சிவபெருமானேயாவர். மற்றைய பற்பம் என்பது திருநீறாகும். அது சிரெளதம், சமார்த்தம், இலெளகிகம் என மூன்று பகுப்பினை யுடைத்து. இவற்றுள் முன்னைய யிரண்டும் பிராமணர்க்கும், பின்னையது மற்றையோர்க்கும் ஆகும் என நூல்கள் கூறும்.

முழுஞான மினிதளித்து மகாபாவ முருக்குதலான்
மழுமானங் கைப்பரனே மகாபற்ப மெனப்படுவான்.

துரிசறுநன் மகாபற்ப சொரூபம்விளங் குறப்பெற்றோ
னரியசிவ நெனயாரு மறைவர்மறை முதலான
பெரியநூ லோதுபயன் பிறங்குறும காபற்ப
முரியதிரு ஞானமடை முதலாகு முணர்வுடையீர்

சீர்மருவு பற்பந்தான் சிரெளதமே சமார்த்தமே
யேர்மருவி லவுகிகமே யெனமூன்று வகையிவற்றுட்
பார்மருவு முன்னிரண்டும் பார்ப்பார்க்கும் பின்னொன்று
பேர்மருவு மற்றையர்க்கு மாகுமெனப் பேசுவரால்.

– சூதசங்கிதை – எக்கியவைபவகாண்டம்.

>
இவையன்றி வைதிக விபூதி, சைவ விபூதி எனத் திருநீறு இருவகைப்படும். அவற்றுள் வைதிக விபூதியாவது வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களிற் பொடிபட்ட நீறாகும். அது புராதனி, சத்தியோசாதை என இருவகைப்படும். அவற்றுள் புராதனியாவது பிரமதேவரது ஓமகுண்டத்தில் விளைந்தது. சத்தியோசாதையாவது வேதியர்கள் வளர்க்கும் யாகங்களில் உண்டாயதாம். அவை புத்தியை மாத்திரம் அளிக்கும் மற்றைய சைவ விபூதியாவது இருவினையொப்பு மலபரிபாகமுற்ற சிவசத்திநிபாதர்க்கு உரியதாய்ச் சிவாகம விதிப்படி சீவதீ¨க்ஷ செய்யப்பட்ட அக்கினியிற் பொடிபட்டநீறாம். அது புத்தியையலாமல் முத்தியுங் கொடுக்கும். அது கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நான்கு வகைப்படும். அவற்றை மேற் கூறுதும்.

உலகருக் குரிய மறைவழி வேட்கு மோங்கிய விரசையிற்பொடித்த
விலகுவெண் ணீறு வைதிக பூதி யின்னது புத்தியே யளிக்கு
மலமறு சத்தி பதிந்தவர்க் குரித்தாய் வயங்குமா கமவழி தீக்கை
நிலவுசெங்கனவிற்பொடித்தவெண்பூதிநிகரிலாச்சைவவெண்ணீறு

முத்தியேயன்றிப்புத்தியும்வெ·கின்முகிழ்க்குமாற்சைவவான்பூதி
அத்தகு சைவ மூன்றதாங் கற்ப மநுகற்ப முபகற்ப மென்ன.

-தணிகைப்புராணம்

விபூதி இலக்கணம் :

விபூதியாவது நல்லிலக்கணமுடைய பசுவின் சாணததைக் கொள்ளவேண்டிய முறைப்படி கொண்டு, மந்திரங்களாலுருட்டி அக்கினியினாலே தகிப்பித்த திருநீறாம்.

விபூதியின் பெயரும் காரணமும் :

விபூதி, நீறு, பசுமம் (பற்பம்) பசிதம், சாரம், இர¨க்ஷ எனப் பெயர்பெறும். வி=மேலான, பூதி = ஐசுவரியம், எனவே, தன்னைத்தரித்தவர்களுக்கு அழிதலில்லாத மேலாய ஐசுவரியத்தைக் கொடுத்தலால் விபூதியெனப் பெயர் பெற்றது. ஈண்டு ஐசுவரிய மென்பது முத்திப் பேற்றினையாம். அதுவே மேலான ஐசுவரியமெனப்படும். இங்ஙனமாகவும் இராமாநுசர் முதலிய பாஞ்சராத்திர மதத்தர்கள் செல்வமெனப் பொருள்கொண்டு நிந்தித்து அதிபாதகத்துக்காளாயினர். பாவங்களை யெல்லாம் நீறாக்கலால் நீறெனவும், பசுமம், பற்பம் எனவுஞ் சொல்லப்படும். அறியாமை யழியும்படி சிவஞானமாகிய சிவத்துவத்தை விளக்கலாற் பசிதமெனப்படும். உயிர்களது மலத்தைக் கழுவுதலால் சாரம் எனப்படும். உயிர்களது மலத்தைக் கழுவுதலால் சாரம் எனப்படும். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும் நீக்கி இரக்ஷ¢த்தலால் இர¨க்ஷ (இரக்கை) எனப்படும்.

பூதியெனப்படுஞ்செல்வவேதுவினாற்சிவமாகும்பொருடிகழ்ந்து
மேதுவினிற்பசிதமிகுபாவங்கடம்மையச்சத்திசைத்தலாலே ரந்
யோதலுறும்பற்பமெனவிடரிடைநின்றகற்றுதலாலொன்றுஞ்சா
தீதகலவனைவரையுமளிப்பதனாலிரக்கையெனச்செப்புநூலே.

– சித்தாந்த சிகாமணி

நீடலுறுந்தீவினையனைத்துநீற்றிவிடலானீறென்றும்
வீடில்வெறுக்கைதருதலினால்விபூதியென்றுமுயிர்தோறுங்
கூடுமலமாசினைக்கழுவுங்குணத்தாற்சாரமென்றுமட
மோடவளர்சோதியைத்தரலாற்பசிதமென்றுமுரைப்பாரால்.

– பேரூர்ப்புராணம்

திருநீறு

கோமயத்தாலுண்டாக்கப்படுவதற்குக் காரணம் :

விபூதியை, மிருகங்களுட்சிறந்த யானையின் இலண்டத்தைக் கொண்டும், குதிரை, ஆடு, எருமை, மான் முதலிய மலங்களைக் கொண்டும் ஆக்காது பசுவின் சாணத்தையே கொண்டு ஆக்குங் காரணத்தைப் பகர்வாம்.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளாகிய பரமசிவக்கடவுள், பிரமதேவர் விஷ்ணு உருத்திரநாயனார் அனந்தேசுரர் சதாசிவ பரமாப்தர் என்னும் பஞ்சமூர்த்திகளானும் முறையே சங்கரிப்படுகின்ற நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்திபதீதகலை என்னும் பஞ்சகலைகளுக்கு முட்பட்ட தத்துவபுவனங்களின் சங்காரமாகிய பிரமாண்டப்பிரளயம், பிராகிருதப்பிரளயம், மத்திமப்பிரளயம், மகாப்பிரளயம், பிரதம மகாப்பிரளயம், என்கிற ஐவகைச் சங்காரத்துள், சுத்தமாயா புவனமுடிவு வரைக்குஞ் சங்கரிக்கப் படுகின்ற அக்காலத்திலே அணுசதாசிவரிருதியாகவுள்ள தேவர்களது உடலங்களை யெல்லாம் தாம் தமது நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றும் ஒரு தீப்பொறியினாற் சுட்டுச் சாம்பராக்கி, அவற்றைத் தமது திருமேனிக்கண் பரவப்பூசி விளங்குதலால், அந்தத் தேவர்கள் யாவரும் ஒவ்வோருறுப்புக்களினும் வசிக்கப்பெற்ற பசுக்களின் சாணத்தைப் பொடித்த திருநீற்றையதற்கு அறிகுறியாக ஆன்மாக்களும் பூசும்படி விதித்தருளினர். அன்றியும் மும்மலங்களானுங் கட்டப்பட்ட ஆன்மாக்களுக்கும் பசுவென்னும் பெயருண்மைபோல, கோக்களும் ஆயராற் கட்டப்பட்டுப் பசுவென்னும் பெயரைக் கொண்டிருக்குமுண்மையினாலும், பசுக்களின் மலங்களுஞ் சிவஞான அக்கினியால் தகிக்கப்படல் வேண்டும் என்னும் ஒற்றுமைக் காரணத்தினாலுமாம், பசுக்களின் மலங்களுஞ் சிவஞான அக்கினியால் தகிக்கப்படல் வேண்டும் என்னும் ஒற்றுமைக் காரணத்தினுலுமாம். பசுக்களின் உறுப்புக்களுள் பிரமவிட்ணுக்கள் கொம்புகளினடியினும், கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் சராசர உயிர்வர்க்கங்களுங் கொம்புகளின் நுனியினும், மேலான சிரசிலே சிவபெருமானும், நெற்றிநடுவிலே சிவசத்தியும், மூக்கு நுனியில் எம்பெருமானராய சிவகுகக் கடவுளும், முக்கினுள்ளே வித்தியாதரரும், இரண்டுகன்னங்களின் நடுவிலே அசுவினி தேவரும், இருகண்களிலே சூரிய சந்திரர்களும் பற்களிலே வாயு தேவனும், ஒளியுள்ள நாவிலே வருணதேவனும், ஊங்காரமுடைய நெஞ்சிலே கலைமகளும், மணித்தலத்திலே இயமனும் இயக்கர்களும், உதட்டிலே உதயாத்தமன சந்திதேவதைகளும், கழுத்திலே இந்திரனும், முரிப்பிலே துவாதசாதித்தர்களும், மார்பிலே சாத்தியதேவர்களும், நான்கு கால்களிலே அநிலன் என்னும் வாயுவும், முழந்தாள்களிலே மருத்துவரும், குளம்பு நுனியிலே சர்ப்பர்களும், அதன் நடுவிலே கந்தருவர்களும், அதன் மேலிடத்திலே அரம்பை மாதரும், முதுகிலே உருத்திரரும், சந்துகடோறும் அட்டவசுக்களும், அரைப்பரப்பிலே பிதிர் தேவதைகளும், யோனியிலே சத்தமாந்தர்களும், குதத்திலே இலக்குமி தேவியும், வாலிலே சர்ப்பராசர்களும், வாலின் மயிரிலே ஆத்திகனும், மூத்திரத்திலே ஆகாயகங்கையும், சாணத்திலே யமுனை நதியும், உரோமங்களிலே மகா முனிவர்களும், வயிற்றிலே பூமிதேவியும், முலையிலே சகலசமுத்திரங்களும் சடராக்கினியிலே காருகபத்தியமும், இதயத்திலே ஆகவனீயமும், முகத்திலே தக்கிணாக்கினியமும், எலும்பினுஞ் சுக்கிலத்தும் யாகத்தொழில் முழுவதும், எல்லா அங்கங்கள்தோறும் கலங்கா நிலையுள்ள கற்புடை மடவாரும் பொருந்தி யிருப்பார்கள். இப்பசுக்கள் சிவபெருமானது சந்நிதிக்கணுள்ள இடபதேவரின் பக்கத்திலிருந்தனவாம். இவற்றைச் சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டுப் பூமியிற் பிறக்கச் செய்தலால், ஆதியிலே பாற்கடலின் வழியாய்த் தோன்றிப் பூமியில் விளங்கினவென்க.

வேதாவுங் கரியவனு மாவினது கோட்டடியின் விளங்கி வாழ்வர்
கோதாலி முதற்றீர்த்தங் கோட்டினுதிச் சராசரமுங் கூடிநிற்கு
மீதான சிரத்தமலன் விமலையத னடுநெற்றி விசாக னாசி
மீதானந் தனிலதனுண் ணாசிதனினாகேசர் விளங்கு வாரே.

ஆசகல விருகன்ன நாப்ப ணச்சு வினிதேவ ரமர்ந்து வாழ்வர்
தேசுடைய பரிதிமதி நயனத்திற் றந்தத்திற் செறியும் வாயு
வோசையுறு நாவதனில் வருணனுரை மகளோங்கூங் கார நெஞ்சி
னேசமுற யமனியக்கர் கெண்டதலத் தெந்நாளு நிலவுவாரே.

ஓட்டத்தி லுதயாத்த மனசந்தி யிவையுறையு முறைவன்
தீட்டுடைய விந்திரனே யிமிலிருப்ப ரருக்கரென வியம்புந் தேவர்
வாட்டமிலாச் சாத்தியரே வாழ்வார்க ளுரமதனி லநில வாயு
நீட்டியதா ளொருநான்கின்மருத்தென்பர்முழந்தாளினிலவுவாரே.

குரத்தினுதிப் பன்னகரே குடிகொள்வர்
காந்தருவர் குரத்தி னாப்ப
ணிருப்பார மகளிர்கண மிவரெல்லா
மேற்குரத்தின் முதுகி னெல்லை
யுருத்திரரே சந்துதொறு முறைவார்கள்
வசுதேவர் பிதிர்க்க ளோங்கிப்
பருத்தவரைப் பலகைதனிற் பகத்துறைவ
ரெழுமாதர் பரிவு கூர்ந்தே.

திருமகளே யபானத்தி னாகேச ரடிவாலிற் சிறந்து வாழ்வ
ரிரவியொளி வாலின்மயி ரிலங்கி யிடுஞ் சுரநதிதா னேயு நீரின்
வரமுடைய யமுனைமய மதுதன்னின் மாதவர்க ளுரோமம் வாழ்வ
ருரமுடைய பூதேவி யுதரத்திற் பயோதரத்தி னுததி யெல்லாம்.

சடரத்தி னிதயத்திற் றழைத்தமுக
மதுதன்னிற் றங்கு மங்கிச்
கடனுடனே காருகபத் தியமெழுவா
யொருமூன்றுங் கடின வேள்வி
யுடலுறு சுக்கிலந்தனினு முறையுமக
வினையனைத்து முறுப்புத் தோறுந்
திடமுறுகற் புடைமடவார் செறிந்திருப்ப
ரிம்முறையைச் சிந்தை செய்தே.

-சிவதருமோத்தரம்.

கோமயப் பசு :

விபூதியுண்டாக்குதற்குக் கோமயம் (சாணம்) கொள்ளுமிடத்துக்கன்று பிரசவித்துப் பத்துநாட் சூதகமுடைய பசு, கன்று பிரசவியாத கிடாரி, வியாதியுடைய பசு, தன்கன்றுசாவப்பெற்ற பசு, கிழப்பசு, மலட்டுப்பசு, மலத்தைத் தின்னும் பசு ஆகிய இப்பசுக்களல்லாத மற்றைய பசுக்களே நல்லனவாம். அவைகளினும் பிராமணர்க்கு வெள்ளைநிறப்பசுவும், க்ஷத்திரியர்க்குச் சிவப்புநிறப் பசுவும், வைசியர்க்குப் பொன்மைநிறப் பசுவும், சூத்திரர்க்குக் கருநிறப் பசுவும் உத்தமமாம்.

கோமயங்கொள்ளுங் காலமும் மந்திரமும் :

பங்குனிமாதத்திலே பசான மென்னும் நெல்லினது தாளைமேய்ந்த பசுக்களினிடத்திலே அட்டமி, பெளர்ணிமை, சதுர்த்தசி என்னுந் திதிகளிலே கோமயங் கொள்ளவேண்டும். கொள்ளுதற்கு முன்னர் ஓம் கபிலே நந்தேநம, ஓம் கபிலே பத்திரேநம, ஓம் கபிலே சுசீலேநம, ஓம் கபிலே சுரபேநம, ஓம் கபிலே சுமநேநம என்னு மந்திரத்துள்ள ஏற்ற மந்திரத்தைக் கூறி வணங்கி, “பாற்கடற்கண் தோன்றி, ஆன்மாக்களின் துக்கத்தைப் போக்கும் பயோதரத்தையுடைய மாதாவே! இதனை யேற்க” என்று ஒருபிடி புல்லுக் கொடுத்து, கோசாவித்திரி தோத்திரமுஞ் செய்து கொள்ளக் கடவர். தாம் ஏற்கச் சென்ற பசு கருமைசேர்ந்த பொன்னிறமுடைத்தாயின் முதலாம் மந்திரத்தையும், கருநிறமுடைத்தாயின் இரண்டாம் மந்திரத்தையும், புகைநிறமுடைத்தாயின் மூன்றாவதையும், வெள்ளைநிற முடையதாயின் நான்காம் மந்திரத்தையும், தாமிர நிறத்ததானால் இறுதிக்கணுள்ள மந்திரத்தையுஞ் சொல்லக்கடவர்,

கோமயங் கொள்ளும் முறை :

பசுவின் சாணத்தைந் கொள்ளுமுறை சாந்திகம், பெளட்டிகம், காமதம் என மூவகைப்படும். அவற்றுள் சாந்திகமாவது கோமயமிடும்போது பசுவின் பிற்றட்டிலே கைவைத்தேற்பது. பெளட்டிகமாவது சாணம் பூமியில் விழுமுன் தாமரையிலையிலேற்பது. காமதமாவது பூமியில் விழுந்தபின் மேல் கீழ் தள்ளியெடுப்பது. இவற்றுள் பெளட்டிகம் உத்தமம். சாந்திகம் மத்திமம். காமதம் அதமம் எனவறிக.

கற்ப விபூதி :

முன்னர்க் கூறிய மூவகை விபூதிகளுள் கற்பவிபூதியைக் கூறுவாம். சொல்லப்பட்டபடி பசுக்களுளொன்றனிடத்துப் பூமியில் விழுமுன் ஓம் சத்தியோசாதாய நம என்னும் மந்திரத்தை யுச்சரித்துத் தாமரை இலையிலேற்ற கோமயத்திலே பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய் இரண்டு பலமும், கோசலம் ஒருபலமுஞ் சேர்த்த கல்வியத்தை ஓம் வாமதேவாயநம என்று வார்த்து, ஓம் அகோராய நம என்று உச்சரித்து மெல்லப் பிசைந்து உண்டைபண்ணி, சம்பா நெற்பதரை விரித்து, அதன்மேல் ஓம் தற்புருடாயநம என்று உச்சரித்து வைத்து ஓமாக்கினினாலேனும் நித்தியாக்கினியினாலேனுந் தகனஞ் செய்யவேண்டும். அன்றைக்கே யெடுத்து, அன்றைக்கே உருண்டைசெய்து, அற்றைத் தினத்திற்றானே தகனஞ்செய்தல் உத்தமோத்தமமாகும். அவ்வாறன்றி உலர்த்திச் செய்தலுமாகும். அவ்விபூதி நன்றாய் விளைந்ததை யறிந்து கருகல் முதலியவற்றைத் தள்ளி, நல்லனவற்றைப் பார்த்து, ஓம் ஈசானாயநம என்று உச்சரித்து எடுக்கக்கடவர். கருநிற விபூதி வியாதியை யுண்டாக்கு மாகலானும், செந்நிற விபூதி கீர்த்தியைப் போக்குமாகலானும், புகைநிற விபூதி ஆயுவைக் குறைக்குமாகலானும், பொன்னிற விபூதி சம்பத்தைக் கெடுக்குமாகலானும் அவற்றை யெல்லாம் நீக்கி வெண்ணிற விபூதியே, எடுக்கக்கடவர். இதுதான் கற்பவிபூதியாகும்.

மந்திரங்கேட்டியரசனேசாதமயத்தினையேற்றல்வாமத்தா
னைந்தினைவாக்கலகோரத்தாற்பிசைதலழலிடையுருட்டி வைத்தி
சிந்துதற்புருடத்தாற்பகைபீதஞ்சிவப்பறுகருமையுந்தீர [டன்மால்
விந்துநேர்பூதியெடுத்தலீசம்பெய்திருத்தல்காயத்திரிமனுவால்.

-தணிகைப் புராணம்.

அநுகற்ப விபூதி :

அ·தாவது சித்திரை மாதத்திலே பசுக்கள் நிற்கும் மந்தையிற் சென்று உலர்ந்து கிடந்த கோமயங்களை யெடுத்து ஓரிடத்திலே குவித்து, உரலிலிட்டு இடித்துத் தூளாக்கி, அதிலே கோசலத்தை ஓம் வாமதேவாயநம என்று உச்சரித்து வார்த்துக் கையினாலே கலந்து, ஓம் அகோராயநம என்று நன்றாகப் பிசைந்து உண்டை செய்து பதரை விரித்து, ஓம் தற்புருடாய நம என்று அதன்மேல் வைத்து ஓமாக்கினியினால் தகனம்பண்ணி, ஓம் ஈசானாய நம என்று எடுத்த திருநீறாம்.

உபகற்ப விபூதி :

உபகற்ப விபூதியாவது கோமயங் கிடைக்கா விடத்துக் நாட்டின்கண் மரத்தோடு மரம் இணைந்து தானேயுண்டாகிய அக்கினியினாலே வெந்து விளைந்த சாம்பரையாதல், அல்லது செயற்கையாயுள்ள செங்கற்சூளை முதலியவற்றில் விளைந்த சாம்பரையாதல் எடுத்து, பஞ்சகவ்வியத்தை வாமதேவ மந்திரத்தினாலே வார்த்துப் பாகமறிந்து கலந்து, அகோர மந்திரத்தினாலே அள்ளி பிசைந்து உண்டை செய்து பதரைப் பரப்பி, அதன்மேல் தற்புருட மந்திரத்தினாலே வைத்துச் சிவாக்கினியினாலே தகனம்பண்ணி, ஈசான மந்திரத்தினாலே எடுப்பதாகும்.

அகற்ப விபூதி :

மேற்சொல்லியவிபூதிகள் கிடைக்காவிடத்து இடிவிழுந்த இடத்தில் உண்டாகிய திருநீறும், மலையினுச்சியிலும் பூமியிலும் யாதொரு காரணத்தினால் விளைந்த திருநீறுந் தரிக்கலாம். அது அகற்ப மெனப்படும். அவைகளை யெடுத்து ஓம் நிவிர்த்தி கலாயைநம, ஓம் பிரதிஷ்டா கலாயைநம, ஓம் வித்தியாகலாயை நம, ஓம் சாந்தி கலாயை நம, ஓம் சாந்தியாதீதகலாயை நம என்னுங் கலாமந்திரங்களானும், ஓம் சிவாயநம என்னும் சிவமூல மந்திரத்தானுஞ் சுத்திசெய்தே தரிக்க வேண்டும்.

விபூதிப்பையின் இலக்கணம் :

அங்ஙனம் எடுத்த விபூதிகளைப் பரிசுத்தமாகிய புதுவஸ்திரத்தினாலே வடித்துப் புதுபாண்டத்திற் பெய்து, விபூதி காயத்திரி மந்திரத்தை உச்சரித்துச் சுத்தபூமியில் வைக்கக் கடவர். அதனுள் மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பக முதலிய வாசனை மலர்களை சத்யோசாத மந்திரத்தினால் இட்டுப் புதிய வஸ்திரத்தினால் அதன் வாயைக்கட்டி, இதுவே நம்முடைய பெருந்திரவியமென்று வைக்கக்கடவர். அவ்விபூதியைப் பையிலிட்டு வைத்துத் தரிக்க வேண்டும். பட்டுப் பையினல்லாமற் சம்புடத்திலேனும், வில்வக்குடுக்கையிலாயினும், சுரைக் குடுக்கையிலேனு, மான்தோல், புலித்தோல் என்னுமிவைகளாற் செய்யப்பட்ட பையிலேனும் வைத்துத் தரிக்கவேண்டும். அவற்றுள் தோலினாற் செய்யப்பட்ட பைகள் நைட்டிகப் பிரமசாரிக்குஞ் சந்நியாசிக்குமே உரியனவாம். பைசெய்யுமிடத்து அகலம் எட்டங்குலமும் உயரம் பன்னிரண்டங்குலமும் உடைத்தாய், வாய்வட்டமாகச் செய்தல்வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றினுள்ள விபூதியைக் கவிழ்க்கலாகாது. கவிழ்க்கின் மகா ரெளரவம் முதலிய கொடிய நரகங்களில் வீழ்வர்.

தரிக்கும் இடங்களும் அளவும் :

உச்சி, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, முழந்தாள்களிரண்டு, தோள்களிரண்டு, முழங்கைகளிரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு என்னுமிடங்களிற் றரிக்க வேண்டும். இவற்றுள் விலாப்புற மிரண்டையும் நீக்கிச் செவிகள் இரண்டனையுங் கொள்வதும், முழங்கைகளையும் மணிக்கட்டுகளையுநீக்கிப் பன்னிரண்டு தானங்கொள்வதுமுண்டு. நெற்றியில் இரண்டு கடைப்புருவ எல்லை நீளமும், மார்பினுந் தோளிரண்டினும் அவ்வாறங்குல நீளமும் பொருந்த அணிதல் முறையாகும். இவ்வளவினின்று கூடினுங் குறையினுங் குற்றமாம்.

விபூதி தாரண வகை :

உத்தூளனம், திரிபுண்டாம் என இருவகைப்படும் உத்தூளனமாவது பரவப் பூசுதல். திரிபுண்டரமாவது முக்குறியாகத் தரித்தல். திரி = மூன்று. புண்டரம் = குறி, சிவதீ¨க்ஷயில்லாத ஆடவர்களும், பெண்களும், வைதிகவழி யொழுகுஞ் சந்நியாசிகளும், பிரமசாரியும், வானப்பிரத்தனும், கன்னிகையும் உச்சிக் காலத்திற்குப்பின் சலங்கூட்டாமல் உத்தூளனமாகத் தரிக்கக்கடவர். தீ¨க்ஷ பெற்றவர்களும் காலை, உச்சி, மாலையென்னு மூன்று காலங்களில் மாத்திரம் நீருடனே கூட்டித் தரிக்கக் கடவர். மற்றைக் காலங்களில் நீர்சேர்க்காது உத்தூளனமாகத் தரிக்கக்கடவர். விலக்கிய காலங்களில் நீர்சேர்த்துத் தரிப்பாராயின், அந்த நீர் பனை நீரை (மதுவை) யொக்குமென்று சிவாகமங்கள் செப்புகின்றன. உத்தூளனமாகத் தரிக்குமிடத்துப் பிராமணர் தலை தொடங்கிக் காலளவும் நீருடனே யுத்தூளனம் பண்ணுக. அரசர் நாபிக்கு மேலே அப்படித் தரிக்கக்கடவர். வைசியர் பட்டமாகத் தரிக்கக்கடவர். சூத்திரர் மூன்று விரலினாலே முக்குறி வடிவாகத் தரிக்கக்கடவர். அநுலோமர் வைசியரைப் போலவும், பிரதிலோமர் சூத்திரரைப்போலவுந் தரித்தல் வேண்டும்.

இவ்வருணத்தார்க்கு இவ்விபூதியாமெனல் :

சிவபெருமான், உமை, விநாயகர், கந்தர், வைரவர், வீரபத்திரர் என்னுங் கடவுளரது யாகசாலையிலே உற்சவ முதலிய காலங்களில் வெந்து விளங்கிய திருவெண்ணீறு பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மூவர்க்கும் உரியது. திருக்கோயிலின் கண்ணும், திருமடங்களிலு முள்ள திருமடைப்பள்ளியிற் பாகஞ் செய்ததனா லுண்டாகிய திறுநீறு சூத்திரருக்குமாகும். காட்டுத் தீயிலே இயல்பாக விளைந்த திருநீறு இவரல்லாத பஞ்சம சாதியார்க்கு உரியதாம்.

தரிக்கலாகாத இடங்கள் :

சிவபெருமான் முன்னும், சிவாக்கினி முன்னும், ஆசாரியர் முன்னும் விபூதி தரியாதொழிக. தரிக்க வேண்டுமாயின் முகத்தை மாறியிட்டுக் கொள்க. இங்ஙனமன்றிச் சண்டாளர் முன்னும், பாவிகள் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதுந் தரிக்கலாகா.

அவசியந் தரிக்குங் காலங்கள் :

காலை, உச்சி, மாலையென்னுஞ் சந்தியா காலமூன்றினும், சூரிய உதயாத்தமயன காலங்களினும், ஸ்நானஞ் செய்தவுடனும், மலசல மோசனஞ் செய்து செளசம்பண்ணி ஆசமனஞ் செய்த பின்னும், பூசைக்கு முன்னும், பின்னும், தீ¨க்ஷயில்லாதவர் தீண்டியபோதும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், பூனை, கொக்கு, எலி, நாய், காகம், பன்றி முதலியன தீண்டியபோதும், பி¨க்ஷக்கு முன்னும் பின்னும், பிதுர்க்கிரியையிலும், யாகத்திலும், செபத்திலும், ஓமத்திலும், வைசுவதேவமென்னும் நித்திய கர்மத்தினும், சிவபூசையினும் அவசியம் விபூதி அணியவேண்டும். எவர் விபூதி தரியாதிருக்கின்றனரோ அவர் செய்யும் நற்கர்மங்கள் நிஷ்பலமாகும். அவரது அறிவு, ஆசாரம், சத்தியம், தவம் முதலியனவுங் குன்றும். அவர் முகம் சுடுகாட்டிற்கு சமமாகும். ஆகலின் அவரைக் காணின் அஞ்சி அகல்க அகல்க. இதற்குப் பிரமாணம் வருமாறு:-

பிணியெலாம் வரினு மஞ்சேன் பிறப்பினோ டிறப்பு மஞ்சேன்
றுணிநிலா வணியி னான்றன் றொழும்பரோ டழுந்தி யம்மா
றிணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே.

-திருவாசகம்.

தரிக்கக்கூடாத விபூதிகள் :

ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷ யில்லாதவர் கொடுத்த விபூதியும், கருநிறவிபூதியும், செந்நிற விபூதியும், பொன்னிற விபூதியும், புகைநிற விபூதியுந் தரிக்கலாகாது. சிவதீ¨க்ஷ யில்லார் கொண்டுவந்த விபூதிப் பிரசாதத்தை யொருபாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புட்பங்களால் அருச்சித்து நமஸ்காரஞ் செய்து எடுத்துத் தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ முதலியவற்றால் தம்மினின்றும் உயர்ந்தவரா யிருப்பின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல்வேண்டும். ஆசாரியராயின் மூன்று அல்லது ஐந்துதரம் நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு வாங்கித் தரித்து பின்னரும் நமஸ்கரிக்க வேண்டும்.

தரிக்கும் நியமம் :

1 சமயி பிராதக்கால சந்தியொன்றிலேயே நீரிற்குழைத்துத் தரிக்கக்கடவன். 2புத்திரன் அதனோடு சாயங்கால சந்தியினும் நீரிற்குழைத்து அணிக. 3சாதகனென்பான் அவ்விரண்டனோடு மத்தியான சந்தியினும் அங்ஙனஞ் செய்யக் கடவன். 4ஆசாரியன் அம்மூன்றனோடு அர்த்தராத்திரி சந்தியினும் நீர்சேர்த்து இடக்கடவன் என்று கூறுவாருமுளர். யாவரும் இரு வஸ்திரந் தரித்து நீராடி ஈரம் துவட்டி விபூதி தரிக்கக் கடவர். ஈரவஸ்திரத்தையேனும் ஒருவஸ்திரத்தையேனும் உடுத்துக் கொண்டும், கெளபீனந் தரியாமலும், நிருவாணமாக இருந்து கொண்டும்ம் விபூதி தாரணஞ் செய்யலாகாது. அங்ஙனஞ் செய்யின் நிஷ்பலமாகும். தரிக்கும் இருவஸ்திரமும் சுத்தமுள்ளனவாய், வெண்ணிறத்தனவாய், உலர்ந்தனவாயிருக்கவேண்டும். நைட்டிகப் பிரமசாரியம் சந்நியாசியும் யாசகராய் வேறுவஸ்திர மில்லாதிருக்கின் ஒரு வஸ்திரத்தையே இருவஸ்திரமாகப் பாவனை செய்து தரிக்கக்கடவர். அதுவும் ஈரவஸ்திரமாயின் சூரிய குரூரமந்திரத்தினாலே உலர்ந்ததாக அபிமந்திரித்து, ஓம் சிவாய நம என்று சலத்தைப் புரோக்ஷ¢த்து, ஓம் கவசாயநம என்று தலையிற் போட்டு, மகாமுத்திரையுந் தேனுமுத்திரையுங் காட்டி, ஓம் அஸ்திராயபடு என்று தலையையும், ஓம் இருதயாய வெளஷடு என்று மற்றை அங்கங்களையுந் துவட்டக்கடவர். கோயினாலே ஸ்நானம்பண்ண இயலாதவருந் தலைதொடங்கிக் கால்வரையும் சொல்லியபடி துவட்டுதலாகிய காபிலஸ்நானத்தை முடித்துக் கொண்டு தரிக்கக்கடவர். தரிக்குமிடத்து நுரை, குமிழி, நுண்ணிய புழு என்னு மிவையுள்ள நீரும், வடித்தொடாத நீரும், இழிகுலத்தார் தீண்டிய நீரும், கலங்கள் நீரும், பாசிநீரும், உவர்நீரும், வெந்நீரும், பழமையாகிய நீரும், சொறி நீரும், கூவல் நீரும் ஆகாவாம். சுத்த சலங்கொண்டு தானிருக்கும் பூமியை ஓம் அஸ்திராயபடு என்று சுத்திசெய்து, ஆசனத்திலே கிழக்கு நோக்கியாயினும் வடக்கு நோக்கியாயினும் இருந்துகொண்டு, ஓம் கணபதியே நம என்று முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்றுதரங் குட்டி, ஓம் குருப்பியோநம என்று நமஸ்கார முத்திரையினாலே கும்பிடுக.

——————————————————————————–

1.சமயி என்பவன் சமயதீ¨க்ஷ பெற்றுச் சிவாகம விதிப்படி நித்தியகருமஞ் செய்பவன்.

2.புத்திரன் அதனோடு விசேட தீ¨க்ஷயும் பெற்றுத் தருப்பணம், சிவபூசை, அக்கினிகாரிய முதலியன செய்பவன்.

3.சாதகனாவான் அவ்விரண்டனோடு நிருவாண தீ¨க்ஷயும் பெற்று நித்தியம், நைமித்திகம், காமிகம் என்னுங் கருமங்களைச் செய்து சாதனையினால் தம்மலமறுப்பவன். இம்மூவகையருஞ் சாமானியர் எனவும், விசேடர் எனவும் இருவகைப்படுவர்.

4.ஆசாரியராவார் அம்மூன்று தீக்கைகளோடு ஆசாரியாபிடேகமும் பெற்றவர். அவரும் கிரியாகுரு ஞானகுரு என இருவகையர்.

——————————————————————————–

சல சுத்தி :

அநுட்டான சலத்தை ஓம் சிவாய நம என்று 5நிரீக்ஷண முத்திரையினாலே நிரீக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று நிமிர்த்திய பதாகை முத்திரையினாலே புரோக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று சுட்டுவிரலை நீட்டிய கையினாலே தாடனமும், ஓம் கவசாயவெளஷடு என்று கவிழ்ந்த பதாகை முத்திரையினாலே அப்பியுக்ஷணமும், வலக்கைப் பெருவிரலொழித்த விரல்களினால் இடவுள்ளங்கையிலே ஓம் அஸ்திராயபடு என்று மூன்றுதரந் தட்டுதலாகிய தாளத்திரயமுஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று சோடிகை முத்திரையினாலே திக்குபந்தனமும், ஓம் கவசாய வெளஷடு என்று சுட்டுவிரல் நீட்டிய கையினாலே அவகுண்டனமுஞ் செய்து, ஓம் சிவாய வெளஷடு என்று தேனுமுத்திரையுங் கொடுக்க வேண்டும்.

——————————————————————————–

5.நிரிக்ஷணமாவது சந்திரன், சூரியன், அக்கினி யென்னு மூவரும்முறையே வலக்கண்ணும், இடக்கண்ணும், நெற்றிக்கண்ணு மாவராதலால், வலக்கண்ணினாலே அதனை உலர்த்தினதாகவும், நெற்றிக்கண்ணினாலே தகித்ததாகவும், இடக்கண்ணினாலே அமுதங் கொண்டு நனைப்பதாகவும் பாவிப்பது. புரோக்கணமாவது அங்ஙனம் நிரீக்கணஞ் செய்யப்பட்டது சுத்தியாதற் பொருட்டுத் தெளிப்பதாம். தாளத்திரயமாவது ஒருவன் கல்லையடிக்கும் போது அதனிடத்துப் பொறிதோன்றுமாறு போலச் சடமாகிய இந்தப் பதார்த்தத்தினிடத்துச் சித்துண்டாதற் பொருட்டுத் தட்டுவதாம். அப்பியுக்கணமாவது அந்தப் பதார்த்தத்தினிடத்துத் தோன்றிய சித்தினது பிரகாசமானது தன்னுடைய தானத்தைவிட்டு நீங்காமல் இருக்கும் பொருட்டு மூடுவதாம்.

——————————————————————————–

அஸ்திர சந்தியோபாசனம் :

அதன் பின்னர் ஓம் அஸ்திராயநம என்று நிமிர்த்திப் பதாகை முத்திரையினாலே சலத்துளியை மூன்றுதரஞ் சிரசின்மேலே தெளித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மூன்றுதரந் தருப்பனஞ் செய்து, ஓம் அஸ்திராய நம என்று பத்துத்தரஞ் செபித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மீட்டும் ஒருதரம் தருப்பனஞ் செய்க.

ஆசமனம் :

அதன்பின் தருப்பையினாலே செய்யப்பட்ட பவித்திரத்தையேனும், பொன் வெள்ளி யென்னு மிவகைளாற் செய்யப்பட்ட பவித்திரத்தையேனும் அநாமிகை விரவிற்றரித்து, வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டுப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து, ஆன்மதத்துவம் இருபத்துநான்கும், வித்தியாதத்துவம் ஏழும், சிவதத்துவம் ஐந்துமாகிய முப்பத்தாறு தத்துவங்களுஞ் சுத்தியாகும் பொருட்டுச் சலத்திலே ஓம் ஆத்துமதத்துவாய சுவதா, ஓம் வித்தியாதத்துவாய் சுவதா, ஓம் சிவதத்துவாயசுவதா என்று பிரம தீர்த்தமாகிய அங்குட்டத்தின் (பெருவிரலில்) அடி அதரத்திலே படும்படி ஆசமனம் பண்ணி, ஓம் அஸ்திராயபடு என்று அதரங்களிரண்டையும் வலக்கையின் பெருவிரலடிகொண்டு இடமாக இரண்டுதரமும், உள்ளங்கை கொண்டு கீழாகஒருதரமுந் துடைத்துக் கைகழுவி, ஓம் இருதயாய வெளஷடு என்று பெருவிரலோடு கூடிய அணிவிரலினாலே முகம், வலமூக்கு, இடமூக்கு, வலக்கண், இடக்கண், வலக்காது, இடக்காது, நாபி, மார்பு, வலத்தோள், இடத்தோள், சிரசு என்னும் இப்பன்னிரண்டிடங்களையுந் தொட்டு விடுக.

இங்ஙனமன்றிச் சிலர் ஓம் அச்சுதாய நம, ஓம் அனந்தாய நம, ஓம் கோவிந்தாய நம எனவும், சிலர், ஓம் கேசவாயஸ்வாகா, ஓம் நாராயணாயஸ்வாகா, ஓம் மாதவாயஸ்வாகா எனவும் உச்சரித்து ஆசமனஞ் செய்வர். இவை சிவாகமத்திற்கு மாறென்க.

சிலர், ஓம் கேசவாய நம: என்று பெருவிரல் நுனியால் வலக் கபோலத்தையும், ஓம் நாராயணாய நம: என்று இடக் கபோலத்தையும், ஓம் மாதவாய நம: என்று இடக்கண்ணையும், ஓம் விஷ்ணவே நம: என்று சுட்டுவிரனுனியால் வலமூக்கினடியையும், ஓம் மதுசூதனாய நம: என்று இடமூக்கினடியையும், ஓம் திரிவிக்ரதாய நம: என்று சிறுவிரனுனியால் வலக்காதினையும், ஓம் வாமனாய நம: என்று இடக்காதினையும், ஓம் ஸ்ரீதராய நம: என்று நடுவிரனுனியினால் வலப்புயத்தையும், ஓம் இருஷிகேசாய நம: என்று இடப்புயத்தையும், ஓம் பத்மநாபாய நம: என்று கையைக் குவித்து நெஞ்சினையும் ஓம் தாமோதராயநம: என்று கையை விரித்துச் சிரத்தினையும் முறையே தொடுவதுமுண்டு. இது சிவாகம விரோதமாம். ஸ்மார்த்த நிலையினர் முக்கியமாய் இதை யநுசரிக்கின்றனர். அங்ஙனமாயினும் இந்நாமங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கே சிறப்பாவமைதல் “கேசவாதிநாம சிவபரத்துவ நிரூபணத்தாற்” போதரலின் பொருந்து மென்றலும் ஓன்றாகும்.

திருநீற்றின் அளவு :

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் விபூதி தரிக்குமிடத்து, பிராமணர் ஒருகழஞ்சு விபூதியும், க்ஷத்திரியர் ஒன்றரைக் கழஞ்சும், வைசியர் இரண்டு கழஞ்சு விபூதியும், சூத்திரர் இரண்டரைக் கழஞ்சுங் கொள்ள வேண்டும். அவ்வவ் வருணத்துப் பெண்களும் இவ்வளவே கொள்ளக்கடவர். ஒருகழஞ்சு என்பது பன்னிரண்டு பணவெடையுள்ளது.

விபூதிசுத்தி :

அதன் பின்னர், விபூதியை வலக்கைப் பெருவிரல், நடுவிரல், அணிவிரல்களால் எடுத்து இடக்கையில் வைத்துக் கொண்டு, ஓம் அஸ்திராயபடு என்று விபூதியிலே சலத்தைத் தெளித்து, அவ்விபூதியில் ஒரு சிறுபாகத்தைப் பெருவிரல் அணிவிரல்களினாலே தொட்டு, ஓம் அஸ்திராய உம்படு என்று இராக்ஷதர் பொருட்டு நிருதி மூலையாகிய தென்மேற்குத் திசையிற் றெறித்து, ஓம் சிவாயநம என்று நிரீக்ஷணஞ்செய்து, ஓம் அஸ்திராயபடு என்று புரோக்ஷண தாடனங்கள் பண்ணி ஓம் கவசாய வெளஷடு என்று அப்பியுக்ஷணமுஞ் செய்து, விபூதியை வலக்கையால் மூடிக்கொண்டு, ஓம் நிவிர்த்திகலாயை நம, ஓம் பிரதிஷ்டாகலாயைநம, ஓம் வித்தியாகலாயைநம, ஓம் சாந்திகலாயை நம, ஓம் சாந்தீயாதீதகலாயைநம என்னும் பஞ்சகலா மந்திரத்தையும், ஓம் ஈசானாய நம, ஓம் தற்புருஷாயநம, ஓம் அகோராய நம, ஓம் வாமதேவாயநம, ஓம் சத்தியோசாதாய நம, ஓம் இருதயாய நம, ஓம் சிரசேநம, ஓம் சிகாயை நம, ஓம் கவசாயநம, ஓம் நேத்திரோப்பியோநம, ஓம் அஸ்திராய நம என்னுஞ் சங்கிதா மந்திரம் பதினொன்றனையும் உச்சரித்து அபிமந்திரித்து, ஓம் கவசாயவெளஷடு என்று அவகுண்டனமுஞ் செய்யக்கடவர்.

விபூதி ஸ்நானம் :

அங்ஙனஞ் செய்த பின்பு, வலக்கையின் பெருவிரல் அணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து, ஓம் அஸ்திராய படு என்று தலை தொடங்கிக் காலளவும்பூசி, இடக்கையிலுள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினால் ஓம் இருதயாய நம என்று நீர்விட்டு, ஓம் கவசாயவெளஷடு என்று குழைத்து நடுவிரல் மூன்றினாலும், ஓம் ஈசானாயநம என்று உச்சியில் மூன்றுதரமும், ஓம் தற்புருடாயந்ம என்று நெற்றியில் மூன்றுதரமும், ஓம் அகோராய நம என்று நெஞ்சினில் மூன்றுதரமும், ஓம் வாமதேவாயநம என்று நாபியில் ஒரு தரமும், ஓம் சத்தியோசாதாய நம என்று முறையே வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலாப்புறம், இடவிலாப்புறம், முதுகு, கழுத்து என்னுமற்றை யிடங்களில் ஒவ்வொரு தரமுந் தரிக்கக்கடவர்.

சிலர் சுவத்திகாசனமாக இருந்துகொண்டு, ஆசமனஞ் செய்து, விபூதியைக் கையில் வைத்துக்கொண்டு,

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தநம்
உர்வாருக மிவபந்தனான் முர்த்யோர் முக்ஷ£யமாமி.

என்னு மந்திரத்தைச் சொல்லிச் சலம் விட்டுக் குழைத்து,

ஓம் சத்யோசாதம் பிரபத்யாமி சத்யோஜாதாயவை நமோநம:
பவேபவே நாதிபவே பவஸ்வமாம் பவோத் பவாயநம:

வாமதேவாய நமோ ஜேஷ்டாய நமஸ்ரேஷ்டாய நமோ ருத்திராய நம:

காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாயநமோ
பலாயநமோ பலப்ரமதனாயநமஸ் ஸர்வபூத தமனாயநமோ மனோன்மனாயநம:
அகோரேப்யோத கோரோப்யோ கோரகோரதரேப்ய: ஸர்வேப்ய:
ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய:,

தத்புருஷாய வித்மஹே மஹோதேவாய தீமஹீ தந்நோருத்ராய பிரசோதயாத்
ஈசானஸ் ஸர்வவித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வபூதானாம்
ப்ரம்ஹாதிபதி ப்ரஹமணாதிபதி ப்ரம்ஹாசிவோமே
அஸ்து ஸதாசிவோம்.

என்னு மந்திரங்களைச் சொல்லித் தரிப்பவருமுளர்.

இங்ஙனம் நடுவிரல் மூன்றானுந் தரிக்குந் திரிபுண்டாம் திருநீற்றுமுத்திரையெனப் பெயர் பெறும். இதுவன்றிப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்னு மூன்றாணுந் தரிப்பதே விசேடமாம். தரிக்கின் மகாபாதகங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் அகலுமென்க. அதனை அநுலோமப் பிரதிலோமம் என்று கூறுவர். மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றையொன்று தீண்டினும், மிக அகன்றிருப்பினும், வளைந்திருப்பினும் இடையில்லா விட்டாலும் குற்றமென்றறிக. திரிபுண்டாம் விதித்த நீளத்தினின்றுங் குறைவுறுமாயின் ஆயுள் குன்றும்; மிகுமாயின் தவங்கெடும். செம்பு, வெள்ளி முதலிய உலோகங்களினாலே திரிசூலஞ் செய்து, அதனாலுந் தோள் முதலாய தானங்களில் விபூதி தரிப்பதுமுண்டு. அங்ஙனந் தரிப்பவர் சிவலோகத்திலே ஒருகாலும் நீங்காது வாழ்ந்திருப்பார்கள். மற்றைய அவசிய காலங்களிற் றரிப்பவரும், நோயாளரும் “சிவசிவ” என்று நெற்றி முதலிய தானங்களிற் றரிக்கக்கடவர். தரிக்குங் காலத்து நிலத்திலே சிந்தாவண்ணந் தரிக்க. எத்தனை யணுக்கள் பூமியில் விழுகின்றனவோ அத்தனை வருடம் இரெளரவ நரகத்தில் வருந்துவர். வாயைத்திறந்து கொண்டும், தலையசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக்கொண்டும், பராமுகஞ் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும், நடந்துகொண்டும், தலையைக் கவிழ்த்துக் கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டுந் தரித்தல் குற்றமாம். ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் அணியற்க. நிலத்திலே யொருகால் விபூதி சிந்துமாயின் அதனை யெடுத்து விட்டு அவ்விடத்தைச் சலத்தால் மெழுகவேண்டும் இங்ஙனந் தரித்த பின்னர்ச் செய்ய வேண்டியவற்றை யெல்லாஞ் செய்து கொள்ளக்கடவர். அக்கினியின்றி யாகம் நடவாவதது போல விபூதியின்றிச் சிவார்ச்சனை நடவாது. விபூதியிடாதவர் முகத்தைக் கண்டால் நல்லோர் பஞ்சாக்ஷர மந்திரம் நூறுருச் செபிக்கக்கடவர்.

அருமறை வேள்விக்கனலி னீறெடுத்துப்
பிரணவத்தை யமைய வோதி
யுரைபெறு பஞ்சப்பிரமத்தா லுச்சி
நெற்றி யுரங்குய்யந் தாள்கள்
வரன்முறை யேயினி தணிந்து
பிரணவத்தாலுடன் முழுதும் வயங்கமண்ணி
விரிதுகில் வேறொன்றணிந்து விளங்கு
மறைமந்திரங்கள் விளம்ப வேண்டும்.

-இலிங்கபுராணம்.

விபூதியைச் சாபால வுபநிடதத்திற் கூறப்பட்ட மந்திரங்களினால் உத்தூளனமாகத் தரித்துக் கொண்டு, பஞ்சப் பிரம முதலிய மந்திரங்களினாற் றிரியக்கு திரிபுண்டரமாக ஐந்து தானங்களிற் றரிப்பதுமுண்டு. நால்வகை ஆச்சிரமத்தாருள் பிரமசாரி மேதாவி முதலிய மந்திரங்களையும், சந்நியாசி பிரணவ மந்திரத்தையும் உச்சரித்து ஓர்கால் திரிபுண்டரம் அணியினும் அணியலாம்.

மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரிமெய்ப்பிரணவத்தா
லோதார்வமுறச்சந்நியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டும்.
-சூதசங்கிதை.

விபூதியாற் பயனடைந்தவர் :

திருநீற்றை இகழ்ந்த வங்கதேச ராசனாகிய புயபலன் என்பவன் தன் அரசாட்சியையும் மனைவியையுமிழந்து ஐயமேற்றுப் பின், பிராமணோத்தமரால் திருநீறிடப் பெற்றுப் பகைவரையும் வென்று, மனைவியையும் அரசியலையும் பெற்றனன். காஸ்மீர தேசத்திலிருந்த சுதர்மன் என்னும் பிராமணனும், அவன் தம்பியும் பிரம விஷ்ணுக்களைக் கடிந்து பேசியதனால் அவர்கள் ஊமையாகவும் முடவனாகவும் சாபமிட, அதனை விபூதிகொண்டு ததீசிமுனிவர் போக்கி நற்கதி யடைவித்தனர். நாரண மூர்த்தி இவ்விபூதியைத் தரித்து ஞானத்தை யடைந்ததன்றிப் பிரமனாகிய புத்திரனையும் பெற்றனர். திரிபுர மழிக்கு நிமித்தம் தேர்ச்சாரதியாக நின்ற பிரமன் சரசுவதி தேவியின் பிரிவை யாற்றதவனாய் இரங்கி வருந்த, எம்பரமன் பாரதி வடிவாய் நின்று பாண்டரங்கக் கூத்தாடி விபூதியை அவன் நெற்றியிலிட்டு மயக்கத்தைப் போக்கி யருளினர். சர்ப்பன், பஞ்சமேட்டி, அக்கினி யென்னு மூன்றசுரர்கள் தேவர்களை யெல்லாங் கொல்ல, வீரபத்திரக் கடவுள் அவ்விடத்துச் சென்று விபூதியைத் தூவி யவர்களை யெழுப்பினர். வாமதேவ முனிவரைக் கொல்வான் பிடித்த பிரமராக்கத னொருவன் அவரது திருநீறு பரவப் பூசிய தேக பரிசத்தினால் நல்லறிவும் திவ்விய தேகமும் பெற்றான். பரதார கமனத்தினால் துர்மரணமடைந்து நரகத்தின் மூழ்கிய பிராமணன் தன் பிரேதவுடலில் விபூதி பட்டதனால் சுவர்க்கத்தை யடைந்தனன். பின்னர்ச் சிவலோக முத்தியுங் கிடைக்கப்பெற்றனன். கவுணிய குலதீபமாய், தவ முதல்வராய், சமயகுரவராய் விளங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கூன்பாண்டியனது வெப்பு நோயைத் திருநீற்றினாற் றீர்த்தருளினர். முழுநீறு பூசிய முனிவர் எண்ணிறந்தோர் சிவசாயுச்சிய முத்தியை யடைந்தனர் என்று பெரியபுராணம், அகத்திய பக்தவிலாசம் முதலிய உண்மை நூல்கள் முழங்குகின்றன. விபூதி தரித்த பேற்றினாலே இம்மை மறுமைப் பயனை யடைந்தவர்களின் தொகையை அளவிட்டறிதல் யாவர்க்கும் அரிதரிதேயாம்.

விபூதி தூஷண மறுப்பு :

சிலர், அந்தண சாதியிற் பிறந்துஞ் சிவசின்னமாகிய விபூதி ருத்திராக்கங்களை யிகழ்ந்து கோபி சந்தனமிட்டும், வாயில் மண்ணிட்ட மாயனைப் ப்ரம்பொருளாக மதித்து நெற்றியில் ஊர்த்துவபுண்டரமாகிய மண்ணையிட்டும், வேதாகம விரோதிகளாய், சிவநிந்தகராய், சிவனடியார் தூஷணராய், சிவசின்ன தூஷணராய் அதிபாதகத்திற்கு ஆளாகின்றனர். அந்தந்தோ! அவரறியாமைக்கென் செய்வோம். அவர்கள் சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் செய்த யாகத்திற் சேர்ந்து முன்னர்க் காலத்தில் விலாப்புடைக்க அவிப் பாகங்களை உண்ட பாவங் காரணமாகத் ததீசி மகாமுனிவர் இட்ட சாபத்தினாற் பூமியிற் பிறந்த சிவதூஷண சிவசமய தூஷண சிவதாச தூஷண சிவசின்ன தூஷண சிவாகம தூஷண அதிபாதகராய்ப் பிறந்த பாஷண்டர் வம்சத்திற் நிற்க, இவ்வுண்மைகளை யெல்லாம் அறியாத கிறிஸ்தவர்கள் “மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா” என்றும், “இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா” என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே “நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன” என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மருட்டித் திரிகின்றனர். அக்கிறஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களையெல்லாம் மறந்து இவ்வாறு கூறுதல் பொருந்துமா? ஆகலால் சைவசமயிகள் யாவரும்பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராகரித்தல் முக்கிய கடமையாம். அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணியவேண்டும் எனவும், தேவனது முத்திரைகளைத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றாற் பாவம் நீங்கப்படும் எனவும் கூறுகின்றன. அவை வருமாறு:-

எண்ணாகமம் – 19 – அதிகாரம். 5-9 வசனங்கள்

“கடாரியின் தோலும் மாமிசமும் இரத்தமுஞ் சாணியும் எரிக்கப்படவேண்டும். சுசியாயிருக்கிறவ னொருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப் புறம்பேசுசியான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன். அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தஞ் சுசிசெய்யுஞ் சலத்தின்பொருட்டு வைக்கப்பட வேண்டும். அது பாவத்தைப் பரிகரிக்கும்.”

எபிரேயர் – 9 – அதி. 13 – வச.

“காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும் அசுசிப்பட்டவன் மேலே தெளிக்கப்பட்டுச் சரீர அசுசி நீக்கி அவனைச் சுத்திகரிக்கும்.”

யாத்திராகமம் – 12 அதி, 22, 23, வச.

“இஸ்ரவேலர் எகிப்து தேசத்தி லிருந்தபொழுது யெகோவா விதித்தபடி ஆட்டு இரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்கா லிரண்டிலும், நிலையின் மேல்விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்களென்றும், அந்தத் தேவவம்சத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாளமுள்ள விடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாத வீடுகளிற் போய் அங்குள்ள தலைப்பிள்ளைகளைக் கொன்றார்” என்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.

வெளி – 9 அதி, 4 வச.

“தேவனுடைய முத்திரையை நெற்றிகளில் தரியாத மனுடர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.”

இங்ஙனஞ் சொல்லப்பட்டிருக்கவும் கிறிஸ்தவர்கள் அநியாயமாகத் தூஷித்துத் திரிதல் பாவமேயாம். சிவத்தின் அறிகுறியாகவுள்ள விபூதி ருத்திராக்கங்களைச் சைவர்கள் அணிதல் அறியாமையும் பயனின்மையுமாய் முடியுமெனின், கிறிஸ்தவர்கள் கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் முறையே இயேசுக் கிறிஸ்துவின் மாமிசமாகவும், இரத்தமாகவும், அல்லது அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட்கொண்டு வருவது அறிவும் பயனுமாமா? இங்ஙனனே மத்தேயு 26-ம் அதிகாரம் இருபத்தாறாம் இருபத்தெட்டாம் வாகனங்களில் “யேசு அப்பத்தை யெடுத்துத் துதிசெய்து அதனைப்பிட்டுச் சீஷருக்குக் கொடுத்து நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீரமென்றார்” எனவும், பின்பு பாத்திரத்தையும் எடுத்துக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள். இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தமென்றார் எனவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியே கிறிஸ்துவினாலே அப்பமுந் திராட்ச ரசமும், மாமிசமாகவும், இரத்தமாகவும் விசேஷமடைந்தன வென்று பைபிலிலேயே காணப்படுகின்றன. அவ்வாறே கிறிஸ்தவர்களும் அவை இரண்டனையும் ஒப்பி இராப்போசனமென்று பீடத்தின்மேல் வைத்து மாமிசமாகவும் இரத்தமாகவும் பாவித்து உட்கொள்கின்றனர். அங்ஙனமாயவர்கள் சிவத்துவப் பேற்றிற்கும் திருவருட் பேற்றிற்கும் அறிகுறியாக நம்பெருமானாற் கொடுக்கப்பட்டு அணியப்பட்டுவருஞ் சிவசின்னங்களைத் தூஷித்தல் யாதாய் முடியும்? சிலுவைக்குறியைக் கழுத்தில் தரித்திருப்பதும், வீடுகள், பிரதிமைகள், சிகரங்கள், சுடுகாடு முதலியவற்றில் அதனை காட்டுதலும் அவையாமா? இவற்றைச் சிந்தித்து அடங்காது நிந்தித்தல் தாயைப்பழித்து மகள் குற்றத்துக்குள்ளாய தன்மை போலுமாம்.

பட்டினத்தடிகள் முதலாய சிவஞானிகள் சொல்லியவற்றிக்குச் சமாதானமாக உண்மைப் பொருளைக் கூறுவாம். பட்டினத்தடிகளூக்கு விபூதி தரித்தல் பிரயோசனமில்லை யென்பது கருத்தாயின், அவரே பின்னரும் “ஐயுந் தொடர்ந்து” என்னுஞ் செய்யுளில், “செய்யுந் திருவொற்றியூருடையீர்திரு நீறுமிட்டுக் – கையுந் தொழப்பண்ணியஞ் செழுத் தோதவுங் கற்பியுமே” எனவும், “ஊரீருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் – போரீர் சமணைக் கழுவேற்று நீற்றை” எனவும், “நாய்க்குண்டு,” என்னுஞ் செய்யுளில், “மதி யாமல்வரும் – பேய்க்குண்டு நீறு” எனவும், “உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு” எனவும் கூறியருளியது என்னையோ? மற்றைய சிவஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி யிரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால் அவைகள் ஒன்றை யொன்றழிக்க மாட்டாவாம். அவைகட்குச் சமாதானமிருக்கின்றது. அவ்வுண்மையைக் கேட்டு அறியாமல் எங்கேயாயினும் ஒரு செய்யுளை யெடுத்துப் படித்து, இப்படிச் சொல்லியிருக்க நீங்கள் செய்வது தவறு தவறு என்று சொல்வது அறியாமையாம். மருந்துண்பவ னொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அநுமானத்தோடு உண்ணாமையையும், அவபத்தியங்களைத் தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும், வைத்திய சாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இம்மருந்தினாற் பயன் யாது என்றக்கால் அவற்கு அம்மருந்து உண்ணக் கூடாது என்பது கருத்தாகுமோ? அன்றே. அதுபோல மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும், கொலைமுதலிய பாவங்களைத் தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர்செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது என்றக்கால். அவர்க்கு அக்கிரியைகள் செய்யற்க வென்பது கருத்தாமோ? அன்றே அங்ஙனமே விபூதிருத்திராக்க தாரணஞ் செய்வோர் அன்புடன் செய்யாமைகண்டு அதனாற் பிரயோசனமில்லையெனின், அவர்க்கு அது செய்யவேண்டாமென்பதுகருத்தோ? இல்லை! இல்லை!! இதனைக் கிறிஸ்தவர்களும் அறிந்து அடங்குவாராக.

விபூதி தத்துவம் :

பசுவின் மலத்தை அக்கினிகொண்டு தகித்தலால் உண்டாகியது திருநீறெனலால், அதனுண்மையை யறியுமிடத்து ஞானம் பயக்கு மென்பது விளங்கும். எங்ஙனமெனில் பசு என்பதற்குப் பந்திக்கப்படுவது என்பது பொருள். எனவே பசு என்பதனால் ஆணவம் கன்மம் மாயை யென்னு மும்மலங்களானும் பந்திக்கப்பட்ட ஆன்மா என்பது குறிக்கப்படும். அதன் மலமாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் சிவஞானமாகிய அக்கினி கொண்டு தகித்தலால் உண்டாகுஞ் சிவத்துவப் பேற்றைத் தரிப்பவர் யாவரோ அவர் முத்தியடைவார் என்னுமுண்மையும் அறியப்படும். அன்றியும் நேராக வருகின்ற கங்கையைப் போல விளங்கும்படி வெண்ணிற முடைத்தாக நெற்றியினிடத்திற் றிரிபுண்டரமாக (முக்குறியாகத்) தரித்திருக்கும் விபூதியானது, காமம் வெகுளி மயக்கம் என்னு முக்குற்றங்களையும், சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னு முக்குணங்களையுங் கெடுத்து, ஞானவெற்றி யுண்டாக உயர்த்தப்பட்ட மூன்றுகொடிகள் போலவும் விளங்காநிற்கும், இவையன்றிச் சகசீவபரம் என்னுந் திரிபுடிகளையும், உலகவீடணை, தனவீடணை, புத்திர வீடணை என்னும் ஈடணாத்திரவியங்களையும், பிராரத்துவம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் முவினைகளையும், சந்தேகம் விபரீதம் மயக்கம் என்னும் மூன்றுபுத்திகளையும், தூலம் சூக்குமம் காரணம் என்னும் மூவுடம்புகளையும், சரியை கிரியை யோகம் என்னும் முச்சாதனங்களையும், மேல் கீழ் மத்தி என்னும் மூவுலகங்களையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தையும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூவிடச் சுட்டினையும், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி யென்னும் மூன்றவத்தைகளையும், பிரமலோகம், விஷ்ணுலோகம் உருத்திரலோகம் என்னும் முப்பதவிகளையும், சிவசாலோக்கியம் சிவசாமீப்பியம் சிவசாரூப்பியம் என்னு மும்முத்திகளையும், காலம் தேசம் வஸ்து என்னும் முப் பரிச்சேதங்களையும், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னும் பாவபுண்ணிய வழக்கம் மூன்றனையும், வாதம் பித்தம் சிலேத்துமம் என்னும் முப்பிணிகளையும், சுசாதிகம் விசாதிகம் சுகதம் என்னும் முப்பேதங்களையும், மனம் வாக்கு காயம் என்னுந் திரிகரணங்களையும், உத்தேசம் இலக்கணம் பரீக்கை என்னும் போதப் பிரகாரங்களையும், அம்மை இம்மை உம்மை என்னும் முப்பிறப்பினையும்நீக்கி நின்று மேல்நிலையாய பெரும்பேற்றைத் தெரிவிக்குங் குறி என்று தெளியவும்படும்.

நீற்றுக் கொடிபோ னிமிர்ந்து காட்டியும்.

-திருவாசகம்.

உற்று நேரென வருந்திரி பதகை போலொளிர்
நெற்றி மேலவ ரிடுந்திரி புண்டர நீறு
குற்ற மூன்றையுங் குணமொரு மூன்றையுங் குலைத்து
வெற்றி யாகவே யுயர்த்தமுப் பதாகைபோல் விளங்கும்.

-திருவிரிஞ்சைப் புராணம்

ஆதி பகவன் ஞான வடிவழலிற் பூத்து நித்தியமா
யணிந்தோர் தமக்கு வசிகரமா யருந்தினோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை நீக்குமொருநற் குறிகாட்டி
நிகழ் பேரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் டிருநீறே.

-திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

********

உருத்திராக்க மகிமை

உருத்திராக்கம் என்பது சிவசின்னங்களுள் ஒன்று உருத்திர + அக்கம் என்னுஞ் சொற்கள் உருத்திராக்கம் எனத் தீர்க்க சந்தியாய்ப் புணர்ந்து. உருத்திரன் என்னுஞ் சொல்லுக்கு வைணவ மதத்தினர் உரோதனம் (அழுகையைச்) செய்பவன் எனப்பொருள் விரித்து மயங்குவர். “இன்னலங் கடலுட் பட்டோர் யாரையு மெடுக்கு மாற்றானுன்னரும் பரமமூர்த்தி யுருத்திர னெனும்பேர் பெற்றான்” என்னுங் கந்தபுராணத் திருவிருத்தப்படி, பிறவித்துன்பம் என்னும் பெருங்கடலுள் அகப்பட்டுழலும் ஆன்மாக்களை யெல்லாந் திருவருள் என்னுந் தெப்பத்தினால் எடுத்து முத்திக்கரை சேர்ப்பவன் என்பதே உண்மையான பொருளாம். அக்கம் என்பதற்குக் கண் என்பது அருத்தம். எனவே உருத்திராக்கம் என்பதற்குச் சிவபெருமானது கண் எனப் பொருள் கொள்க. பிறப்பு இறப்பு இல்லாத பெருமானாரது திருமுகக் கண்களாய், பழமையனவாய், ஒழியாத பிறவித் துன்பங்களைப் போக்குவனவா யுள்ளன உருத்திராக்கங்களேயாம். பரமநாதனது திரிநேத்திரங்களி னின்றுந் தோன்றிச் சிறந்தவாய் விளங்கலால் அக்கம் (கண்) எனவும் பெயர் பெற்றன. உவமவாகு பெயராய்க் கண்போன்றன வென்பதன்றிக் காரியத்தைக் காரணமாக உபசரித்த தென்னலுமாம். ஒருவனை நாயகனாகவுடைய பதிவிரதைக்கு மஞ்சள் அணிவதும் மங்கிலியந் தரித்திருப்பதும் முறையாமாறு போல, சிவபெருமானைப் பரமபதியாகக் கொண்டு வழிபடுஞ் சைவசமயிகள் யாவருக்கும் பூசுவது வெண்ணீறும் பூண்பது கண்டிகையுமேயாம். திருநீறொன்றே முத்திப் பேற்றை யளிக்குமாயின் உருத்திராக்கமணி தரித்தல் அவசியமல்லவே என்னின், உடம்பினின்றுந் தோன்றும் வியர்வையினாலும், விசேடித்த நீர்விளையாட்டினாலும், மழையினாலும், மனிதரது சரீரங்கள் நெருங்கி உராய்தலினாலும், தெய்வீகம் அமைந்த விபூதியின் வடிவு மறையப்பெறும். மறைந்தால் கொடிய பூதங்களினாலும், பசாசுகளாலும், இராக்கதர், அசுரர் முதலிய தீயவராலும், இராகு கேது முதலிய கிரகங்களினாலும் வருந்துவார்கள். விளங்காநின்ற சிறந்த உருத்திராக்கமணி யொன்று தரிக்கின், கோரப்பற்களையுடைய பூதம் முதலியனவற்றால் வருந்துன்பங்கள் அணுகாவாம். ஆதலின் இரண்டும் அணியுமாறு விதிக்கப்பட்டன.

அலங்கு மாமணி யுருத்திர வக்கமொன் றணியின்
விலங்கெ யிற்றுவெம் பூதமே முதலிய மேவா
புலங்கொண் மாமணி புனைதரிற் போக்குறா ததனா
விலங்கு மாமணி நீற்றொடும் புனைவதற் கிசையும்.

– உபதேசகாண்டம்.

உருத்திராக்க விசிட்டம்

முத்துமணி, பவளமணி, பொன்மணி, தாமரைமணி பளிங்குமணி, புத்திரதீபமணி, சங்குமணி, துளசிமணி முதலாய பலவகை மணிகளினுஞ் சிவபெருமானது கண்மணியாகிய உருத்திராக்கமணியே சிறந்தது. புத்திரதீபமென்பது ஓர்வகை இலந்தைக்காய். இதனைப் பத்திராட்சம் என்று வழங்குதலுமுண்டு.

உண்டு மணிகள் பலவு மவற்றுள்ளுங்
கண்டி விசிட்டமெனக் காண்.

-சைவ சமய நெறி

உருத்திராக்க வரலாறு :

முற்காலத்தில் தாரகன் என்னும் அசுரன் எந்தையாகிய கந்தவேளாற் கொல்லப்பட்ட பின்பு, அவன் புத்திரர்களாகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி யென்னு மூன்றசுரர்களும் வரபலத்தினால் முறையே பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில் என்னும் மூன்று நகரங்களைப் பெற்றுச் சிவபத்தி யுடையராய்ச் சிவபூசை யாதியன செய்தும், தேவர்கள் யாவருந் தமது தந்தையைக் கொல்லு வித்தாராகலின் பழிக்குப் பழிவாங்க நினைத்து வருத்துவாராயினர். அத்துன்பங்களை யெல்லாஞ் சகிக்காத விஷ்ணு, பிரமன் முதலிய தேவர்கள் யாவருஞ் சென்று சிவபெருமானது திருச்சந்நிதானத்தை யடைந்து முறையிட்டுப் புலம்பினர். அதனைத் திருச்செவியாற் கேட்டவளவிலே பரமநாதனாகிய சீகண்ட பரமசிவன் அடைக்கலம் புகுந்த தேவர்களை நீங்காது காத்தலும், தம்மீது அன்புடையராய்ப் பூசையாதியன செய்தொழுகும் அசுரரை யொறுக்காது காத்தலும் முறையாமாதலின் மெளனங் கொண்டவராய், தேவர்களின் பெருந்துன்பைத் தமது திருவுளத்தடைத்து இரக்கமுற்று, அவர் துன்பம் நீங்குமெல்லையை நோக்கி, ஆயிரந் தேவவருடமளவுந் தமது மூன்று திருக்கண்களையும் மலர்த்திக் கொண்டிருப்ப, அவைகளினின்றும் நீர் பொழிந்தன. சூரிய வடிவாகிய வலக்கண் பொழிந்த நீரிலே பன்னிரண்டு உருத்திராக்க மரமும், சந்திர ரூபமாகிய இடக்கண் பொழிந்த நீரிலே பதினாறு உருத்திராக்க மரமும், அக்கினி யுருவாகிய நெற்றிக் கண் பொழிந்த நீரிலே பத்து உருத்திராக்கமும் உதித்தன. இடக்கண்ணில் வெண்ணிற வுருத்திராக்ஷந் தோன்றிற்று. வலக்கண்ணினின்று கபிலநிற உருத்திராக்கமும், அதினின்று செந்நிற உருத்திராக்கமும், அதினின்று பொன்னிற வுருத்திராக்கமுந் தோன்றின. நெற்றிக்கண்ணிற் பொழிந்த நீரினின்றும் கருநிற வுருத்திராக்கந் தோன்றிற்று. அவைகளுள் ஒவ்வொன்றையுஞ் சத்தி, விஷ்ணு, பிரமன், சத்தமாதர்கள், அட்டவித்தியேசுரர், திக்குப்பாலகர், ஏகாதசருத்திரர், வாசுதேவர் முதலிய பன்னிருவர், சதருத்திரர், அட்டவசுக்கள், அசுவினி தேவர்கள், துவாதசாதித்தர்கள், ஆதிசேடன், முனிவர் முதலிய கணங்கள் யாவரும் பிரீதியாகக் கேட்டுச் சிவபெருமான் ஆஞ்ஞைப்படி தரித்துக்கொண்டனர்.

உருத்திராக்கத்தின் பெயர்களுங் காரணமும் :

உருத்திராக்கத்தை அக்கம், கண்டி, கண்டிகை, கண்மணியெனச் சொல்வர். மந்திரவாதியின் கண்கள் விடத்தை நீக்குதல் போலவும், மீன்கள் முட்டையிட்டுத் திரும்பித் தங்கண்களாற் பார்த்த மாத்திரத்தில் முட்டைகள் எல்லாம் மீனுருவமடைதல் போலவும், சிவபெருமான் தமது திருக்கண்களின் நோக்குதலாகிய சட்சு தீ¨க்ஷயினால் ஆன்மாக்களின் மலங்களை நீக்கித் திருவருளுருவாக்கித் தம்முடன் இரண்டற்று நிற்கும் அத்துவித முத்திப் பேற்றைக் கொடுத்தருளுவர். அதுபோலத் தன்னை யணிந்த அன்பரின் மும்மலங்களையும் நீக்கித் திருவருட் பேற்றைக் கொடுத்துச் சிவபெருமானது கண்போல விளங்கலின் அக்கம் எனப் பெயர் பெற்றது. குற்றங்களையுந் துன்பங்களையும் கண்டிப்பதனால் கண்டி, கண்டிகையெனப் பெற்றது. சிவபெருமானது திருக்கண்களினின்றும் பொழிந்த முத்துப் போன்ற நீர்வடிவமாய் நிற்றலின் கண்மணி யெனப்பெயர் வாய்ந்தது. கண்ணாகிய மணியென இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்வது முண்டு.

உருத்திராக்க வருணம் :

வெண்மைநிற வுருத்திராக்கம் அந்தணசாதி எனவும், பொன்னிற மணியும் செந்நிறமணியும் க்ஷத்திரியசாதி எனவும், வெண்மையுஞ் செந்நிறமுங் கலந்துள்ள மணி வைசியசாதி யெனவும், கருநிற மணி சூத்திரசாதி யெனவுங் காண்க.

நான்கு வருணத்தாருக்கும் உரியமணி :

வெண்ணிற மணி பிராமணருக்கும், கருமை சேர்ந்த பொன்னிற மணியாகிய கபிலநிற மணியும் செந்நிற மணியும் க்ஷத்திரியருக்கும், பொன்னிறமணி வைசியருக்கும், கருநிறமணி சூத்திரருக்குந் தரித்தற்குரியனவாம்.

உருத்திராக்க வகை :

வெண்ணிறமணி, கபிலநிறமணி, செந்நிறமணி, பொன்னிறமணி, கருநிறமணியென ஐந்து வகைப்படும். அவை யொவ்வொன்றும் ஒருமுகமணி முதற் பதினாறுமுகமணியெனப் பதினாறு விதப்படலால் எண்பது வகைப்படும்.

உருத்திராக்க அளவு :

வெவ்வேறு தானங்களில் தரிக்கப்படும் உருத்திராக்க மாலைகளுக்கு எண்ணளவு, எல்லையளவு என இருவகையளவுண்டு. அவற்றுள் எண்ணளவாவது இன்ன தானங்களுக்கு இத்தனை யெண்ணுள்ள மணிகள் தரிக்க வேண்டுமெனபதாம். அதுவருமாறு:- குடுமியிலே ஒருமணியும், தலையிலே முப்பத்தாறு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறுமணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியுங் கொண்டமாலை தரித்தலாம். எல்லையளவாவது இன்ன தானத்திற் றரிக்கும் மாலை யிவ்வளவினதா யிருக்க வேண்டு மென்பது. அது வருமாறு:- கையிற் றரிக்கும் மாலை கைப் பெருமையினதாகவும், சிரமாலை சிரத்தினளவாகவும், மார்பிற் றரிக்கப்படும் மாலை பிடர் முதல் நாபி வகையினதாகவும், அல்லது மார்பு அளவினதாகவுஞ் செய்யப்படுதலாம்.

ஆயிரமணிந்தவர் அரனெனப்படுவர் :

உச்சி, கழுத்து எனச் சொல்லப்பட்ட தானங்களெல்லாவற்றினுஞ் சேர்த்து ஆயிரம் என்னுங் கணக்காக உருத்திராக்கமணி அணிந்தவர் யாவரானாலும் அவரைச் சிவந்த சடைமுடியை யுடைய பரமசிவன் என்று விஷ்ணு, பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும், மற்றைய கணத்தவர்களும் வணங்குவர் என்று வேதாகமங்கள் முழங்குமேயாயின் அவரை மனிதரென்று கூறல் தகாது.

ஆய மாமணி யாயிரம் புனைந்திடி லவரை
மாய னான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயு மால்விடைப் பரனெனப் பணிகுவ ரென்றாற்
றூய மாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்.

-பிரமோத்திர காண்டம்.

தரியாமையால் வருங்குற்றம் :

உருத்திராக்கத்தைத் தரிப்பதற்குக் கூசுகின்றவர் மக்களுட் பதரெனப்படுவர். அக்கீழ் மக்களை சுத்த சாட்குண்ய பதியாகிய சிவபெருமான் வெறுத்துப் பார்த்தற்குக் கூசுவர். அவர் செய்யும் சிவபூசை, சிவமந்திர செபம், சிவாலய சேவை முதலிய புண்ணியங்க ளெல்லாம் நிஷ்பலமாகும்.

தரிக்குங் காலங்கள் :

சிவமந்திர செபம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், சிவபுராண படனம், தேவார திருவாசக பாராயணம், அவைகேட்டல், தீர்த்தமாடல், விரதமநுட்டித்தல், சிராத்தஞ்செய்தல் முதலிய இவை செய்யுங் காலங்களில் ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

தரிக்கலாகாத காலங்கள் :

சயனிக்குங் காலத்தும், மலசல மோசனத்தும், புணர்ச்சியினும், நோயினும், சனனாசெளகம் மரணாசெளசம் என்னு மிக்காலங்களிலும் உருத்திராக்க தாரணஞ்செய்தல் ஆகாவாம். ஆயினும் சிகையினும், காதுகளினும், உபவீதத்தினும் எப்போதுந் தரித்துக் கொள்ளலாம். உருத்திராக்கந் தரித்துக்கொண்டு மாமிச போசனம், மதுபானம், வியபிசாரம் முதலிய பாவங்களைச் செய்தவர்களும், ஆசாரமில்லாது நடப்பவர்களுந் தப்பாது நரகத்தில் விழுந்து வருந்துவர்.

உருத்திராக்க தாரணமுறை :

எவ்வெத் தானங்களுக்கு எவ்வெவ்வளவு சொல்லப்பட்டதோ அவ்வவ்வளவு தரிக்க. முகம் முகத்தைப் பொருந்தவும், அடி அடியைப் பொருந்தவும் இடையிடையே பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும், முத்தானாலும், பவளமாயினும், பளிங்காயினும் இட்டு, வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழு இழையினாலாக்கிய கயிற்றினாற் கோத்து, நுனியிரண்டையும் ஒன்றாகக் கூட்டி யதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து முடிசெய்து தரிக்க பொன் வெள்ளி தாமிரம் முதலிய இவற்றையிடாது நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்ற முடிச்சை யிடுதலுமாம்.

தரிக்குந் தானங்கள் :

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள் என்னும் எட்டுமாம். ஸ்நானஞ்செய்யுங் காலத்தில் உருத்திராக்கந் தரித்தல் வேண்டும். ஏனெனில் உருத்திராக்க மணியிற் பட்டு வடியுஞ் சலம், கங்கா சலத்துகுக்குச் சமமாகும் என்று சிவாகமங்கள் முழங்குமாகலால்.

தரிக்கு நியமமும் மந்திரமும் :

உருத்திராக்கமணியைக் குடுமியிலுந் தலையிலும் ஈசான மந்திரஞ் சொல்லியும், காதுக ளிரண்டினும் தற்புருட மந்திரத்தினாலும், கழுத்தில் அகோர மந்திரத்தினாலும், மார்பில் வியோம வியாபினி மந்திரத்தினாலும், புயங்களிலும் கைகளிலும் பிரசாத மந்திரத்தினாலுந் தரிக்கவேண்டும். உருத்திராக்க மாலையை யன்புடன் தரிசிப்பவர்க்கு இலக்ஷமடங்கு பலமுண்டாம். பரிசித்தவருக்குக் கோடிமடங்கு பலமுண்டாம். சரீரத்தில் தரித்தவருக்கு ஆயிரகோடி மடங்கு பலமுண்டாம். கையிற்கொண்டு செபித்தவருக்கு அநந்த மடங்கு பலமுண்டாகும். ஆறுமுகமணி வலப்புயத்தினும், ஒன்பது முகமணி இடப்புயத்தினும், பதினொரு முகமணி சிகையிலும், பன்னிரண்டு முகமணி காதுகளிலும், பதினான்கு முகமணி சிரசிஞ்ந் தரிப்பது உத்தமமாம்.

உருத்திராக்க தாரணபிரீதி :

ஒருமுக மணி தரிக்கிற் சிவனுக்கும், இருமுக மணி தரிக்கிற் சிவசத்திக்கும், மூன்றுமுக மணி தரிக்கின் மும்மூர்த்திகளுக்கும், நான்குமுகமணி தரிக்கிற் பிரமனுக்கும், ஐந்துமுக மணி தரிக்கிற் சதாசிவ மூர்த்திக்கும், ஆறுமுக மணி தரிக்கின் அசுரரைத் தடிந்த அறுமுகப் பெருமானுக்கும், ஏழுமுக மணி யணியின் சத்த மாதர்களுக்கும், எட்டு முக மணி தரிக்கின் கங்கை முதலிய நவதீர்த்தங்களுக்கும், பத்து முக மணி தரிக்கின் பத்துத் திக்குப்பாலர்களுக்கும், பதினொருமுகமணி தரிக்கின் பதினோ ருருத்திரர்களுக்கும், பன்னிரண்டுமுகமணி தரிக்கின் விட்டுணு மூர்த்தியாகிய வாசுதேவர் முதலிய பன்னிருவர்களுக்கும், பதின்மூன்று முகமணி தரிக்கின் சதருத்திரர்களுக்கும், பதினான்குமுக மணி யணியின் அசுவினி தேவதைகளுக்கும், அட்ட வசுக்களுக்கும், பதினைந்து முகமணி தரிக்கிற் சந்திரன் வருணன் முதலிய தேவர்களுக்கும், பதினாறுமுக மணி தரிக்கின் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரமா, விஷ்ணு, சிவபெருமான் யாவர்க்கும் பிரீதியாம் என்றறிக.

——————————————————————————–

மும்மூர்த்திகள் – பிரமன், விட்டுணு, உருத்திரன். சத்தமாதர்கள் ஆவார் – பிரமாணி, நாராயணி, மாகேசுவரி, கெளரி, வராகி, உருத்திராணி, இந்திராணி என்பவர்களாம். அட்டவித்தியேசுரர் ஆவார் – அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், எகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி என இவர்களாம். நவதீர்த்தங்களாவன – கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணாதி, துங்கப்பத்திரை என்பனவாம். பத்துத் திக்குப் பாலகர் – இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வா¡யு, குபேரன், ஈசானன், பிரமன், விஷ்ணு என்பவர்களாம். பிரமன் பூமிக்கும், விஷ்ணு ஆகாயத்திற்கும் பாலகர். பதினொரு ருத்திரர் – மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகி¢தன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, செளமியன் என்பவர். முப்பத்து முக்கோடி தேவராவார் – ஆதித்தர் பன்னிருவர், அச்சுவினிகள் இருவர், ஈசர் பதினொருவர், வசுக்கள் எண்மர். கோடி ஈண்டு முடிவு எனப் பொருள்படும்.

——————————————————————————–

உருத்திராக்க அதிதேவதைகள் :

ஒருமுக மணிக்கு அதிதேவதை தற்பரசிவன், இருமுக மணிக்கு அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவன், மூன்றுமுகமணிக்கு அக்கினிதேவன், நான்குமுக மணிக்குப் பிரமதேவன், ஐந்துமுக மணிக்கு அதிதேவதை காலாக்கினிருத்திரர், ஆறுமுக மணிக்கு அதிதேவதை எம்பெருமானாராய சுப்பிரமணியக் கடவுளாம். ஏழுமுக மணிக்கு ஆதிசேடன், எட்டுமுக மணிக்கு அதிதேவதை முன்னவராய விநாயகக் கடவுளாம். ஒன்பதுமுக மணிக்கு வைரவ மூர்த்தியாகும். பத்து முகமணிக்கு விட்டுணுவும், பதினொரு முகமணிக்குப் பதினொரு ருத்திரரும், பன்னிரண்டு முகமணிக்குப் பன்னிரண்டாதித்தரும், பதின்மூன்று முகமணிக்குக் குமாரக் கடவுளும், பதினான்கு முகமணிக்குச் சிவமும் சத்தியும், பதினைந்து முகமணிக்குச் சதாசிவ நாயனாரும், பதினாறு முகமணிக்கு அனந்தேசுரந் தேவதையாம்.

அவற்றின் பலன் :

ஒருமுக மணி தரிக்கின் பிரமகத்தியைப் போக்கும். இருமுகமணி தரிக்கின் கோகித்தியை நீக்கும். மூன்று முகமணி யணிந்தவர் ஸ்திரீகத்தி நீங்கப்பெறுவர். நான்கு முகமணி யணிந்தவர் நரகத்தி தொலையப் பெறுவர். ஐந்து முகமணி யணிந்தாற் புணரத் தகாதவர்களைப் புணர்ந்ததனால் வரும் பாவமும், புசிக்கற் பாலன வல்லாதவற்றைப் புசித்ததனால் வரும் பாவமும் போம். ஆறுமுகமணி தரிக்கின் அது பிரமகத்தி முதலிய மகாபாதகங்களை யெல்லாம் நாசமாக்கும். ஏழுமுகமணி தரிக்கின் கோகத்தியையும் பொற்களவையும் போக்கும். எட்டுமுகமணி யணிந்தாற் குருபன்னியைப் புணர்ந்த பாவமும், பொற்களம், துலாபுருடதானம், இரணிய கருப்பதானம், திலபதும தானம், சொன்ன பூமிதானம், சொன்னதேனு தானம், இலக்குமிதானம், திலதேனுதானம், சகத்திர கோதானம், இரணிய வசுவதானம், இரணிய கன்னிகாதானம், சொன்ன கசமுதலிய தானங்களை வாங்கிய பாவமும், பிறர் அன்னத்தைக் கவர்ந்துண்ட பாவமும் நீங்கும். ஒன்பது முகமணி தரிக்கின் ஆயிரம் பிராணகத்தியும், நூறு பிரமகத்தியும், பூதம், பிசாசம், சர்ப்ப முதலியவற்றாலாகும் விக்கினங்களும் நீங்கும்; அணிமா முதலிய சித்திகளும் முத்தியு முண்டாகும். பத்து முகமணி தரிக்கின், அது நான்கோள் பேய் பூதம் பிரமராக்கதம் முதலியவற்றாலுண்டாகுந் திங்குக ளெல்லாவற்றையும் போக்கும். பதினொரு முகமணி தரித்தால் அது ஆயிரம் அசுவமேத பலத்தையும், நூறுவாச பேய பலத்தையும், இலக்ஷங் கோமேத பலத்தையுங் கொடுக்கும். பன்னிரண்டு முகமணி தரிக்கின் அது கோமேத பலத்தையும், அசுவமேத பலத்தையும், சுவர்ணதான பலத்தையுங் கொடுக்கும். பதின்மூன்று முகமணி தரிக்கின் அது சர்வாபீட்டத்தையுஞ் சர்வ சித்தியையுங் கொடுக்கும்; பிதாவையும், மாதாவையும், சகோதரரையும், புத்திரரையும், கருவையுங் கொன்ற பாவத்தையும் போக்கும். பதினான்கு முகமணி தரித்தால் தேவர் முனிவர் முதலாயினோ ரெல்லாரையும் வசப்படுத்திச் சிவபதத்தைக் கொடுக்கும். பதினைந்து முகமணி தரிக்கின் சகல பாவங்களையும் நீறாக்கும்; இந்திரன், பிரமன், விஷ்ணு முதலினோரது பதவிகளினுள்ள போக இன்பங்களை வசமாக்கும். பதினாறு முகமணி தரிக்கின் சிவசாயுச்சிய வாழ்வையளிக்கும். இவற்றுள் பதினாலு, பதினைந்து, பதினாறு முகமணிகள் கிடைப்பதருமை யருமை,

வேதியர்க்கனை யத்தனுக் கொண்மக லினுக்குத்
தீதி ழைத்தவன் கள்ளுண்ணி செய்ந்நன்றி செற்றோன்
போத நற்குரு தற்பரன் பொன்கொளி யென்னும்
பாதகத்தினி னீங்குவன் பரன்மணி தரிப்பின். – சித்தாந்தசிகாமணி.

செபமாலை இலக்கணம் :

உருத்திராக்கத்தைத் தரிப்பதே யன்றிச் சிவமந்திரம், தேவி விநாயகர் வைரவர் வீரபத்திரர் கந்தர் என்னு மிவர்களின் மந்திரங்களையுஞ் செபித்தற்கு மாலையாகக் கொள்ளுதலும் விசேடமாம். ஸ்ரீ பஞ்சாக்கராதி செபிப்பதற்கு விரலினும் விரலிறை யெண்மடங்கதிகமாம். அதனினும் புத்திர தீபமணிமாலை பத்து மடங்கு அதிகம். அதினும் பவளமணி மாலை ஆயிர மடங்கதிகம். அதனினும் படிக மணிமாலை பதினாயிர மடங்கதிகம். அதனினும் முத்துமாலை இலக்ஷமடங்கு அதிகம். அதனினுந் தாமரைமணிமாலை பத்திலக்ஷமடங்கு அதிகம். அதனினும் பொன்மணிமாலை கோடி மடங்கதிகம். அதனினுந் தருப்பைப் பவித்திர முடிச்சுமாலை பத்துக்கோடி மடங்கு விசேடித்தது. அதனினும் உருத்திராக்க மாலை யநந்தமடங்கு அதிகம். ஆகலால் உருத்திராக்க மணிமாலையையே செபமாலையாகக் கொள்க. செபமாலைக்கு இரண்டு, மூன்று, பன்னிரண்டு, பதின்மூன்று முகமணிகள் ஆகாவாம். 108, 54, 27 என்னும் அளவினவாய மணிகளாற் செய்க. போகத்தை விரும்பினவன் இம்மூவகை மாலைகளுள் ஒன்றாற் செபிக்க. முத்தியை விரும்பினவன் 25 மணிகொண்ட மாலையினாற் செபிக்க. செபமாலையை நாயகமணி யில்லாமலுஞ் செய்தலுண்டு. அதனாலே பாவமுமில்லை; பலனும் அதிகம் இல்லை. செபிக்கும்போது செபமாலை அந்நியர் கண்ணுக்குப் புலப்படிற் செபங்கள் பிரயோசனப்படா. ஆகலால் அதனைப் பிறர்காணாவண்ணம் பரிவட்டத்தினால் மூடிக்கொண்டு செபிக்கக்கடவர். செபிக்கும் போது செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசையுறிற் பாவமுண்டாம். அதனை நடுவிரல் மூன்றினும் வைத்துப் பெருவிரலினாலே தள்ளிச் செபிக்க. முத்திகாமி செபமாலையை மேனோக்கித் தள்ளியும், போககாமி கீழ் நோக்கித் தள்ளியுஞ் செபிக்க, நாயக மணியைக் கடந்து செபிக்கிற் பாவஞ் சேரும்.

செபமாலைக்கு மணி கொள்ளுமிடத்து எல்லாம் ஒரே விதமான முகங்களை யுடையனவாகக் கொள்ளுதலே தகுதி. பலவித முகமணிகளையுங் கலந்து செய்யிற் குற்றமாகும்.

செபமாலைப் பிரதிட்டை :

முற்சொல்லிய இலக்கணப்படி கோவை செய்த செபமாலையைப் பரமசிவனைப் பூசை பண்ணுவதுபோற் பூசை செய்து கொள்ளக் கடவர். பிரதிட்டை செய்த மாலை கொண்டு செபிக்கினன்றிப் பெரும்ப்ய னெய்தாரெனச் சிவாகமங்கள் செப்பாநிற்கும். அப்பிரதிட்டையைக் கூறுவாம். உருத்திராக்க மாலையைச் சுத்தமுள்ள மண்டபத்திலே பீடமொன்றனில் எழுந்தருளச் செய்து, ஓம் சத்தியோசாதாய ந்ம என்று எண்ணெய்க் காப்பு முதலியவற்றால் அபிடேகஞ் செய்து, ஓம் வாமதேவாய நம என்று குச்சுப்புல்லுச் சாத்தி, ஓம் இருதயாய நம என்று கந்த புட்பங்கள் சாத்தி, ஓம் அகோராய நம என்று தூப தீபங்கொடுத்து, ஓம் தற்புருடாய நம என்று திருவொற்றாடை சாத்துக. அதன்பின் ஒவ்வோர் மணியையுந் தொட்டு ஓம் ஈசானாய நம என்று நூறு நூறுருவிற் குறையாமல் அபிமந்திரித்து, நாயக மணியைத் தொட்டு ஈசானாதி பஞ்சப் பிரம மந்திரங்களினாலே நூறு உருக் குறையாமற் செபித்துப் பூசை செய்து கொள்ளக்கடவர்.

செபமாலை வகையும் பலமும் :

இங்ஙனங் கொள்ளப்பட்ட செபமாலை யில்லாவிடின் புத்திரதீபமாலை, சங்கு மணிமாலை, பவள மணிமாலை, முத்துமணி மாலை, படிக மணிமாலை, தாமரை மணிமாலை, பொன்மணிமாலை, தருப்பை முடிச்சு மாலை யென்னு மிவைகளினொன்று கொண்டு செபிக்கக் கடவர். இவைகளுங் கிடையாத விடத்து விரலினாலேனும், விரல் இரேகையினாலேனுஞ் செபிக்க. விரலாற் செபித்தலினும் இரேகையாற் செபித்தலில் வரும் பலம் எட்டு மடங்கு அதிகம். அதனினும் புத்திரதீப் மாலையாற் செபிக்கின் பத்துமடங்கும், சங்குமணி மாலையால் வரும் பலம் நூறு மடங்கு அதிகமும், பவள மாலையால் வரும் பலம் ஆயிரமடங்கு அதிகமும், படிக மாலையால் வரும் பலம் பதினாயிர மடங்கு அதிகமும், முத்து மாலையால் வரும் பலம் இலக்கம் பங்கு அதிகமும், தாமரைமணி மாலையால் வரும் பலம் அதனினும் பத்திலக்கம் பங்கு அதிகமும், பொன் மணி மாலையால் வரும் பலம் கோடி மடங்கு அதிகமும், தருப்பை முடிச்சால் வரும் பலம் கோடாகோடி பங்கு அதிகமுமாம். உருத்திராக்க மாலை கொண்டு செபித்தலால் வரும் பலத்திற்கோ ஒரளவின்று அது அநந்த மடங்கு அதிகமென்க. இவ்வாறு சைவபுராணத்திலே சொல்லப்பட்டது.

விரலிறைகளாற் செபிக்குமுறை :

விரலிறை கொள்ளுமிடத்து வலக்கையை உத்தரீயத்தால் மூடிச் செபிக்கவும். பிராதக் காலையில் நாபிக்கு நேராகவும், உச்சிக் காலத்தில் மார்பிற்கு நேராகவுங் கையை வைத்துக் கொண்டு செபிக்கக் கடவர். விரல் இறைகளுள் அணிவிரலின் நடுவிறையைப் பெருவிரல் கொண்டு முதலிற்றொட்டு, பின் மூன்றா மிறையையும், நடுவிரலின் மூன்றாமிறை இரண்டாமிறை அடியிறையையும், அணி விரலின் அடியிறை, சிறுவிரலின் அடியிறை இரண்டாம் மூன்றாமிறைகளையும், அதன் நுனி, அணிவிரல் நுனி, நடுவிரல் நுனி, சுட்டுவிரல் நுனிகளையும், அதன் பின்னர்ச் சுட்டு விரலின் மூன்றாம் இரண்டாம் இறைகளையும், அடியிறையையுந் தொட்டு முறையே யெண்ணி முடிக்கவும்.

உருத்திராக்க மாலையின் பயன் :

உருத்திராக்கத்தைச் செபமாலையாகக் கொண்ட விடத்து நூற்றெட்டு அல்லது, முப்பது கொண்ட மாலையாற் செபிக்கின் குற்றமற்ற ஐசுவரியமும், இருபத்தேழு உள்ளவற்றாற் செபிக்கின் அழியாத பதவிச் செல்வமும், இருபத்தைந்து கொண்டவற்றாற் செபிக்கின் சிவசாயுச்சிய முத்தியுஞ் சித்திக்கும். பதினைந்து கொண்ட மாலையாற் செபிக்கின் அபிசார முண்டாகும்.

நன்கா முப்பதினிற் செபிக்கினவையில் பொருளுண் டாமொருமூ
வொன்பான் மணியிற் செபிக்கிலறாதுயர்ந்த செல்வமுண்டாமால்
இருபத்தைந்து மணியினாற் செபிக்கின் முத்தி யெய்துமா
லரிய மணிகள் பதினைந் தாற் செபிக்கி லாபி சார்ந்தான்.

– வாயுசங்கிதை.

முத்திக்கை யைந்தினான் முற்றுஞ் செபமாலை
புத்திக்கு நூற்றெட்டா கும்புகவி -னத்தமுமாம்.

-உருத்திராக்க விசிட்டம்.

செபிக்கும் வகையால் வரும்பலம் :

உருத்திராக்க மாலை கொண்டு செபிப்போர் மேருமணி யென்னும் நாயக மணியை யெண்ணிற் சேர்க்காமற் செபிக்கக்கடவர். செபிக்கும் போது துறவத்தார் செபமாலையை மேலாகவும், இல்லறத்தார் கீழாகவுந் தள்ளக்கடவர். தள்ளுவிடத்துப் பெருவிரலாற் றள்ளின் அடைதற்கரிய முத்திப் பேறுண்டாம். சுட்டு விரலாற் றள்ளின் சத்துரு வெற்றியுண்டாம். நடுவிரலாற் றள்ளின் திரவிய விருத்தி யுண்டாம். அணிவிரலாற் றள்ளினால் வியாதி நீக்கமும், சிறு விரலாயின் சகல நன்மையுமுண்டாம். மானத செபத்திற்கு மாலையை மேலேற்றியும், உபாஞ்சு வாசகம் என்பவற்றிற்கு மாலையைக் கீழிறக்கியுந் தள்ளுக. முன்னைய மானத செபத்திற்குப் பெருவிரல் அணிவிரல்களாலேனும், உபாஞ்சினுக்குப் பெருவிரல் அணிவிரல்களாலேனும், உபாஞ்சினுக்குப் பெருவிரல் நடுவிரல்களாலெனும், வாசகசெபத்திற்குப் பெருவிரலாலேனும், சுட்டு விரலாலேனுந் தள்ளக்கடவர்.

செபிக்குந் தானங்கள் :
உருத்திராக்க மாலையைக் கையிலேந்திக்கொண்டு வீட்டினிருந்து செபிக்கின் ஒருமடங்கு பலமும், பசுக் கோட்டத்திலிருந்து செபிக்கின் நூறு மடங்கு பலமும், நந்தனவனம், ஆரணியம் என்னுமிவைகளில் இருந்து செபிக்கின் ஆயிர மடங்கு பலமும், மலையிலிருந்து செபிக்கின் பதினாயிரமடங்கு பலமும், கடற்கரை நதிக்கரைகளி னிருந்து செபிக்கின் இலக்க மடங்கு பலமும், விநாயகர் ஆலயம், சிவாலயம், சுப்பிரமணி யாலயங்களிலே இருந்து செபிக்கின் கோடிமடங்கு பலமும், அந்தக் கடவுளரின் றிருமுன்னர் இருந்து செபிக்கின் அநந்த மடங்கு பலமுமுண்டாம். சூரியன், சந்திரன், அக்கினி, குரு, தீபம், நதி, பிராமணர், பசுக்கூட்டம் என்பவற்றிற்கு முன்னர் எதிர்முகமாக இருந்து செபிக்கக் கடவர். கிழக்கு நோக்கிச் செபிக்கின் விரும்பிய பொருள்கள்யாவுந் தம் அருகில் வரப்பெறுவர். தெற்குநோக்கிச் செபிக்கின் அபிசாரமுடையராவர். மேற்கு நோக்கிச் செபித்தோர் இட்டசித்தி யடைவர். வடக்கு நோக்கிச் செபிப்போர் வியாதிகள் நீங்கப் பெறுவர்.

செபிக்கக் கூடாத தானங்கள் :

நாற்றெருக் கூடு மிடத்தினும், படுக்கையிலும், நடந்து கொண்டும், நின்று கொண்டும், இருளினும், அசுத்த பூமியினும், வாகனத்தின் மேலும் இருந்து கொண்டு செபிக்கக்கூடாது. செபிக்கு மிடத்து அங்கி தரித்திருத்தல், தலையில் வஸ்திரமணிந் திருத்தல், குடுமியை விரித்துவிடல், கெளபீனம் பவித்திரம் என்னு மிவை யணியாமை, வார்த்தையாடல், கழுத்திற் புடவை சுற்றி யிருத்தல், ஆசார மில்லாமை, கோபம், பெருநகை புரிதல், தும்மல், சோம்பல், காறியுமிழ்தல், சண்டாளரைப் பார்த்தல் என்னுமிவைகள் ஆகாவாம். இவைகளுள் ஒன்று நேர்ந்தால் மும்முறை ஆசமனம் புரிந்து, அங்க நியாசஞ் செய்து செபிக்கக்கடவர்.

உருத்திராக்கங்களுட் சிறந்தன :

ஒருமுக முள்ளமணி, ஐந்துமுக மணி, பதினொரு திருமுக மணி, அருள் பொருந்திய பதினான்கு முக மணி என்னுமிம் மணிகளே பூசித்தற்கு மிகச் சிறந்தவைகளாம். இவைகளுள் ஒன்றை நாடோறும் அருச்சித்து வழிபடுவோர் மேலான செல்வ மென்னும் பெரும்பேற்றை யடைவார்கள் என்று வேத சிவாகமங்கள் விளம்புகின்றன.

உருத்திராக்கத்தாற் பயனடைந்தவர் :

உருத்திராக்க தாரணத்தானும், தரிசனத்தினாலும், பரிசத்தானும் இகபர சாதனங்களை யடைந்த வுயிர்த்தொகைகளோ அளவில்லனவாம். அவர்கடொகையை வரையறுக்க நினைப்பது இதுகாறும் இறந்தாரை யிவ்வளவினர் என்று எண்ணுவது போலும். ஆயினும் முக்கியமான சிலரது சரிதத்தைக் காட்டுவாம். நந்தி யென்னுந் தேசத்திலேயுள்ள சிவதலத்தி லிருந்த நந்தை யென்னுந் தேவ தாசியால் வளர்க்கப்பட்ட சேவலும், குரங்கும் உருத்திராக்கம் அணியப் பெற்றமையால் உயிர் துறந்தவுடன் முறையே காஷ்மீர தேசத்து அரசனான பத்திரசேனன் மனைவியிடத்திற் சுதன்மா என்னும் பெயரையுடைய புத்திரனாகவும், அவன் மந்திரி மனைவி வயிற்றில் நாரகன் என்னும் பெயரையுடைய புத்திரனாகவும் பிறந்து, உலகு தனிபுரந்து சிவசாயுச்சிய முத்தியை அடைந்தன. அணிவித்தமையால் நந்தையும் அக்கதி யடைந்தாள். புட்கர தேசத்து அரசனாகிய செளமியன் என்பவன் அணிந்து சத்துரு பயம் நீங்கப் பெற்றான். அவன் மனைவியாகிய வசுமதி என்பவள் தரித்து விசேட அழகும், சற்புத்திரப் பேறும், சிவபெருமான் றிருவருளும் பெற்றாள். காலஞானி என்னும் அரசி தன்னாயகனான கமலாக்கனென்னும் அரசன் தன்னைப் போல உருத்திராக்கந் தரியாமையால் அவனொடு கூடச் சம்மதிக்காது, விஷ்ணுவால் அதன் பெருமையை யுபதேசிப்பித்துத் தரிப்பித்து வாழ்ந்து முத்தி யடைந்தனன். பூச்சக்கர மென்னும் நகரத்திருந்த சுப்பிரதீபர் என்னும் பிராமணர் தங்குலத்தோடு முத்தி யடைந்தனர். ஒருபூனை யுருத்திராக்க தாரணஞ் செய்து காணப்பட்டமையால் இந்திரனும் வணங்கித் தன் ஐந்தருவுளொன்றைக் கொடுத்து அனுப்பினன். மகாபாதகங்களைப் புரிந்த சாமித்திரன் என்னும் வேதியன் சிவலோகமடைந்தான். மாகர நாட்டிலே யிருந்த சாந்திகன் என்பவன் இதனை யணிந்தமையால், காளிதேவியாற் பலியா யுண்ணப்படாது வரங்கள் பெற்று அரசாண்டு முத்தியை யடைந்தான். இவ்வாறு அநேகருளர். அவைகளை யெல்லாம் உண்மை நூல்கள்வாயிலாய் அறியக்கடவர்.

இலிங்க தாரணம் :

சைவ சமயிகளாய், சிவாகம விதிப்படி தீக்கைபெற்ற ஒழுக்கினருட் சிலர் சிவநேத்திரமாய் கண்மணியை விடுத்து இலிங்க தாரணஞ்செய்து வருகின்றனர். அங்ஙனந் தரிப்பது விசேடமன்று. அதனால் வரும் பலம் அற்பமென்றதனாலோ சுத்த வித்தைகளு ளொன்றாய சூதசங்கிதையும்

“மெய்திகழுஞ் சிவாகமத்து மேவுதீக் கையர் சில்லோ
ரைதிலிங்க தாரணஞ்செய் வாரதுவுங் கூடாது”

என்வெறுத்துக் கூறிற்று. அன்றியுஞ் சிவஞானப் பெருஞ் செல்வ சைவ சித்தாந்த பரமா சாரியர்களுள் ஒருவராய திருநாவுக்கரசு நாயனாரும்.

“எவரேனுந் தாமாக விலாடத்திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி
யுவராதெ யவரவரைக் கண்டபோது
வுகந்தடிமைத் திறநினைத்தங் குவந்துநோக்கி
யிவர்தேவ ரவர்தேவ ரென்றுசொல்லி
யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமேபேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.”

என விபூதி ருத்திராக்கங்களையே சிவசின்னங்களெனவும், அவற்றை யணிந்தவரே மேலான வரெனவுந் திருவாய் மலர்ந் தருளியிருக்கின்றனர். இவற்றையெல்லா முணர்ந்து அக்கத்தையே தரித்து உய்யக்கடவர்.

உருத்திராக்க தூஷண மறுப்பு :

சிவசின்னங்கள் என்னும் விபூதி ருத்திராக்கங்கள் அணிவதனால் யாதோர் பிரயோசனமுமில்லையென்று கிறிஸ்தவர்களும், திருநீற்றை அணிதலும், உருத்திராக்கந் தரித்தலும் உறுதிப் பயனைக் கொடுக்காவென்றும், அவைகள் நாராயணமூர்த்திக்கு உகந்தனவல்ல வென்றும், திருமண் கொண்டு ஊர்த்துவ புண்டர மிடுதலும், துளசிமணி தரித்தலுமே வேத சம்மதமும், உறுதிப்பயனைக் கொடுப்பவும், சீநாதனுக்கு உகந்தனவுமா யுள்ளவென்றும், அவனாலும் அவனடியாராலுந் தரிக்கப்படுவனவும் அவைகளே என்றும், வைணவர்களுட் பெரும்பாலாருங் கூறித்திரிகின்றனர். இவ்விரு மதத்தினருமே சிவசின்ன தூஷணஞ் செய்ய முன்வந்து நிற்பவராகலின், அவர் கூற்றையெல்லாம் நிராகரித்து உண்மையை யவர்க்குப் புகட்டுநிமித்தம், கிறிஸ்தவர்கள் சத்திய நூல் என்று கொண்டாடும் பைபிலில் இருந்தும், வைணவர்கள் ஒப்பக் கூடிய இராமாயணம், அத்தியாத்ம ராமாயணம், பஸ்மசாபால உபநிடதம் என்னு மிவைகளினின்றும் பிரமாணங்களைக் காட்டிக் கண்டித்து, எமது பக்கத்தை முன்னரே வலியுறுத்தியுள்ளேம். ஆயினும் இன்னுஞ் சில நியாயங்கள் காட்டி யவர்க்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தல் நனிதக்கதென்று மனத்து நசை முளைத்தெழுந்து பிடர் பிடித்துந்தலாற் பின்னரும் அநுவதித்தெழுதத் தொடங்கினம்.

கிறிஸ்தவர்களுட் பற்பலர் இக்காலத்தும் ஒவ்வோர் வருட மாசி மாதங்கடோறும் வருகின்ற (Ash Wednesday) சாம்பரடிப் பெருநாள் என்ற தினத்தில் திருநீறு தரிக்கின்றனர் என்பது யாவருமறிந்த விடயமே. இதுவன்றிச் சைவ சமயிகள் உருத்திராக்கந் தரிப்பதுபோலச் சிலுவைக் குறியைத் தரித்து வருதலும் உண்மையே. அச்சிலுவைக்குறியை நோக்குமிடத்துச் சைவர்களுக்குரிய திரிபுண்டரமும், சிவபெருமானது சூலக்குறி யென்னும் ஊர்த்துவபுண்டரமுஞ் சேர்ந்த வடிவாக் காணப்படுகின்றது. சைவ சமயிகளின் முன் மாதிரியைக் கண்டே அவர்கள் நெடுமையாகத் தரிக்குங் குறியையும், குறுக்காகத் தரிக்குங் குறியையும் சிலுவையாகக் கொண்டார்கள் என்பதிற் சந்தேகமில்லை. இங்ஙனம், அவைகளாற் பாவம் மன்னிக்கப்படும் என்று கொண்டொழுகும் அக்கிறிஸ்தவர்கள் விபூதி ருத்திராக்கங்களாகிய சிவசின்ன தாரணஞ் செய்தலாற் பிரயோசனமில்லை யென்பதும், இழிந்தன வென்பதும் அநியாயமேயாம். இங்ஙனந் தரிப்பவர் சரியான கிறிஸ்தவர் அல்ல என்று சொல்லின். தரியாதவர்களையும் அப்படியே தரிக்கின்ற கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர். இப்படித் தங்களுக்குள்ளேயே அறியாமையையும், மாறுபாடும், தூஷணங்களு மிருப்பவும், அவைகளை யெல்லாம் பரிகரிக்காமல் “தன்கண்ணுள்ள உத்திரத்தைப் பிடுங்காது பிறர் முதுகிலுள்ள துரும்பை எடுக்கப்போவார்” போலச் சிவசின்னங்களைத் தூஷித்தல் அடாதென் றறிவாராக.

இவர்கள் ஒருவாறிருப்பினும் மற்றைய வைட்டிணவராயுள்ளாரோ கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவாரைப் போலத் தமக்குத் தாமே வஞ்சகராய், அபராதத்தைத் தேடுகின்றவர்களேயாம். அவர்கள் செய்யும் நிந்தனைகளுக்கோ ஓரளவின்று. நாராயண மூர்த்திக்கும் அவரதடியார்கட்கும் சிவசின்னங்களாகிய விபூதி ருத்திராக்க தாரணம் உண்டு உண்டென்று யுத்தி யநுபவங்களுக்குக் கியைய எவ்வளவு சுருதிகளையும் நம்மவர் காட்டினாலுங் கொண்டது விடாக் குணமுடையராய், ஆழ்வாராதி பாகவதர்கள் அப்படிச் சொல்லியிருக்கின்றனரா? என்று முழங்குகின்றனர். வைணவ பக்த சிகாமணிகளாய் விளங்கும் அவ்வாழ்வார்கள் அருளிச் செய்த வாக்குகளைக் கொண்டே நிலைநிறுத்துகின்றேம். அப்படியே எந்த வைணவர்களாவது நஞ் சைவசமயிகளுக்குரிய சிறப்பு நூல்களில் எங்கேயாவது, சிவபெருமான் அல்லது அவ்வடியார்கள் வைணவக் குறியாகிய மண்ணையுந் துளசிமணியையுந் தரித்தனர் எனப் பிரமாணம் காட்டுவரேல், யாமொப்புவதற்குத் தடையின்று. அங்ஙனம் ஒரு நூல்களிலாவது ஓரிடத்திலாவது கூறப்படாதிருக்கவும், நாம் அவர்கட்கும் எமக்கும் பொதுவான வேதங்கள் உபநிடதங்களினின்றும், அவர்கட்கே சிறப்பு நூல்களாயுள்ள இராமாயணம், பாரதம், நாலாயிரப் பிரபந்தங்களி னின்றும், விஷ்ணுவும் அவரடியாரும் விபூதி ருத்திராக்க தாரணரேயன்றி, மண்ணையுந் துளசி மணியையுந் தரித்தவர் அல்லது தரிப்பவர் அல்லர் எனக்காட்டி நிலைநிறுத்தும்போது, அதனை யொப்பித் தாமுந் தம்மைச் சார்ந்தாரும் விபூதி ருத்திராக்கங்களைத் தரித்து உய்தலும் உய்வித்தலும் முக்கிய கடமையேயாம். இராமாயணப் பிரமாணம், வேதோபநிடதப் பிரமாணம் முன்னர்க் காட்டியுள்ளாம். மற்றையவற்றையுங் காட்டுவாம்.

ஆயுஷ் காமோத வராஜந் பூதி காமோதவா நர:
நித்யம் வைதாரயேத் பஸ்ம மோக்ஷ காமீச வைத்விஜ:

-மகாபாரதம் – சாந்திபருவம்.

“தர்மன் முதலிய பாண்டவர்களே! ஆயுள் விருத்தியை விரும்புகின்றவனும், செல்வத்தை இச்சிக்கின்றவனும் மோக்ஷத்தையடைய அலாவுகின்றவனும், நாடோறும் பசுமத்தையே (திருநீற்றையே) தரித்தல் வேண்டும்” என்னுஞ் சுலோகத்தின்படி விபூதிதாரணம் பெறப்படுகின்றது.

அங்ஙனமே, தருமன் முதலிய பஞ்சபாண்டவர்களுஞ் சிவசின்ன தாரணராய்ச் சிவபூசை செய்தனர் என்பதும், வீமன் சிவபூசையில் விசேஷித்தவன் என்பதும், கண்ணபிரானைத் தேர்ச் சாரதியாகவும், மைத்துனனாகவும் பெற்ற இந்திர குமரனாய அர்ச்சுனன் பசுபதியை நோக்கித் தவஞ் செய்தான் என்பதும், அவ்வர்ச்சுனன் “பூசையிலாதாலுண்டி புழுப்பினம் புலையன் கட்டம்” என்னுஞ் சிவாகம வாக்கியத்தை மேற்கொண்டு, சிவபூசை செய்தன்றி உணவு கொள்ளாப் பெருந்தகையினன் என்பதும், கண்ணமூர்த்தியானவர் தம்மைச் “சிவனைப் போலப் பாவித்துப் பூசை செய்க” என்று வற்புறுத்தியபோது அங்ஙனம் ஒருவாறு ஒப்பிச் செய்தானென்பதும், சிவபூசைக்கு விபூதி யபிடேகஞ் செய்தலும், விபூதிருத்திராக்கந் தரித்தலும் இன்றியமையாதனவாய் இருத்தலின் விஷ்ணுவுக்கும் அங்ஙனஞ் செய்தான் என்பதும், அவனது குமாரருள் ஒருவனாய், கண்ணபிரான் தங்கையாய சுபத்திரை வயிற்றிற் பிறந்தவனாயுள்ள அபிமன் என்பவனும் யுத்தகளத்திலே தன்னுயிர் நீங்குங்கதியில் அகப்படும், பகைவர்களால் வளைத்திடப்பட்ட கொன்றைமாலை, சிவபெருமான் தரித்தருளிய மாலை போன்ற தொன்றென்று அதனைக் கடக்காது நின்று, பொருத பேரன்புடையவன் என்பதும் மகாபாரதத்தாற் பெறப்படுதலால், நாரணரும் அவரைச்சார்ந்தாருஞ் சிவசின்னதாரணர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறியப்படும்.

இது நிற்க, மயர்வற மதிநல மருளப்பெற்ற பிரபன்னசன கூடஸ்தர் என்றும், மாறன் பணித்த மறைக்கு ஆறங்கங் கூறப்பிறந்த வீறுடைய வடையார் சீயமென்றும், அவர்களாற் புகழ்ந்து உரைக்கப்படும் நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் என்னும் இவர்கள் கூற்றுக்களை எடுத்துக் காட்டுகின்றாம். அவைகளையெல்லாம் ஒப்பாது விடமாட்டாரென நம்புகின்றேம். அவை வருமாறு:-

தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்
சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் – குழுந்
திரண்டருலி பாயுந் திருமலைமே லெந்தைக்
கிரண்டுருவு மொன்றா யிசைந்து. -நாலாயிரப் பிரபந்தம்.

என்னும் பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந் திருவந்தாதி, 63-ம் செய்யுளின்படி, சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை யுடையராய்ச் சேர்ந்து, ஒருவடிவராய் இருக்கின்றனர் என்பது பெறப்படுதலானும்,

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்து.

எனத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி, 3 பத்து, ஐந்தாந் திருவாய் மொழியில், 9-ம் செய்யுட்படி, வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும், இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாகவும் இருக்கின்றனர் எனத் தெரிதலால், வலப்பாகம் ஆண்பாலும், இடப்பாகம் பெண்பாலு மென்று கொள்ளும் வழக்கின்படி, சிவபெருமான் ஆண்டன்மையையுடைய சத்திமான் என்பதும், நாராயணமூர்த்தி “நால்வகைப்பட நண்ணிய சத்தியுண் – மாலு மொன்றாதலின் மற்றது காட்டுவான்” என்னுங் கந்தபுராணக் கருத்தின்படி, பெண்தன்மையையுடைய நால்வகைச் சத்திகளுள் ஒன்றாய சத்தி வடிவர் என்பதும் பெறப்படுதலானும், சிவபெருமான் றிருமேனி பரவப் பூசிய விபூதியை யுடைத்தாகலின், நாரணன் றிருமேனியும் அப்படியே திருநீறு பூசப்பட்டதெனவும் அறிதற்பாற்று.

கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதேயிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்றன்னை
யுரிய சொல்லா விசை மாலைக ளேத்தி யுள்ளப் பெற்றேற்
கரிய துண்டோ வெனக்கின்று தொட்டு மினி யொன்றுமே.

– நம்மாழ்வார் நான்காம் திருவாய்மொழி.

எனவரும் நான்காம் பத்து, ஏழாஞ் செய்யுட்படி, நாராயணமூர்த்தி சிவசின்னங்களுள் ஒன்றாய திருநீற்றைத் தமது கரிய திருமேனிக்கண் நன்றாகப் பிரகாசிக்கும்படி அன்புடன் தரித்திருக்கின்றனர் என்பதும்,

உடையார்ந்த வாடையன் கண்டிகைய னுடைநாணினன்
புடையார்பொன் னூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்.

-ஏழாந் திருவாய்மொழி.

எனவரும் மூன்றாம் பத்தில், நான்காஞ் செய்யுட்படி, அக்கடவுள் கண்டிகையை (உருத்திராக்க மாலையை) தரித்திருக்கின்றனர் என்பதும்,

எறிய பித்தினோ டெல்லா வுலகு கண்ணன் படைப்பென்னு
நீறு செவ்வே யிடக்காணி னெடுமா லடியா ரென்றோடு
நாறு துழாய் மலர் காணி னாரணன் கண்ணி யீதென்னுந்
தேறியுந் தேறாது மாயோன் றிறத்தின ளேயித் திருவே.

– நான்காம் திருவாய்மொழி

எனவரும் நான்காம்பத்தின் ஏழாஞ் செய்யுட்படியும்,

தணியும் பொழிதில்லை நீரணங் காடுதி ரன்னைமீர்
பிணியு மொழிகின்ற தில்லைப் பெருகு மிதுவல்லான்
மணியி லணிநிற மாயன் றமரணி நீறு கொண்டு
வணிய முயலின்மற் றில்லைகண் டீரிவ் வணங்குக்கே.

– ஆறாம் திருவாய்மொழி.

எனவரும் நான்காம் பத்தில், ஆறாஞ் செய்யுட்படியும், விஷ்ணு மூர்த்தியின் அடியவர்கள் அன்புடன் தரித்தற்குரியது திருநீறென்பதும், “ஒருமொழி யொழிதன்னினங்கொளற் குரித்தே” என்னும் இலக்கணப்படி விபூதியணிபவர் எனவே, மற்றைய சின்னமாகிய உருத்திராக்கமுந் தரிப்பவர் என்பதும், வெள்ளிடைமலைபோற் றெள்ளிதின் விளங்கக் கிடக்கின்றன. நீறு, கண்டிகை என்னுஞ் சொற்களுக்கு இவ்விடத்து வேறு பொருள் என்னோ? விபூதியும் உருத்திராக்கமுமன்றி மற்றையதன்றாம், என்னெனில், சாந்து என்று இவர்கள் விரிக்கும் பொருளுக்கு நீறு என்னும் பெயர், வடமொழி தென்மொழி நிகண்டுகளாகிய அமரம், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி முதலியவற்றினும், ஏனைய இலக்கியங்களினும் ஆளப்படாமையாலென்க. இவற்றையெல்லா மோர்ந்து உண்மை கடைப்பிடித்துச் சிவசின்னதாரணரா யொழுகி உய்யுமாறு, எல்லாம் வல்ல இறைவனாகிய சிவ குருநாதன் திருவருள் செய்யும்படி பிரார்த்திக்கின்றோம்.

வாழ்க வந்தனர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
வாழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

சைவபூஷண சந்திரிகை முற்றிற்று.

மெய்கண்டதேவன் திருவடி வாழ்க.

——————————————————————————–

சைவ சமயமே சமயஞ் சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிநாட்டு மிந்தக்கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டா முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே.

சைவத்தின் மேற்சமயம் வேறிலை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் வேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவாரமுந் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றா ளெம்முயிர்த்துணையே.

——————————————————————————–

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s