பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்.

13 வயதுப் பெண்ணை திருமணம் செய்த ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?

அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை. காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது. ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.

அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை? இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை? பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.

இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர்” என்ற நூலில் கூறுகிறார்:-

”(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்கவேண்டும்?”

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் – மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் – கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு! அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு! அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா? ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.

அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே!

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா!

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார். அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம். அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்:-

”ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.”
(நூல் :- தமிழர் தலைவர்)

இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்:-

”நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும் …” (நூல் :- தமிழர் தலைவர்)

(தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.

இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!

9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! – இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) – விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.

அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்:-

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
(நூல்:- தமிழர் தலைவர்)

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்! இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!

இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும். அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே!

அதுமட்டுமல்ல.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

BOX NEWS
நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.
பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்:-

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!

Advertisements

2 thoughts on “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

  1. உண்மை ரொம்ப கசப்பாதான் இருக்கு …,இதெல்லாம் மானம்கெட்ட பொழப்பு !!!!

  2. ஈவெராவை பெரியார் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்… மணியம்மையை மணந்த பிறகு, அவர் பெரியார் என்று அழைக்கப்படும் தகுதியை இழந்து விட்டார்.. வேண்டுமானால் சிறியார்/ சிறியான் என்று விளிக்கலாம்..

    மணியம்மை மணியாட்டி என்பது அனைத்திலும் சாலச்சிறந்தது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s