பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)

இந்து மதத்தை கண்டிக்கும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை கண்டிப்பதில்லையே ஏன் என்று இந்துக்கள் கேட்டால், அதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் சொல்வது என்ன தெரியுமா?

‘‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’

என்றுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே தவிர இந்துக் கடவுள்களை மட்டும் சொல்லவில்லை. இதில் வரும் ‘கடவுள்’ என்ற சொல் கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களையும் குறிக்கும் என்று கூறுகின்றார்கள்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.

கடவுள் மறுப்பு என்று வரும்போது கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்களுக்கு விதிவிலக்கு அளிப்பது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் போலி கடவுள் மறுப்பு கொள்கையைத்தானே காட்டுகிறது! ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானது என்பதற்கு இதோ ஆதாரங்கள்:-
16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-

வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.

25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-

‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.

23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.

… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’

26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).

31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’

04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-

‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’

25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’

இந்த ஆதாரங்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானவை என்பதைத்தானே காட்டுகிறது! கடவுளே இல்லை என்று சொல்கின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்பான தெய்வமே கிறிஸ்து என்று சொல்லுகிறார் என்றால் அது போலி கடவுள் மறுப்புக் கொள்கையைத் தானே காட்டுகிறது! ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை இந்து மதத்திற்கு மட்டும்தான். அதுவும் போலி கடவுள் மறுப்புக் கொள்கைத்தான்.

இதிலே மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; எழுதியும் இருக்கிறார்.

‘‘நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)

‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)

கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959)

இது போன்ற முரண்பட்ட கருத்துக்களை பல தடவை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியிருக்கிறார். கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஒரே கடவுளை கும்விடு; கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்று பல்டி அடித்து முரண்பட்டவாதமல்லவா?-இப்படி நாம் கூறும் போது இதற்கு பதிலாக பகுத்தறிவுவாதிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரே ஒரு கடவுளை கும்பிடு என்று சொன்னது ‘‘கடவுள் வேண்டும் என்று சொல்லுகின்ற, கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான்’’ என்று பகுத்தறிவுவாதிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த பதில்கூட பலமில்லாததுதான். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வேலை. அதைத்தானே அவர் செய்து வந்தது. அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்கவேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும். மதத்தை ஒழிக்கவேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும். இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கின்றபோது சிலருக்கு மட்டும் கடவுளை கும்பிடு என்று சொன்னால் அது தான் பகுத்தறிவா? அதுதான் கடவுள் மறுப்புக் கொள்கையா? இது முரண்பட்டவாதம்தானே!

கடவுள் வேண்டும் என்று சொல்கின்ற-கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான் என்பது சரி என்றால் சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? சாதியைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றபோது சாதியை விடமுடியாதவர்களுக்கு மட்டும் சாதியை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு மூடத்தனமோ அதேபோலத்தான் கடவுள் இல்லை என்று சொல்கின்றபோது கடவுளை விடமுடியாதவர்களுக்கு மட்டும் கடவுளை கும்பிடுங்கள் என்று சொன்னால் அதுவும் பகுத்தறிவற்ற மூடத்தனம் ஆகும். ஆனால் இப்படி பகுத்தறிவற்ற முறையில் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தானே பகுத்தறிவு பகலவன் என்று சொல்லுகின்றார்கள் பகுத்தறிவுவாதிகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s