சரித்திரத் துறையும் சைவ சமயமும்

(சைவன்)

தமிழ்நாட்டுப் பழங்கால சரித்திரத்தை யறிந்து இன்புறுவதில் நமக்கு விருப்பம் மிகவுண்டு. ஆனால் அவ்வக் காலத்துப் பெரியார் அதனைக் கோவைப்பட எழுதி வைத்திலர். ஆகலின் இக்காலத்துப் புலவர் பலர் அத்துறையிலிறங்கி அதனை ஆழம் பார்த்து வருகின்றனர். அவருக்கு ஆதாரமாக நிற்பவை கல்வெட்டு, காசு, பட்டயம், அவ்வக்காலத்தார் எழுதி வைத்துப் போந்த குறிப்பு, இலக்கியம், கர்ண பரம்பரை முதலியன. இவைகள் பெரும்பாலுஞ் (திலோத்தமை யென்னும் பெண் காரணமாகச் சுந்தனால் உபசுந்தனும் உபசுந்தனால் சுந்தனும் மாண்டொழிந்தது போன்றநெறி; இந்த நியாயம் கல்வெட்டு காசு முதலியவற்றுள் ஒன்றோடொன்று பொருந்தாமல் மாறுபட்டு ஒன்றினைமற்றொன்று ஒழிக்குமிடத்துப் பிரயோகிக்கப்படுகிறது.) சுந்தோபசுந்த நியாயத்தில் நிற்கின்றன; புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. அன்றியும் ஆராய்வோரது உட்கிடை அவரெழுதுஞ் சரித்திரத்திற் கலக்கவுஞ் செய்கின்றது. உள்ளதை உள்ளவாரே உரைத்தல் வேண்டுமென்ற விருப்பினரும் மிகச் சிலர். ஆகலின் இப்பொழுது எழுதப்படுஞ் சரித்திரக் குவியல் ஒன்றோடொன் றெதிரிட்டுக் கிடப்பதோடு காலந்தோறும் மாறிக்கொண்டும் வருகின்றது. இத்துறை தன் குழவிப் பருவம் நீங்கி முற்றுப்பே றடையும்வரை பிறிதொரு துறை யாராய்ச்சிக்குச் சிறிதும் அரண் செய்வதில்லை.

ஆனால் தற்காலத்துச் சைவருட்பலர், கான்யாறு பெருக்கெடுத்தோட அதனிடை யகப்பட்டு அலமரும் (சுழலும்) மான் கூட்டத்தின் நீரராய் (தன்மையுடையவர்) நவீன நாகரிகத்தில் மொத்துண்டு தம்மைத் தாமே மதித்து அம்மதுகை மேலீட்டால் தமதாராய்ச்சி சைவ சந்ததிகட்கு இத்துணைப் பொல்லாங்கு சூழுமென்பதை யோராராய், தமது உள்ளமென்னும் எருக்குழியில் முளைத்து வெளிப்போந்தவற்றை யெல்லாந் ‘தமிழ்க் கிழவரது பழஞ் சரித்திர’ மென்று எழுதிப் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இத்தகையாருக்குச் சைவ விரோதமான புதுக்கொள்கை, மேனாட்டாசாரம் முதலியவற்றிலிருக்கும் பிரேமை இல்லொழுக்கிறந்த பெண்டிர்க்குத்தானுந் தாங் காதலிக்குஞ்சோரர்மாட்டிராது. ஆகலின் அவர் தமிழ் நாட்டின் எதிர்கால இன்ப வாழ்வுக்கு அப்புதுமைகளே பெரிதுஞ் சாதகஞ் செய்யுமெனக் கருதிக் கொண்டு அவைகளை நம் மக்களிடைப் பரப்புமாறு ‘பழந் தமிழர்களும் அவைகளைத் தழுவியுள்ளார்க’ ளென்று துணிந்து விபரீதம் பேசுவர். இன்னும் அவர் தமக்கு வேத சிவாகமம், சைவாசாரியர், சைவாசாரம், ¨சா மடாலயம் முதலியவை எதிர்செய்து நிற்குமாயின், அவைகளை நிந்தித்தெழுதக் கொஞ்சமும் அஞ்சார். சரித்திரத்துறை நமது நாட்டுக்குப் புதிதாகலின், அவர் நுழைப்பதை யெல்லாம் அதுவும் ஏற்றுக் கொள்ளும் இயல்பின தாயிற்று. சமயத் துறையாகிய பசும்பொன்னின் செழுமையை யளந்தறியத் தாமெழுதுஞ் சரித்திரத்துறையாகிய செக்குலக்கையே உரையாணி யென்பது அவரது தீர்ந்த முடிவு. அதாவது சரித்திரத்துறைக்குப் பொருந்தாத சமயக்கொள்கையை நிராகரித்தல் வேண்டுமென்பது அவர் கருதென்க. இனி அவரெழுதிய வற்றுட் சிலவற்றைத் தாலிபுலாக நயம் (ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு பருக்கையைப் பதம் பார்த்து அறிவது போன்ற நெறி. முற்றிலும் பார்த்தறிவதற்குப் பதிலாக ஏகதேசத்தைப் பார்த்து முழுவதையும் தீர்மானிக்கும்போது இந்த நியாயம் வழங்கப்படுகிறது) பற்றி ஈண்டெடுத்து விவகரித் தொழிப்பாம்.

பழந்தமிழர் ‘சிவனென்னும் பெயரால் கடவுளை வணங்கி வந்ததில்லை’ யென்று இப்புதிய துறையார் கரைவர். பழந்தமிழரது சைவாசாரம், சிவபத்திகளைத் தெரிக்கும் விரிவான பழைய சைவத் தமிழ் நூல் ஒன்றாயினும் இப்போது காணப்பட வில்லை. ஆகலின் அத்துறையார் சமய நூலல்லவாகிய தொல்காப்பியம் (இப்பொழுதுள்ள சிறந்த தமிழிலக்கணநூல். இதனை இயற்றியவர் அகத்திய முனிவரின் மாணாக்கரும் சமதக்கினி முனிவரின் புதல்வருமாகிய தொல்காப்பியர். இவர் இயர் பெயர் திரண தூமாக்கினி) மணிமேகலை (இது பெளத்த சமயக்கோட்பாடுகளை எடுத்துச் சொல்லும் நூல். இது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கூலவாணிகன் சாத்தனாரெனப்படும் சீத்தலைச் சாத்தனார்.) முதலிய வேற்றுத்துறை நூல்களில் ஆண்டாண்டு இடைப்பிறவலாகவும், இயைபுகுறித்தும் வந்துள்ள ஏகதேசப் பொது வசனங்களை வைத்துப் பழந்தமிழரது சைவத் திறத்தை யளவிட்டு, மருத்துவத் துறையை வைத்து வழக்குத்துறையை யளவிடுவதோர் சழக்கு நெறிப்பட்டார். உண்மையில் பழந்தமிழர்மாட்டுச் சிவவணக்கம் இல்லையாயின், அவர் ‘விச்சை நூல் பல கற்’ றுப் பிறப்பு செல்வம் முதலியவற்றாற் சிறப்புற்றிருந்தாராயினும் ‘சிவனருள் விரவாக் கொச்சையோ’ ரென்றும், ‘சிவநிறை கல்வி சாலாச் சிறிய’ ரென்றும் எம்மாற் கடிந்தொதுக்கப்படுவர். ஆனால் இப்புதிய துறையார் தம் புதுமைகளையே நுழை நூலாக்கி எடுத்தாளும் அவ்வேகதேசப் பொதுவசன முதலிய ஆதாரங்கள் எமது மூதாதைகளது சிவநிறைவனைத்தையும் அளக்குங் கருவிகளாதல் எவ்வாற்றானுமில்லை. ஆகலின் சைவ நலங்கனிந்த இடைக்காலத்துத் தமிழ்ப்பெரியாரது
“பாண்டியநாடே பழம்பதி” – திருவாசகம்

“தமிழன் கண்டாய்” – திருநாவுக்கரசர் தேவாரம்

“தலைச்சங்கப் புலவனார்” – பெரிய புராணம்

“பழைய வைதிக சைவம் பரக்கவே” – கோயிற்புராணம்

என்றின்னோரன்ன எண்ணிறந்த வச்சிர வசனங்களை வைத்து, எமது முது தமிழர் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் உரிய சிவத்தையே வழிபட்டும். அச்சிவத்தோடு சம்பந்தமாய சைவ சமயத்தையே தழுவியும் உய்ந்தனரென்று யாங் கூறி அம்முது மக்களை வந்தித்து வாழ்வேம்.

‘சிவாலயங்கள் இப்போது அமைந்துள்ளவாறு பழங்காலத்தில் தமிழ் நாட்டில் அமைந்திருக்கவில்லை’ யென்றும், ‘மரமும் அதனடியிற் சிவலிங்க மூர்த்தியுமாகவே அமைந்திருந்தன’ வென்றும் இப்புதிய துறையார் பிதற்றுவர். இப்போதுள்ள ஆலயப் பெருங் கட்டிடங்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுத், தம் மனம்போனவாறு வழிபாடு நிகழ்த்த வேண்டுமென்பது அவரது கருத்துப்போலும். சுயம்பு மூர்த்திகள் முளைத்தெழுந்த காலத்தில் இப்போது காணப்படுங் கோவிற் பெருங்கட்டிடங்களெல்லாம் ஒருங்கு முளைத்தெழுந்தன வென்ற எந்த மடவோனுங் கொள்ள மாட்டான். காடு நாடாகுங் காலத்திலெல்லாம் அக்காட்டிலுள்ள சுயம்பு மூர்த்திகளுக்கும் பிரதிஷ்டாமூர்த்திகளுக்கும் ஆலயங்கள் அதிவிமரிசையாக அமைத்தல் வேண்டுமென்பதும், அவ்வாறமைப்பது ராஜனையும் ராஷ்டிரத்தையும் (தேசம்) வாழ்விக்கும் பொருட்டென்பதும், (ஸ்ரீ சிவஞானபாடியம் சிறப்புப்பாயிரவுரை) ‘எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசை விழா முதலிய நடாத்துக’ வென்பதும் (ஸ்ரீ சிவஞானபாடியம் சிறப்புப்பாயிரவுரை) ‘மாறிச் செய்யிற் குற்றமென்பதும் சிவாகமக்கட்டளை. முதுதமிழர் அவ்விதியை மதியாது நின்றிலர். நின்றாரென்று கூறுவார் கூறினும் யாம் அவ்வாணையைக் கடைப்பிடித்து அசையாது நிற்பேம். ஆனால்

“அன்னதோர் கயிலை நாப்ப ணம்
பொனின் சுடர்மேல் கொண்ட
நன்னெடுஞ் சிமயத் தோங்க னவை
யொரீஇ நண்ணிற் றென்னக்
கன்னியங் காப்பு மேவிக் கதிர்
மணிக் கற்றை சுற்றப்
பொன்னெடுங் கோயிலொன்று
பொலிவொடும் பொருந்திற் றன்றே” – கந்தபுராணம்

“திணிகதி ராரந் தன்னிற்
சிறந்தவச் சிரத்திற் செக்கர்
மணிதனின் முழுநீ லத்தின்
மற்றைய வெறுக்கை தன்னிற்
பணிபட வருவாற்றானே
பலித்திடு சிகர மாதி
பணியினுக் கணியாய் மல்கு
மாலயச் சூழ லெங்கும்” – கந்தபுராணம் 36

என்று திருக்கயிலாயத்துக் கோயிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

“ஏழ்நிலை மாளிகை சூளிகை
சாளர மேரார்சீர்
வாழ்மதி றோரண வாயில்க
டேரணி மாவீதி
சூழ்வுற மேருவி னேர்பல
கோலிய சோழேசன்
றாழ்வுடன் மாதவர் யாரையு
நீள்குடி சார்வித்தான்” – கோயிற் புராணம் இரணியவன்மச்சருக்கம்

என்றபடி தில்லைக்காட்டைச் சிதம்ப்ரநகரியாக்கிய இரணியவர்ம சோழர் அக்காட்டு மூர்த்தியாகிய ஸ்ரீமூலட்டானேசரருக்குப் ‘பொன், தன்மயமா மொளிராலயமொன்று’ சமைப்பித்து ‘நூலின் வைத்த முறை’ பல திருவிழாக்களுஞ் சிறக்கச் செய்தனர். ஆகலின் தமிழ்ப் பழம்பெரியார் காடு திருத்தி நாடாக்கிய வுடனே எண்ணுதற் பெம்மாற்கு விண்ணிழி விமானமென்னக கோயில் பல சமைத்தே ஆகமவழிப் பூசை விழா முதலியன ஆசை கொண்ட மட்டும் நடாத்தி யுய்ந்தனரென்று யாங் கூறி அன்னாரை வந்தித்து வாழ்வேம்.

‘வடமொழிக்கணுள்ள இருக்காதி (இருக்கு முதலியன; அவையாவன இருக்கு. யசுர், சாமம், அதர்வனம் என்பன) வேதங்கள் நான்கும் மக்கள்வாய மொழியே’ யென்று இப்புதிய துறையார் கூறி வரம்பழிவர். மடியை யுருவிப் பாலைக்கறப்பது பரம்பரை வழக்கா யிருப்பப். புதுமையென்னும் மதுமயக்கால் மதிமயங்கிப் பிறிதோராற்றால் அதனைக் கறக்கக் கருதிக் காலையும் வாலையும் உருவி யுருவிக் கைசோர்ந்து, இறுதியில் அப்பசுவையே அறுத்துக் குருதியை யன்றிப் பாலைக் காணாராய், இப்பசுவிற் பாலில்லையென்று துணியுங் கோக்கொலையாளர் போன்று, வேதப் பசுவைத்தம் (‘வேதப் பசு’ என்றது ‘வேதம் பசு அதன்பால் மெய்யாகம நால்வ, ரோதுந் தமிழ்தனி னுள்ளுறுநெய் – போதமிகு. நெய்யினுறு சுவையாம் நீள்வெண்ணெணய் மெய்கண்டான். செய்ததமிழ் நூலின் றிறம்’ என்ற வெண்பாலிற் கூறப்பட்டது.) புதுத்துறைக் கொடுவாளாற் கொன்று ஆராயும் இந்தப் பிராகிருதரை (பிராகிருதர் – நூல்களைக் கற்றற்குரிய அறிவும் ஆற்றலும் காதலுமில்லாதவர், மிருகேந்திராகமம்.)

“தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான்” – திருக்குறள் 1073

“முனிவர் உயர்புடையதனையு மிழிபுடையதனையும் ஒப்ப விலக்குப” – சிவஞானபாஷ்யம்

என்னும் பொய்யாமொழிகட்கு ஏற்பச் சாமுசித்தர்களோடு (சாமுசித்தர் – முற்பிறப்பிற் செய்த புண்ணிய விசேஷத்தால் அவ்வறிவோடு பிறந்து சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்.) ஒப்ப விலக்குதல் எமது கடன். பொருளுண்மை தேரும் அறிவும் ஆற்றலும் காதலும் மிக்க இடை நின்ற வைநயிகராகிய (விநய சம்பந்தமுடையவர்கள்) யாம்.

“வேதவாக்கிய முழுதும் பிராணமே. வேதத்தின் வேறாய நூல்கள் அதனோடு விரோதியாதவழி, ஆக்கியோர் தாரதம்மியத்துக்கேற்பப் பிரமாணமாம். வேதம் போல் திவ்விய சிவாகமும் பிரமாணமாம்.” – சுருதிசூக்தி மாலை.

“எல்லாவுயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரம்சிவனாற் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுண்மை கொள்ளப்படும்.”

என்னுஞ் சத்தியஞான தரிசனிகளது ஆணைக்கடங்கி அவர்கள் காட்டிய முறையாற் பொருள் கொண்டு இருக்காதி வேதங்களைச் சிவவாக்கேயென விசுவசித்து அவைகளை வந்தித்து வாழ்வேம்.

‘திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், சிவஞான சுவாமிகள் முதலியோர் தமிழ் நாட்டில் சரித்திரத்துறை மிக்கு விளங்காத காலத்தில் அவதரித்தமையால் வடமொழி வேதாகமங்களைச் சிவவாக்கெனச் சம்மதித்துள்ளா’ ரென்று இப்புதிய துறையார் கதறுவர். கற்றவர் தொழுதேத்துங் காழிவேந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் சமணர் மிகாமல் வேத நிந்தையில் அவர் தம்பிமாராகிய இப்புதிய துறையார் மட்டும் மிகுந்து கிடந்தாரே யாமாயின், ‘கோற்றொழில் திருத்தவல்ல குலச்சிறையார்’ நிறுத்திய கழுத்தறியில் எமது பூசுரர்சிங்கம் இக்கூட்டத்தினரை யன்றோ அழுத்திததைத்து வேதாகமங்களின் வழுத்தபு தெய்விகத்தை விளக்கியிருக்கும்? யாமும் அப்போது மங்கையர்க்கரசியாரின் செங்கமல சீபாத நீழலில் தங்கி அக்காட்சியைக் கண்டு கொண்டிருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேமாயின் “ஆஹா! போதமாவது முக்கட் புராணனை யறிவதென்னும் வேதநீதியை விடுத்துப் பருப்பொருளுணர்ந்த இப்பேதை நீரார் படுவன பாரீர், பாரீர்” என்று கூறி ஏமாப்பேம்.

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக் கலைஞானம் எனப்படும் அபரஞானத்தையும், பவமதனை யறமாற்றும் பாங்கினி லோங்கிய ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் எனப்படும் பரஞானத்தையும் குழைத்து ஜகதம்பிகை யருத்திய தீம்பாலினை யுண்டருளிய குறைவிலா நிறைஞானக் கொண்டலார்க்கு ஓதாது ஞானமெலா முணர்ந்தார்க்கு – வேதமொடு சைவ நெறி விளக்க வந்த கவுணியனார்க்கும், மறைமொழி மெய்ச் சிவஞான பாடியஞ் செந்தமிழ் வகுத்த சிவஞான மாமுனிவர்க்கும் பிராகிருதத் தடிப்பேறிய சரித்திர ஆராய்ச்சி ஞானமில்லை யென்று அப்பெருமக்களின் அவதார காலத்தை யிகழு முகத்தாற் கூறிய பாவகாரிகட்கு ஐயோ! உலகநூற் கல்வியும் அக்கல்வியாளரும் சிவஞானப் பேற்றிற்குப் பெருந்தடை யென்பதை விளக்கும்

‘கல்வி யென்னும் பல்கடற் பீழைத்தும்’,

‘கற்றாரை யான்வேண்டேன்’ என்னும் மணிவாசகங்களை யறியாத பாவகாரிகட்கு ஐயோ! எச்சிற்குழிச் சித்ரான்னம் அக்குழியில் வசிக்குங் காக்கைகட்கே நெய்யும் பாலுந் தேனும் போன்று இனிக்குமன்றி மானஸவாவியில் வசிக்கும் ஹம்ஸங்கட்குச் சிறிதேனும் ஏற்குமோ? ஆகலின்

‘உள்ளநிறை கலைத்துறைக ளொழிவின்றிப்
பயின்றவற்றாற் பூதபரம் பரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத – சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்த’ ப் பிரான் முதலியோர் எக்காலத் தவதரிக்கினும் ஏனைய நெறிகளையுந் துறைகளையும் மதித்து மயங்குவதில்லை. எனவே பூமியிலுள்ள ஆன்மாக்களை ஈடேற்ற அவ்வப்போது சஞ்சரிக்கிற சிவன்களே அவர்களென்றுயாங் கூறி அப்பெரியார்களைப் பிழையாது வந்தித்து வாழ்வேம்.

ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் சாமவேதத்தைப் பலப்படப் புகழ்வதால் அவர்கள் சாமவேதப் பார்ப்பனத் தந்தைக்குத் தில்லைவாழ்ந்தணத்தாயிடம் பிறந்தவர்களென்றும், தந்தைக்குரிய அவ்வேதத்தைப் போற்றுங் கடப்பாடுபற்றியே அவர்கள் அங்ஙனம் அதனைப் புகழ்ந்தார்களென்றும் ஊகித்தற் கிடனுண்டு என்று இப்புதிய துறையார் புலம்புவர். இந்த யூகம் பெருமையுந் தருமமும் பொருந்தியதாயின், இப்புதிய துறையார் தம் துறையிற் சிறிது தம்மினுந் திறம் பெற்றுத் தமக்காதார புருடராயுள்ள மேனாட்டா ரியற்றிய ஆராய்ச்சி நூல்களையும், தக்கன் சாத்தன் முதலிய புறமதத் தமிழ ரியற்றிய காவிய நூல்களையும் பலபடப்புகழ்வதால் இவருடலிலும் அவ்வயலவர் இரத்தங் கலந்திருத்தல் கூடுமென்று யாமும் யூகிப்பேம்.

‘நல்த்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்’ என்னுங் கட்டளைக் கல்பெற்ற எமக்குக் குலத்தூய்மையைத் தெரியும் வழியிது வென்றுணரும் ஆற்றல் படையாத இந்நவீனரின் அற்பபுத்தி வராது. சித்தாந்தாஷ்டகம், கோயிற் புராணம் என்னும் அமிழ்தப் பொழிவால் தமிழ் வழங்கு நிலத்தை நிலைபெறச் செய்த அந்நலங் கனிந்தாரது குலத்தைக் கலப்புக்குலமென்று கூறி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்ள யாம் மாட்டோம். தொன்று தொட்டு வருங் கேள்வியான் அனுபவமுடைய ஆசான் றிருவருள் பெறாத தான்றேன்றிகட்கே சாமவேத நலமறிய வாராது குலக்கேடெய்தும். திருவருள் கிடைத்த நுண்ணறிவினோராகிய எம்புண்ணிய முதல்வர் அவ்வருட்கண்கொண்டு அவ்வேத நலத்தை யறிய வல்லுநராய் அதனைப் புகழ்ந்து எமக்குத் தந்தருளினார்க ளென்றும் ஆகலின் ஐயமற்ற அதி பரிசுத்த தில்லை வாழந் தணத் தந்தைக்கே பிறந்தருளினார்க ளென்றும் யாங் கூறி அப்பெருமானாரை வந்தித்து வாழ்வேம்.

சில வேடத்தில் மறைந்தொழுகும் இச்சரித்திரத் துறையார் செய்யும் வைதிக சைவ நிந்தை அம்மட்டோடு நின்றபாடில்லை. அவர் சிவா நுபூதிச் செல்வராகிய நம்பியாண்டார் நம்பிகளினுந் தம்மைச் சிரேட்டரெனக் கருதித் திருமுருகாற்றுப்படையினை யருளிய நக்கீரரே திருக் கண்ணப்ப தேவர் திருமறத்தினையும் அருளினாரெனத் துணிவதற்கில்லை யென்பர்; வள்ளி தேவியாரை மணந்த முருகரைத் தமிழ்த் தெய்வமென வேறாக்கித் தெய்வ யானையாரை மணந்த சுப்பிரமணியரை ஆரியத் தெய்வ மென்பர், கால நிர்ணயமென்னுந் தங்குறியைத் தம்மவர்க்குச் சுவையுடைய தாக்கு நிமித்தம் பெரிய புராணத்தில் ஸ்ரீமந் நடராஜப் பெருமானது பரிபுரக்கம்பலையைச் சேரமான் பெருமாள் நாயனார் இரு செவியும் ஆரவுண்ட சரிதத்தைப் பொய்யென்பதோடு ‘தார முய்த்தது பாணர்க் கருளொடே’ என்னுந் தேவாரத்துக்குத் ‘திருநீலகண்டப்பாணர்க் கருளிய திறமும் போற்றி’ யென எங்கள் பாக்கியப் பயனாஞ் சேக்கிழார் பெருமான் தந்தவுரையும் பொருந்தா தென்பார்; தாவில் சராசரங்களெல்லாஞ் சிவம்பெருக்கும் பிள்ளையாரை ஈன ரென்பர்; திருவாவடுதுறை மடமாகிய ஞான ராஜதானியில் வீற்றிருந்து சைவ வுலகத்தில் தனித்திகிரி யுருட்டிவரும் மெய்கண்ட சந்தான ஞானபாநுக்களின் பரம்பரைக்கும், அவ்வாதீன குலதெய்வமாய்ச் சுத்தாத்வைத பாஷ்யாசாரிய ரத்நமாய்ப் பிரகாசிக்கும் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சித்தாந்தத்துக்கும் விரோதமாய்த் தமிழ்ச் சிவஞான போதம் வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டதன்றென்பர்; சோரம்போன மனைவியைப் பிராயச்சித்தஞ் செய்து சேர்த்துக்கொள்வது பழந்தமிழரது ஒழுக்க மென்பர். விஸ்தார பயத்தால் யாம் பிற விபரீதங்களையும் விவரித்திலேம்.

இதுகாறுங் கூறியவாற்றால், இத்துறைச் சைவர் தமிழகச் சரித்திரத்தை யாராய்வதாகச் சொல்லி, வைதிக சைவ தர்மத்தை யிழுக்குப்படப் பேசியும் எழுதியும் வருவதாகிய பலவகை யுபாயங்களானும் சைவயுலகத்தைத் தம்மோடொப்ப விபரீத வுணர்விற் செலுத்தி மும்மலங்களினுங் கொடியராதலையாம் சிறிது புலப்படுத்தினேம். இவருக்கு வடமொழியின்பா லுள்ள பகைமைத்தீ இவரைப் பற்றிநின்று பற்றுதல் செல்லாத வேதசிவாகமம் சைவசமயம் சைவாசாரியர் முதலிய பலவினும் போய்ப் பற்றப் பார்க்கிறது. ஆயின் ஸ்ரீ ஞானசம்பந்தாதி பரமாசாரிய மூர்த்திகளை இவர் சிறிதும் அங்கீகரிப்ப தில்லையோவெனின், முக்குணங்களுந்து வைத்துழக் கிச்சவட்டுகின்ற இவ்வேழையர்

‘அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு’ என்னுங் குறட் பாட்டுக்குள் முக்குணங்களுங் கடந்த அந்தச் சிற்கன சீலர்களை யகப்படுத்தி அவர்களுக்கு ஒவ்வோ ரறியாமையை யேற்றி யங்கீகரிப்பது முண்டென்க. தாயை உத்தமி யென்று உடன்பட்டு அவள் காட்டுந் தந்தையை மட்டில் விலக்கி வேறு தேடுந் தனயரும், அந்த ஜகத்குரு மூர்த்திகளைத் தெய்வீகரென்று உடன்பட்டு வடமொழி வேதசிவாகமங்கள் பதிவாக்கென்பது முதலிய அவர்களின் கோட்பாடுகளை மட்டும் விலக்கி வேறுதேடும் இவரும் ஒரு மாட்டுக்கிருகொம்பு. கொடிய பாதகக் கலியுகம் காசிக்குச் சென்ற வியாசனையுங் கைதம்பிக்கச் செய்ததாயின் இவ்வெளியோரை எளிதில் விடுவதாமோ?

வைதிக சைவத் தமிழர்காள்! புறச்சமயச் சிறாரும் தம் தம் மதங்களின் அடிப்படையான கோட்பாடுகளையேனுந் தெரிந்து வைத்திருப்பது இன்றுங் கண்கூடா யிருப்ப, உங்களுள் தாம் ஆசரிக்குஞ் சமயத்தின் பேர்தானும் இது, தம் சமயப் பிரமாண நூலின் பேர்தானும் இது, தம் சமய சந்தான பாஷ்ய பரமாசாரியர்களின் பேர்தானும் இது என்றின்னோரன்ன பால பாடங்களையேனும் அறியாது நீண்ட மாந்தர் எத்தனைபேர்? குழியிற் புதையுண்டு கிடக்குஞ் சவங்களின் கால்மட்டிலும், கிறிஸ்தவ முதலிய பிறமத நிலயங்களிலும் போய் விழ்ந்து பிரார்த்திப்போர் எத்தனை பேர்? ஹிந்துமகா சபை பிரமஞானசபை விவேகாநந்த சபை சாயி சபை சன்மார்க்க சபை முதலிய அசைவக் குழாங்களில் உறுப்பினராக இருந்து வருவோர் எத்தனை பேர்? விபூதி ருத்ராட்சங்களைத் தரித்துக் கொண்டு, சிவபிரானை வணங்குவோர் வறுமையுந் துன்பமு மடைவரெனக் கூறிப் பிறகடவுளரைக் கும்பிடுவோர் எத்தனை பேர்? திருநீற்றின்மூலம் அவதாரஞ் செய்யும் பசுக்களை மலந்தின்ன விட்டுக் கருடதரிசனஞ் செய்வோர் எத்தனை பேர்? பல சைவாலயங்களைப் புற மத மன்னர் கட்டினாரென்று பொய்ச் சரித்திரங்களை எழுதிப் பாடசாலைகளிற் பாடமாக வைக்கவும் சைவ மாணவர் அவற்றை வாசித்து நம்பவும் இடங் கொடுப்போர் எத்தனை பேர்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s