கணேசரும் சிவபெருமானும் ஒருவரே

தேவர்களை வருத்திய நஞ்சை அடக்கி இடரை நீக்கிய மகேசுரமூர்த்தியின் திருவருளாகிய திருக்கண்டத்தினின்றும், பிரதம சிருட்டியாரம்பத்தில் அடியார்களுடைய இடரை நீக்குங் காரணமாக, விநாயகக் கடவுள் தோன்றியருளினாரென வாதுளாகமம் கூறுகின்றது, அவர் யானை முகத்தையும், மூன்று திருக்கண்களையும், ஐந்து திருக்கரங்களையும், அவைகளில் தந்தம், பாசம், அங்குசம், பண்ணியமாகிய இவைகளைத் தரித்தவராயும், கிம்புரிப்பூணணிந்த ஒற்றைத்தந்தத்தையும், இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி யென்னும் மும்மதத்தையும், இரண்டு திருவடிகளையும் உடையவராய் இருந்தருளுகின்றனர்.

கயமுக சம்மாரத்தின் பொருட்டு முரிக்கப்பட்டதாகிய ஒரு கொம்பை ஏந்தியருளியது, மும்மலங்களையும் நீக்கியருளுபவர்தா மென்பதை அறிவித்தற்காகும். ஆன்மாக்களை அநாதியே பந்தித்த ஆணவ மலமாகிய யானையைப் பாசத்தாற் கட்டி, அங்குசத் தாலடக்கி, மறைத்தலென்னுங் கிருத்தியத்தைச் செய்பவர் என்பதை உணர்த்துவதற்காகப் பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியருளினார்,

ஆணவத்தை நீக்கி ஆன்மாவை அடிமை கொள்ளுபவர் என்பது, ஆணவ ரூபமாகிய கயமுகனுடைய சேனைகளைப் பாசத்தாற் கட்டி, அங்குசத்தாலடக்கிம் அவன் மலவலி கெட்டுப் பெருச்சாளி ரூபமாகவர, நீங்காத ஞானத்தைக் கொடுத்துச் சுத்தனாக்கி, வாகனமாம் பேற்றைஅளித்து, அடிமை கொண்ட சரித்திரத்தாலினிது விளங்கும்,

தணிகைப் புராணம்

கண்ணிலாணவ வெங்கிரிபிணித் தடக்கிக்
கரிசினேற் கிருகையுமாக்கு
மண்ணலைத்தணிகைவரைவள ராபற்
சகாயனையகந்தழீஇக்களிபாம்

பேரின்பத்தைக் கொடுப்பதாகிய அத்துவிதமுத்தி யினியல்பை, விந்துநாததத்துவங்களின் வடிவமைந்த துதிக்கை இனிது விளக்குகின்றது.

அடியார்கள் பசுஞானத்தைக் கவளமாக்கி ஒப்பிக்க, அதனையுண்டு, திருவயிற்றினுள்ளாக வடக்கிச், சிவஞானத்தைக் கொடுப்பவர் தாமென்பதை உணர்த்துதல் காரணமாகக், கவளவுணவாகிய மோதகத்தை ஏந்தினர்.

திருவிளையாடற் புராணம்

உள்ளமெனுங்கூடத்திலூக்க மெனுந்
தறிநிறுவியுறுதியாகத்
தள்ளரியவன் பென்னுந்தொடர்பூட்டி
யிடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப்பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ளமதம் பொழிசித்திவேழத்தை
நினைந்துவருவினைகடீர்ப்பாம்.

இக்கடவுளே ஐயமற்ற பொருளாயுள்ளவரும், அறுவகைச் சமயத்தாராலுந் துணியப்படும் பொருளாயுள்ளவரும், ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியமென்னும் ஆறு குணங்களையுடையவரும், அனாதி போதம், சர்வஞ்ஞத்துவம், திருப்தி, அலுப்தசத்தி, அநந்தசத்தி, சுவதந்திரம் என்னும் சுத்த குணங்களாறு முடையவரும், பஞ்சகிருத்திய பதியாயுள்ளவரும் என்று பெரியோர் கூறுவர்.

சிவபெருமான் பஞ்சகிருத்தியபதிதா மென்பதை ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களினாலும் உணர்த்துதல் போல, விநாயகக் கடவுளும் துதிக்கை முதலிய ஐந்துதிருக் கரங்களினாலும் உணர்த்துகின்றனர்.

கந்தபுராணம்

காப்பவனருளுமேலோன் கண்ணகன்
ஞாலம் யாவும்
தீப்பவனேனைச் செய்கை செய்திடு
மவனு நீயே
யேப்படுஞ் செய்கை யென்னவெம
துளம்வெதும்பு மின்ன
னீப்பது கருதியன்றோ நீயருள்
வடிவங் கொண்டாய்.

அவன், அவள், அதுவாய் இருக்கும் உலகத்திலேயுள்ள உயர்திணைப் பொருளும் அ·றிணைப் பொருளும் தம்மிடத்திலே தோன்றி யொடுங்குகின்றமையைச் சிவலிங்கத்தினுடைய நபுஞ்சக லிங்கமாகிய பிரமபாகத்தாலும், ஸ்திரீலிங்க மாகிய விட்டுணுபாகத்தாலும், புல்லிங்கமாகிய உருத்திர பாகத்தாலும் சிவபெருமான் உணர்த்துவதுபோல, இவரும் கொம்புள்ளதனால் ஆண்போலிருக்கும் ஒரு பாகத்தாலும், கொம்பின்மையால் பிடி போலிருக்கும் ஒரு பாகத்தாலும், இரண்டுங் கூடினமையால் அலிபோலிருக்கும் உருவத்தாலும் உணர்த்துதலானும் சிவபெருமான் கொண்ட உருவத்திருமேனி இருபத்தைந்தனுள் ஒன்றாகிய அர்த்த நாரீசுவர வடிவம் போல இவருடைய திருவுருவமும் பொருந்துதலாலும், பிரணவ வடிவமாகச் சிவலிங்கம் அமைந்திருத்தல் போல, விநாயகக் கடவுளுடைய திருமுகமும் பிரணவ வடிவமாய் அமைந்திருத்தலானும், விந்து தத்துவத்தைக் குறிக்கும் ஆவுடையாள் வட்டவடிவமாகவும் நாத தத்துவத்தைக் குறிக்கும் துதிக்கையின் நுதிவட்ட வடிவமாகவும், நாத தத்துவத்தைக் குறிக்கும் மேற்பாகம் நீண்ட வடிவமாகவும் இருத்தலானும் சிவபெருமான் ஞானமே உருவமாகப் பொருந்தியிருத்தல் போல, இவருஞ் சுத்தஞானமே உருவமாகப் பொருந்தியிருத்தலாலும், சிவபெருமான் ஞானாசாரியராயிருந்து உண்மைப் பொருளை யுபதேசித்தது போல, இவரும் நம்பியாண்டார் நம்பிக்குப் பரமாசாரியராயிருந்து ஞாநோபதேசஞ் செய்தமையாலும், பிறவாற்றாலும் சிவபெருமானும் விநாயகரும் ஒருவரே யென்பது நன்கு விளங்குகின்றமை காண்க.

கூர்மபுரணம்

வெண்ணிலாக்கற்றை கான்றுவிளங்குமோர் பிறைக் கோடின்றி
யெண்ணிவோர் பாகங்கூந்தற் பிடியென விருந்தவாற்றாற்
பெண்ணொருபாகம் வைத்த பிஞ்ஞகனுருவு காட்டு
மண்ணலங் களிநல்யானேயடி மலர் சென்னி சேர்ப்பாம்.

திருமுறைகண்ட புராணம்

எந்தையே……
சந்தமறைமுதற்கலைக நீயே யோதித்
தரல்வேண்டுமென வேழமுகத் தோன்றானு
மந்தமறவோது விக்கவோதி நம்பி மகிழ்ந்தனன்……

சூதசங்கிதை,

உயர்தினையும·றினையும் படைத்தளித்துத்
துடைக்கு முதலொருதானே யென்
றயர்வறவெத்தகையோரு மறிந்துய்யத்
தெரிக்குமடையாள மேய்ப்பப்
பெயர்கொளுயர் திணையும·றிணையும்
விரவிய வுருவிற் பிறங்குவாணை
மயர்வடியவர்க்க கற்று மொருமருப்பானை
விநாயகனை வணங்குவாமால்.

———ச.குமாரசுவாமிக் குருக்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s