இலிங்கோத்பவர்

முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது. பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது.பொய் சொன்னதற்காக நான்முகனுக்குக் கோயில் இல்லாமற் போயிற்று! தாழம்பூவும் சிவபெருமானை சூடும் பேற்றினை இழந்துவிட்டது. திருமால் தன் பிழைக்கு வருந்தியதால் உய்வடைந்தார்.

திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி பலவாறு போற்றப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தனது பதிகங்கள் பலவற்றில் ஒன்பதாம் (9) பாடலிலும், திருநாவுக்கரசர் 125 பாடல்களிலும் சுந்தரர் 35 பாடல்களிலும் அரியும் அயனும் தேடற் கரியானைப் பரவுகின்றார்கள்.

‘நீண்டமாலும் அயனும்வெருவ நீண்ட நெருப்பு’ எனப் போற்றும் மணிவாசகர்.

“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ”

என்று பாடுகின்றார். ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெருஞ்சோதியாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை இவ்வடிவம் இனிது காட்டுகின்றது.

சிவன்கோயில் கருவறையின் மேற்குச்சுவர் நடுமாடத்தில் இலிங்கோற்பவமூர்த்தி இடம் பெறுகிறார்.

“அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னையாள விரும்பி என் மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே”

– திருமாளிகைத்தேவர்

“தேடிக் கண்டு கொண்டேன் – திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்”

என்னும் அப்பர் பெருமானின் திருஅங்கமாலைப் பாடல் இங்கு சிந்தித்தற்குரியது.

இலிங்கோற்பவமூர்த்தியை வழிபட்டால் எல்லாத் தீங்குகளும் விலகும். மக்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் பேறுகளையும் நல்கும். பூதாதிகளின் தொல்லை இராது. நீண்ட ஆயுளையும் புண்ணியத்தையும், மறுமையில் நிலைத்த பேரானந்

திருச்சிற்றம்பலம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s