சமணர் கழுவேற்றம்-விளக்கம்


திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சமணர் கழுவேற்றம்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை

சமணர் கழுவேற்றம்
பிரமாண நூல்கள்

ஒவ்வொரு சமயமும் ஒன்றோடொன்று இயைபுடைய பலகோட்பாடுகளை யுடையது அவ்வியைபு நேராகவேனும் பரம்பரையாகவேனும் இருக்கும். ஒரு வாற்றானுந் தம்முள் இயைபில்லாத கோட்பாடுகள் எச்சமயத்தினுமில்லை. ஆகவே, ஒன்றனை யழிக்க முந்துறுவது பிறவற்றினும் போய்ப்பற்றி எல்லாவற்றையுமே யழிக்க எத்தனிப்பதாய் முடியும். இதனைக் கூர்த்தமதிகொண் டோர்க. இனி அத்தகைய கோட்பாடுகள் அவ்வச்சமயப் பிரமாணநூல் களாற்றான் விளங்கும். பிரமாண நூலில்லாத சமயம் யாண்டு மிராது. பிரமசமாசம், ஆரியசமாசம், பிரமஞானசபை முதலிய நவீனசமயங்களுக்கும் அவ்வவற்றை நிலையிட்டாரது வாக்குக்கள் பிரமாணமாக விருக்கின்றன. அங்ஙனமாக, சைவசமயத்துக்கும் பிரமாணநூல்க ளிருத்தல்வேண்டும். அவைதான் வடமொழியிலுள்ள இருக்கு முதலிய நான்கு வேதங்களும், காமிகமுதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களும், தமிழிலுள்ள பன்னிரண்டு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், சிவஞானமகாபாஷியமுமாம். இத்தனையுந் தம்முட் சிறிதும் விரோதியா. பொருள்கோள்முறை தெரியாதோர் அவை விரோதிப்பனவாக மயங்குவர். அதனைத் தெரிந்த சைவர்க்கு அவை யெல்லாம் ஒரேநெறிச் செல்வனவாய் அகச்சான்றாதல் ஒருதலை. ஆகலின் அவற்றுள் ஒன்றை அகச்சான்றென்றும், பிறிதொன்றைப் புறச்சான்றென்றும் அவர் சொல்லார். பொருள்கோள்முறை சிவஞானமகாபாஷிய முதலியவற்றுட் காட்டப்பட்டது.
******
சைவர் பட்ட துயர்
******
அமிழ்திணு மினியது தமிழ். அதனிது மினியது சைவம், ஏனெனில் சிவபிரானே தமிழைத்தந்தார்; ஆய்ந்தார்; தமிழ்ப்பெருநூல்களுள் மிகப்பெரும்பகுதி போற்றுதற் குரியராயினார் என்க. இத்தகைய சைவசமயத்துக்கு இடையிடையே இடையூறிழைத்தார் எத்தனையோபேர். வைணவரொருபால் வாட்டினர். ஏகான்மவாதியரொருசாரிடித்தனர். சாக்கியரொருபுடை தாக்கினர். அருகரொருபுறந் திருகினர். எமது சைவமூதாதையர் பட்டதுயர் அம்மம்ம! அளவுபடாது. அதனை ஸ்ரீ ஹரதத்தசிவாசாரியசுவாமிகள், ஸ்ரீ சிவாக்கிரயோகிகள், ஸ்ரீ நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள், ஸ்ரீ அப்பைய தீக்ஷ¢தசுவாமிகள் முதலிய முனீந்திரர்களது சரிதத்தைப் படித்தறிக. அங்ஙனம் சைவத்தையும், சைவமக்களையும் நையவைத்த கூட்டத்தினருட் சேட்டராவார் சமணர்.
******
அவதார ரகசியம்
******
இக்காலைச் சிலதமிழர் சைவத்தை நிந்தித்துத் தமிழை வந்திக்கின்றனர். அந்நிந்தை தமிழன் குற்ற மன்று. சைவர்க்கு அத்தமிழரினின்றுஞ் சைவத்தைக் காப்பது இன்றியமையாத கடன். ஆனால் அது அத்தமிழரைக் கொலைபுரிவதாற் கூடாது. தமிழ் ஒரு பேழை: சைவம் அதனுட் பேணி வைக்கப்பட்டதொரு நவமணிமாலை யென்னும் உண்மையை அத்தமிழர்பாற் கொளுத்திடின் சைவம் நிலையுறும். அவர்குறும்பு மடங்கும். அப்படியே அக்காலத்தில் சமணரும் சைவத்தை யிகழ்ந்து நாட்டைப் பாழாக்கினர். இதனை “மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே – யாதியரு மறைவழக்க மருகியா னடியார்பாற் – பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் – டேதமில்சீர்ச்சிவபாத விருதயர்தா மிடருழந்தார்” என்னுந் திருவாக்காலறிக. ஈண்டுஞ் செய்யற்பாலது சைவத்தின் இழிந்தது சமண் என்பதை அச்சமணருக்குக் காட்டுவதே. சிவபாதவிருதயருக்கும் அதுவே கருத்தென்பது அவர் “பரசமய நிராகரித்து நீறாக்கும்- புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்று தவம்புரிந்” தமையாற் போதரும். அங்ஙனமே திருஞான சம்பந்தமூர்த்திசுவாமிகளும் “அவம்பெருக்கும் புல்லறிவினமண்முதலாம் பரசமயப் பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட” மாத்திரந் திருவவதாரஞ் செய்தார்கள். இன்னும் அவர்கள் மதுரையிற் பிரவேசித்த செய்தியைச் சமணர் அரசனுக் கறிவிக்கும் போது “பாலன் – அணைந்தன னெங்களை வாதினில் வெல்ல” என்றே கூறினர். “எங்களை வாதினிற் கொல்ல” என்றிலர். ஆகவே ஞானபோனகரது அவதாரம் சமணசமயத்தை யொழிக்கவே; சமணரை யொழிக்க வன்று பெறப்படும். சமணசமயத்தையொழித்தலாவது அதனிழிவைப் புலப்படுத்தல்.
******

பருவம்
******
பாலறாவாயர் பாண்டியன் முன்னர்ச் சமணப்பெருங் கூட்டத்துக்கு நடுவில் இருந்துகொண்டு மங்கையர்க்கரசியாரைத் தேற்றுமாறு “எனைப் பாலனென்று நீ நனியஞ்சவேண்டா” என்றும், அப்பெருமானார் புனல்வாதத்தினிமித்தம் வீதியில் எழுந்தருளுகையில் ஆண்டு நின்றார் “பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தா – மானசீர்த் தென்னனாடு வாழவந்தணைந்தார்” என்றுங் கூறுமாற்றால், அப்பெருமானார் தமது அதிபாலியத்தில் சமணரோடு வாதஞ் செய்தது வெளி. தொண்டுகிழவனாகிய பிரமனும் தான் படைத்த மாதின் எழில் வெள்ளத்தை நான்கு முகத்தாலும் பருகினான். ஆனால் கனவுக்குரிய இயல்பெல்லாம் ஒருங்கமைந்து “புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் புகலிவேந்தர்” அம்மாதினுநல்ல பூம்பாவையார் பால் “கண்ணுதல் கருணைவெள்ளம் ஆயிரமுகத்தாற் கண்டார்” அவர்களுக்குப் பதினாறாட்டைப் பிராயமே அவ்வாறாயின் சமணரோடுவாதிட்ட அதிபாலியம் மிகப்பரிசுத்தமாகவே யிருக்கும். காமக் குரோத முதலிய கொடுமைகள் குடிபுக அப்பருவஞ் சிறிதும் இடந்தருவதில்லை.
******
மதப்போர்
******
செல்வம், அரசு, அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றில் ஆசைமிகுந்தவர் சமயத்தை வியாஜமாகவைத்துக்கொண்டு ஒருவரோடொருவர் போர் தொடுப்பர். சம்பந்தருக்கு அவ்வாசை சிறிதுமில்லை. இருக்குமாயின் சமணரது அழிவுக்குப் பிறகு அவர்கள் பாண்டியராக மணிமுடி கவித்துத் தனியரசியற்றியிருப்பார்கள். ஆனால் அவ்விராச்சியம் பழைய பாண்டியருக்கே கொடுக்கப்பட்டது. ஆகலின் அப்பரசமய கோளரியாரை மதப்போர் தொடுப்பவரென்றல் வீண்புலப்பமாகும். அவ்வந்தணர்சிகாமணியாரது திருவுளப் பாங்கெல்லாம் “சிவபெருமானே! அடியேற்கு இன்று ஞாலம் நின்புகழே யாகவேண்டும்” என்பது தான்.
******
மதுரைக்கு வருதல்
******
கோப்பெருந்தேவியாரும், மாப்பெருமந்திரியாருஞ் செய்த வேண்டுகோட்கிசைந்து மதுரைக்கு விஜயஞ் செய்த பரசமயகோளரியார் திருமுன் அவ்விருவரும் “அமண்கொடியோர் செய்த கடுந்தொழில் நினைந்தே – மண்டிய கண்ணருவி நீர்பாய” நின்று மலர்க்கைகுவித்து “அவரை (சமணரை) வென்றருளில் உய்யும் எமது உயிரும் அவன் (அரசன்) உயிருமென உரைத்தார்கள்”. புகலிவேந்தர் அவ்விருவரையுங் கடைக்கணித்து “ஒன்று நீ ரஞ்சவேண்டா வுணர்விலா வமணர்தம்மை – யின்றுநீ ருவகையெய்த யாவருங் காணவாதில் – வென்று மீனவனை வெண்ணீ றணிவிப்பன் விதியா லென்றார்.” ஆகவே அவ்வீரர் மதுரைக்கு வந்தது சமணரை வெல்ல வேயன்றிக் கொல்ல வன்று என்பதறிக.
******
வாதங் கூறியார்
******
வாதசபை சமணப்பாண்டியனது அவை, தொடக்கத்தில் “பிள்ளையார்” சமணரை நோக்கி “உங்கள் வாய்மை பேசுமின்கள்” என்றார்கள், வாய்மையாவது சமயக்கொள்கை. பேசுமின்கள் என்பதற்கு (யாம் தருக்கித்து மறுக்கச் சித்தமாயிருக்கின்றோம், நீங்கள்) எடுத்துக் கூறுங்கள் என்பது பொருள். ஆனால் சமணருக்கு ஓதாதுணர்ந்த போத மூர்த்தியின் தருக்க சாமர்த்தியம் நன்கு தெரியும். சாரிபுத்தனது சரிதமிருந்துஞ் சம்பந்தருக்குத் தருக்க சாமர்த்தியமில்லை யென்றெழும் இக்காலத்து மடமை அச்சமணர்பாலுமில்லை. ஆகலின் அவர் தருக்க வாதத்திற் கிசைந்திலராய் “தருக்காவாதத்தால் நேரும் வெற்றி சபையிலுள்ள பண்டிதருக்கே புலனாம், பாமரருக்கும் புலனாகத்தக்கது பிரத்தியக்ஷவாதம், அது ‘தீயில் நீரில் வெல்வது.’ அதனையே யாம் செய்வோம்” என்று சொல்லினர். “தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதி னுத்தரங் – கொள்ளும் வென்றி யன்றியே குறித்த கொள்கை யுண்மைதா – னுள்ளவாறு கட்புலத்தினுய்ப்ப தென்ன வொட்டினார்” என்னுஞ் செய்யுளால் மேலுண்மை தேர்க. இன்னுங் காண்டல், கருதல், உரையென்பனவாதிய அளவைகளுள் எவனெவன் எந்தெந்த அளவையை உடன்படுகிறானோ அவனவனோடு அந்தந்த அளவையிற்றான் வாதித்தல் வேண்டுமென்பது தருக்கநூற்றுணிவு. ஆகவே வாதங் கூறியார் சமணரும், அதற்கிசைந்தார் சைவ சிகாமணியாருமாதல் சித்தம்.
******
கருணைத்திறம்
******
நடந்த வாதங்கள் இரண்டு, அவை அனல்வாதமும், புனல்வாதமும். புனல்வாதத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அனலில் ஏட்டை முதலாவதிட்ட பிரானார் புனலில் சமணரிடும் வரைத் தாமதித்தார்கள். ஏடு கடல் சென்று சமணரை நட்டாற்றில் விட்டது. அப்போதே சமணரனைவருக்குங் கழுவேற்றத்தில் அச்சம் நிச்சயமாயிற்று. சமணர் புத்திசாலிகளாயின் அவ்வச்சத்தினின்றுந் தப்ப அப்போதும் ஒரு நல்ல வழி யிருந்தது. அதுதான் சரணாகதி. அதுமட்டும் நிகழ்ந்திருக்குமாயின் உடனே புகலித்தலைவர் அரசனைப் பார்த்து “அரசே! வழக்கிடுவாரிருவரில் ஒருவர் வென்றாலன்றித் தோற்றமற்றவர்க்குத் தண்டனை விதித்த லடாது. யாம் ஏடி டாது வாளாவிருக்கும்வரைச் சமணரிட்ட ஏடு நீரோடு செல்லினும் அது அவருக்குத் தண்டனையைத் தராது. எம்மையும் ஏடிட நீர் வற்புறுத்தமாட்டீர். ஒருக்கால் வற்புறுத்து வீராயின் எமது ஏட்டையும் நீரோடு செல்லுமாறு செய்வேம். அப்போது நீர் யாரைக் கழுவேற்றுவீர்? இருவரையுமே யென்பீராயின், தோற்றவரைத்தான் கழுவேற்றுவேமென்னும் உமது முறை தவறுபடும். ஆகலின் நீர் சமணரை விடுவிப்பீராக” என்றெல்லாம் வழக்காடியிருப்பார்கள். ஆனால் போகூழ்வயத்தராய சமணர் “மாறுகொண்டீருமிட்டால் வந்ததுகாண்டும்” என்று சொல்லி வள்ளலாரை யெதிர்த்தனர். “பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் – சொரியினும் போசா தம” என்பது வீண்போமா? அப்போதும் எங்கருணாசாகரர் “பரசமயங்கள் பாற” என்று திருவாய் மலர்ந்து கொண்டே ஏட்டை யிட்டார்கள். “பரசமயத்தர் மாள” என்னுஞ் சங்கற்பம் அவர்கள் பாலில்லை.
******
சமண சமய வொழிவு
******
ஏடி எதிர்சென்று எமது ஞான வீரர்க்கு வென்றி தந்தது. அதன்பயனாக “தென்னவன் றனக்கு நீறு சிரபுரச்செல்வரீந்தார். முன்னவன் பணிந்துகொண்டு முழுவது மணிந்து நின்றான். மன்னன் நீறணிந்தானென்று மற்றவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்களெல்லாந் தூயநீறணிந்துகொண்டார். பூதிமெய்க்கணிந்து வேந்தன் புனிதனா யுய்ந்தபோது – நீதியும் வேதநீதி யாகியே நிகழ்ந்ததெங்கு – மேதினி புனிதமாக வெண்ணீற்றின் விரிந்தசோதி – மாதிரந்தூய்மை செய்ய வமணிருண் மாயந்த தன்றே”. அமணிருளாவது சமணசமயம்.
******
திரும்புதல்
******
சிரபுரச் செல்வர் அங்ஙனம் பரசமய நிராகரண மட்டுஞ் செய்து மன்னரையும்,மங்கையர்க்கரசியாரையும், மந்திரியாரையும் “ஈசர்சிவநெறிபோற்றி யிருப்பீர்” என ஆஞ்ஞாபித்து மதுரையைவிட்டுத் தமது நாட்டுக் கேகினார்கள். அங்கு அப்பர்சுவாமிகள் அவர்களைச் சந்தித்தபோது “தயாசமுத்திரமே! தாங்கள் மதுரைக்குச் சென்று செய்தருளிய திருச்செயல்களை உணரத்தருளுக” என விண்ணப்பித்தார்கள். அதற்கவர்கள் “தென்னற்குயிரோடு நீறளித்துச் செங்கமலத்- தன்னமனையார்க்கு மமைச்சர்க்கு மன்பருளித் – துன்னு நெறி வைதிகத்தின் றூநெறியே யர்க்குத” லும், “வல்லமணர் தமைவாதில் வென்றதுவும் வழுதிபாற் – புல்லியகூனிமிர்த்ததுவுந்தண்பொருந்தப் புனனாட்டி – லெல்லையிலாத் திருநீறுவளர்த்ததுவு” மாகிய தமது சேவகத்தை யியம்பினார்கள். இந்த விடையில் சமணர் கழுவேற்றங் குறிக்கப்பட்டிலது. ஆகலின் சம்பந்தவள்ளலார் சமணர் கழுவேற்றத்திற் சிறிதுஞ் சம்பந்தியாமை காண்க. “மருப்பு நீள் கழுக்கோலின் மற்றவரை யேற்றியதும்” என்பது சொல்லக்கேள்வி, அவ்வேகதேசவசனம் பகுவசனத்தை யதிக்கிரமித்துப்பொருள் படுமாறில்லை. வீரரது வென்றியும் அதற்கேதுவாயின தென்னுமத்துனையே அதன் பொருள். “தோற்றவர் கழுவிலேறத் தோற்றிடத் தோற்றுந் தம்ப – மாற்றிடை யமண ரோலை யழிவினா லார்ந்த தம்பம் – வேற்றொருதெய்வமின்மை விளக்கிய பதாகைத் தம்பம் – போற்றுசீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச்சயத் தம்பமாகும்” என்பது கழுவர்ணனை. ஆர்ந்த – பொருந்திய. “மானமிலமணர் தம்மை வாதில் வென்றழிக்கப் பாடி” என்பதிலுள்ள “வென்றழிக்க” என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் “வெல்ல” வெனப் பொருள் தந்து நின்றது.
******
கழுவேற்றுவித்தார்
******
சமணரைக் கழுவேற்றுவித்தார் அரசரே. அவர்தான் “மந்திரியாரை நோக்கித் – துன்னிய வாதிலொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் – முன்னமே பிள்ளையார்பாலநுசிதமுற்றச் செய்தார் – கொன்னுனைக் கழுவிலேற்றி முறை செய்க வென்று” கட்டளை யிட்டார்.
******
கழுவேற்றியார்.
******
தோல்வியுற்ற சமணரை அரசரது ஆஞ்ஞைப்படி “பண்புடை யமைச்சனா” ராகிய குலச்சிறையார் “பாருளோ ரறியுமாற்றால் – கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையிலேற்” றினார். ஆனால் அவர் பாண்டிநாட்டுச் சமணரனைவரையும் அங்ஙனஞ் செய்திலர். “நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடியிட்ட – வெண்பெருங்குன்றத் தெண்ணா யிரவர்” மட்டும் ஏற்றப்பட்டனர். ஏனெனில் அவ்வெண்ணாயிரவருமே வாதத்துக்கு வந்தவரும் தோற்றவருமாவ ரென்க.
******
அநுசிதம்.
******
கழுவேற்றத்துக்குக் காரணம் “சமணர் பிள்ளையார் பால் அநுசிதம் முற்றச் செய்தார்” என்பது. அது பதினாறாயிரஞ்சிவனடியார்களையுஞ் சம்பந்தப்பிரானாரோடு ஒருங்கே தீயிட்டுக் கொல்லத் துணிதல். கொலை கூடாதுபோயினும் முயற்சி பொய்யன்று. ஆகவே அது தீயிட்டுக் கொல்லு முயற்சி (Attempted arson) ஆயிற்று. பதினாறாயிரஞ் சிவனடியார்களையுஞ் சக்களத்தி மக்களாகப் பார்க்கும் வன்கண்ணருக்கு மட்டும் அச்சமணர் முயற்சி அநுசிதமாவதில்லை.
******
முறை
******
அப்பர் சுவாமிகள் சமணத்தைவிட்டுச் சைவத்திற் பிரவேசித்ததைக் குற்றமாகவைத்துப் பாடலிபுரத்துச் சமண மன்னன் அவ்வடிகளாரைக் காளவாயிலிட்டான்; நஞ்சூட்டினான்; யானையைக்கொண்டு இடறவிட்டான்; கல்லோடு கட்டிக் கடலிற் பாய்ச்சினான். சம்பந்த வள்ளலார் பதினாறாயிரஞ் சிவனடியார்களோடு மதுரைக்கு வந்ததைக் குற்றமாக வைத்துப் பாண்டிச் சமண மன்னன் அவர்கள் வதிந்த மடத்தில் நெருப்பிட்டான். “தலை நெறியாகிய சமயந்தன்னை யழித்துன்னுடைய – நிலைநின்ற தொல்வரம்பி னெறி யழித்த பொறியிலியை – யலைபுரிவாயெனப் பரவி வாயாலஞ் சாதுரைத்தார்”, “அவ்விருளன்னவர் கூற வரும்பெரும் பாவத்தவன்றான் – றெல்லைச் சமய மழித்துத் துயரம் விளைத்தவன் றன்னைச் – சொல்லுமினிச் செய்வதென்னச் சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர் – கல்லுடன் பாசம் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்” என்னும் பிரமாணங்களால் சமணராசாங்கத்து நீதிபதிகள் சநாதனதர்மவிரோதி களைக் காளவாயிலிடல், நஞ்சூட்டல், யானையைக்கொண்டு இடறவிடல், கல்லோடு கட்டிக்கடலிற் றள்ளல், நெருப்பு வைத்தல் முதலியன செய்தல் வேண்டுமென்று விதியமைத்துக் கொண்டது விளங்கும். தொல்வரம்பின் நெறி, தொல்லைச் சமயம் என்பன சநாதனதர்மம். அவருக்குச் சமணமே சநாதனதர்மமாகலின் சமணத்தை வெறுத்தாரெல்லாம் அவ்விதிக் கிரையாக்கப்பட்டனர். அம்மட்டோ, பிறர்மனை நயத்தல் முதலிய தீயொழுக்கங்கட்கும் அன்ன தண்டனைகளையே அவ்வரசு பிரயோகித்து வந்ததை “அஞ்சொன் மடவார்த மார்வக்களி பொங்க – நெஞ்சத்தயிலேற்று நீள்வெங் கழுவூர்ந்துங் – குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டுந் – துஞ்சிற் றுலகந்தோ துன்பக்கடலுள்ளே” என்று சமண காவியமாகிய சீவக சிந்தாமணியுங் கூறுகின்றது. முற்காலத்தில் மேனாட்டார் சாமானியத் திருட்டுக்குங் (Larcency) கொலைத் தண்டனை விதித்து வந்தனர். அவையெல்லாம் அக்காலத்துச் சில பல வரசுகளின் வழக்குப்போலும். சமணசமயத்தை வெறுப்பவர் முதலிய குற்றவாளிகளை அவ்வாறு காளவாயிலிட்டும், நஞ்சூட்டியும், யானையைக்கொண்டு இடறவிட்டும், கல்லிற்கட்டிக் கடலிற்றள்ளியும், நெருப்பிட்டும் வதைத்து வந்த சமணமன்னர்களில் ஒருவராகிய பாண்டிவேந்தர் சைவமே சநாதன தர்மமென்னும் உண்மையை வாதத்தின் அநந்தரங் கண்டுகொண்டார். ஆகலின் குறைவிலா நிறைஞானக கொண்டலார்க்கு அநுசிதஞ் செய்த சமணரை அவ்வரசர் அவ்விராசாங்கவிதிப்படி கழுவேற்றுவித்தது மிகையாகாது முறையாயிற்று.
அன்றியும், காழியர்தவமும் பதினாறாயிரம் அடியார்களும் வாதத்திற்கென மதுரையிற் பிரவேசித்ததையே குற்றமெனக்கொண்டு அவர்களை நெருப்பிட்டுக் கொல்ல ஏவிய அரசன் அடுத்து அச்சமணர் நெருப்புவைத்ததைக் குற்றமெனக் கொண்டு அவர்களைக் கழுவேற்றுவித்தான். மதுரைப் பிரவேசத்தையும், அக்கினிப்பிரயோகத்தையும் ஒப்புநோக்குவார்க்குத் தீக்கொளுவலின் கொடுமையும், கழுவேற்றலின் நீதியும் விளங்காமற் போகா.
******
முறையை மாற்றுதற் கியலாமை
******
பழையாறை யென்னுந் தலத்திலுள்ள சிவாலயத்தை எச்சிலிலைகளால் மூடிவைத்த சமணரிடம் அத்தலமிருந்த நாட்டுக்கதிபதியாகிய சைவராஜன் பராமுகமாயிருந்தான். அவன் சைவராஜன் என்பது சிவபிரான் அவன் கனவிற் சென்று அக்கோவிலைச் சுத்தி செய்யச் சொன்னமையாற் புலனாம். சமணரைத் தடைதானுஞ் செய்யாத அரசன் எதிருஞ் செய்வானோ? சைவராஜாங்கத்தில் அக்கொடுந்தண்டனையில்லை யென்பதைத் தெரிவிக்க இவ்வொரு சான்றே போதும். ஆயின் பாண்டிவேந்தர் சைவராயின பின்னரன்றோ சமணரைக் கழுவிற் றைப்பித்தார்? அ·தெவ்வாறு பொருந்து மெனிற் கூறுதும். வாதமுடிவில் அரசருங் குடிகளுமே சைவராயினார். சட்டத்தையுஞ் சைவமயமாக்க அப்போது அவகாசம் ஏது? சட்டத்தை மாற்றி யமைக்கும் வரைக் குற்றவாளிகளைத் தண்டனையினின்றுந் தடுத்து வைப்பது இக்கிறிஸ்தவராச்சியத்தினுமில்லை. ஆகலின் இருந்த சட்டத்தையே அரசர் பிரயோகித்தாரென்க.
******
வள்ளலார் மெளனம்
******
“தனிவாதி வழிந்தோமாகில் – வெங்கழு வேற்றுவானிவ்வேந்தனே” யென்பது சமணர் வசனம். வள்ளலார்க்குத் தோல்வி சித்திக்குமாயின் அவர்களையும் அங்ஙனமே செய்தல் வேண்டுமென்பது அதிற்போதரும். அரசருக்கும் அது நீதியே. வாதிபிரதிவாதிகள் ஒத்துப்போவதானால் மட்டும் ஒருக்கால் அத்தண்டனை விலகலாம். அதுவும் மன்னரது தீர்ப்புக்கு முன்னராதல் வேண்டும். தீர்ப்புக்குப் பிறகு குற்றவாளிகள் அரசருடைமை. தமக்கு விடுதிவேண்டுமாயின் அவரே அரசரிடங் கெஞ்சிக்கோடற் குரியவர். வென்றவர் குற்றவாளிகளுக்காகப் பரிந்துபேசவும், அரசர் அப்பரிவுக்கிசையவும் நீதி இடங்கொடாது.
சமணர் பிள்ளையார்பால் அநுசிதஞ் செய்தது அரசர் செய்த முறைக்குக் காரணம். ஆனால் கெளணியர் தீபம் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அவ்வாணையை விலக்கிடாததற்குக் காரணமெல்லாம் “சைவரிருந்துவாழ்மடத்திற் றீங்கு – தகவிலாச் சமணர் செய்த தன்மை” ஒன்றே. அது முறையாகலிற் சாலும். சமணரது யோக்கியதை நீதிப்பயனுக்கே யேற்றதாயிருந்தது. நீதிப்பயன் தண்டனை. விடுதலை கருணைக்குப் பயன். உண்மையில் கருணை நீதியை யதிக்கிரமித்துத் தண்டனையைமாற்ற வல்லதாகாது அது உள்ளத்தளவில் நின்று விடும். அதற்குத் தண்டனையை மாற்றும் வன்மையுண்டெனக் கொள்ளினும், சமணரது தரம் அதற்கு மிக்கவாய்ப்புடைத்தாத லவசியம். ஆனால் அவர் சம்பந்தப்பெருந்தகையாரது சாமர்த்தியத்தைப் பலமுறை கண்டும் மனமடங்கப்பெறாது “அவர்மேற் சென்ற – பொங்கியவெகுளி கூரப் பொறாமைகாரணமேயாக” அவரைக் கடைசிவரையும் எதிர்த்தே நின்றனர். செயப்படு பொருளின் தகுதியைக்கருதாது, தன் மாட்டுப் பலதிறங்கள் உளவாத லொன்றே பற்றி அவற்றையெல்லாம் அப்பொருளின் கட் பிரயோகித்தல் வினைமுதலாகிய கடவுளுக்கு மியலாது. அவ்வியலாமையால் அத்திறமில்லையென்பது தப்பு.
நீதியால் நேர்ந்த தண்டனையைக் கருணையால் விலக்குவது நீதிப்புறனடை. ஒரு புறனடையை வைத்து எல்லா நீதி நிகழ்ச்சிகளையும் விவகரிப்பது பரம வஞ்சகம். அப்புறனடைதானும் அவ்விராசாங்கத்தி லில்லை.
சமணர் செய்த பழிக்கெல்லாம் அரசர் வழித்துணை புரிந்து வந்தனர். ஞானபோனகரால் அவ்வறியாமை விலகிற்று. அப்போதே அவர் தமது இழிதகைமையை யுணர்ந்து தம்மை அதுகாறுங் கெடுத்துவந்த சமணர்மேற் கொண்டு விட்டார் சீற்றம். இயல்பாகவே நீதியால் அழியநின்ற சமணர் அச்சீற்றத்துக்கும் இரையாய் நின்றனர். அச்சீற்றம் (Revulsion of Mind) தேச நலம் பற்றி யெழுந்த தாகலின் ராஜதர்மமாகி சமணரனைவரையும் கழுவிற் பார்த்தேதணிவதாயிற்று. அகலினன்றோ அவர் சமணரைக் கழுவேற்ற உத்தரவிடுமுன் அதனைக் குறித்து ஞானசாகரரிடம் ஒன்றும் உசாவாராயினர். அவ்வாறு சமணர் கருணைக் கன்றி முறைக்கே யிலக்காவதை வள்ளலார் அறிந்துதான் மெளனஞ் சாதித்தார்கள்.
******
சொற் சோர்வு
******
சமணர் தோற்றவரைக் கழுவேற்றுக வென்று “தங்கள் வாய் சோர்ந்து” சொன்னார். சோர்வு சொல்லவேண்டுவதனை மறப்பானொழிதல். ஈண்டுச் சொல்லவேண்டுவது தோல்வி இன்னார்பால தென்னும் நிச்சயமின்மையால் தண்டனை தமக்கும் வரலாமென்றஞ்சி உயிர்க்கிறுதி பயவாத தண்டனையை. சமணர்க்குச் சம்பந்தப் பெருந்தகையார் மேலுள்ள பகை எத்துணை மிக்கதென்பதை அச்செய்யுளால் ஓர்க. ஆனால் “ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் – காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு” என்றபடி சமணரது சொற்சோர்வு சமணர்க்கே தலையிழப்பாகியது. வில்லினுங் கொடியது சொல்லென்று திருவள்ளுவருங் கூறினார்.
******
முட்டுக்கள்
******
பரசமய கோளரியாரது வருகையைக் கண்ட சமணர் அரசனுக் கறிவிக்கும்போது “இன்று கண்டு முட்டியாமென்று விளம்” பினார்கள். அதனைக்கேட்ட அரசனும் “கேட்டு முட்டியானு மென்றியம்பி”னான். முட்டு என்பது உணவொழிதலைக் குறிக்குஞ் சமணபரிபாஷை. சைவரைக் கண்டாலும், கண்டதாக யாரேனுஞ் சொல்லக் கேட்டலுஞ் சமணர் அந்நாளிலெல்லாம் உணவொழிதல் வேண்டுமென்பது சமண விதி. இத்தகையார் பார்வையிலேயே எப்போது மிருப்பவர் மங்கையர்க்கரசியாருங் குலச்சிறையாரும். இவ்விருபெரியாருஞ் சைவராகவே வாழும்படி அரசனும் மற்றைச் சமணருந் தயைகாட்டுதலு முண்டோ? எப்போதும் பட்டினிகிடக்க யாரால்தான் முடியும்? ஆகவே, மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாருஞ் சைவத்தைச் சமணர்க்குப் “புலப்படா வகைகொண்டுய்த்தா” ரென்பதே துணிவு. அவர்கள் பட்ட கஷ்டத்தைச் சம்பந்தப் பெருந்தகையார் “குழுமாகிய பரசமயத்த்டைத்தொண்டு – வாழுநீர்மையீர்” என விளித்ததிசயிக்கின்றார்கள். கோப்பெருந்தேவியாரும், மந்திரித்தலைவருமே பட்ட பாடிதுவாயின், அந்நாட்டில் அப்போது ஆண்டாண்டுள்ள சைவமக்கள் பாடு எப்படி யிருக்கும்? ஆகலின் சிஷ்டபரிபாலனார்த்தந் துஷ்ட நிக்கிரகம் கோற்றெழில் திருத்தவல்ல குலச்சிறையார்க்குக் கடனாயிற்று. அக்கடனை யவர் சமணரைக் கழுவேற்றித் தீர்த்தார். மகா சூரனாயிருந்தும் பிறர் கைச்சிக்கிச் செயல்மாண்டுகிடக்கும் பாண்டிமன்னனைப் பேணிக்கோடல் தெய்வப்பாவையார்க்குக் கடனாயிற்று. அக்கடன் அவனை ஞானபோனகர்க்கு ஆட்படுத்திவைத்தலாற் றீர்ந்தது. “யானுமென்பதியுஞ் செய்த தவமென்” என வரும் அடியை நோக்குக. பதி – நாயகன்.
******
சமண ராச்சியம்
******
கடவுட்பற்றுடையார் ஆத்திகர். அ·திலார் நாத்திகர். ஈகை, இரக்கம், நீதி, பெருமை, பிறர்மனை நயவாமை, கற்பு முதலியவை ஆத்திகரிடமே யிருத்தல் கூடும். நாத்திகரிடம் அவற்றுள் எதுவுமிருத்தற்கு இயைபொன்றுமில்லை. எளிமையும் பூதகாரியம்; வலிமையும் பூதகாரியம்; நீரின் மிகுதி நெருப்பையும், நெருப்பின் மிகுதி நீரையும் இன்மையாக்குவதுபோல் வலிமையாகிய பூதகாரியம் எளிமையாகிய பூதகாரியத்தை வாட்டுத லியல்பே; ஆகலின் எளியரை வலியர் வாட்டின் வருங்குற்றமென்னை யென் றெல்லாம் அந்நாத்திகர் விவகரிப்பர். பச்சை மண்ணுஞ் சட்டமண்ணும் பற்றினும் பற்றும்; இருளும் ஒளியும் இயையினுமியையும்; சிங்கமுஞ் செம்மறியுஞ் சேரினுஞ் சேரும்; தருமமும் நாத்திகமு மட்டுங் கூடுதல் யாண்டுமில்லை. இது முக்காலுஞ் சத்தியம். அவர்கள் எழுதுந் தருமநூல்கள் விவகாரத்தில் மட்டும் அவர்களுக்கு மெய்; பரமார்த்தத்திலோ வெறும் பொய்யே. அதாவது பொய்ப்பார்வையில் மெய்யும் மெய்ப்பார்வையில் பொய்யுமாமென்பது. ஏகான்மாதிகள் தாங்களே கடவுளெனக் கூறிப் பழிபாவங்கட் கஞ்சாவாறு நாத்திகர் கடவுளேயில்லையெனக் கூறிப் பழிபாவங்கட் கஞ்சார். ஆகலின் அவ்விருதிறத்தினராலும் எழுதப்பட்ட ஆரவாரவொழுக்க நூல்களைக் கொண்டு அவர்களை நன்கு மதிப்பது ஏமாற்றமாக முடியும். இவ்விவகாரம் பகைவயப்பட்டதன்று. அறிஞர் சாவதானமாகச் சிந்தித்து உண்மை தேர்க. அந்நாத்திகக் கூட்டத்திற் சேர்ந்தவரே சமணரும். ஆத்திக சமயங்களுள் அதியுன்னதமாகிய சைவசமயம் பரம்பரையாக அரசியற்றிவந்த பாண்டி நாட்டை நாத்திகச் சமணர் கவர்ந்துகொண்ட நாள்தொட்டுத் தமிழரிற் பலர் பல்துலக்குவதை விட்டனர்; ஸ்நாநத்தை யொழித்தனர்; உடையை யவிழ்த்தெறிந்தனர்; எப்போதும் மயிர்பிடுங்கும் உத்தியோகத்தை மேற்கொண்டனர். “மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுத – லணியிருங் கூந்தலை யவ்வை மார்கடாம் – பணிவிலர் பறித்தனர்” என்னுஞ் சமணச் செய்யுளாலும், நிகண்டவாதியென மற்றொரு பெயருண்மையாலும், பிறவற்றாலும் சமணருக்கு அந்நாகரிகம் உளதாதல் வெளிப்பட்டது. கண்டம் – உடை, நிகண்டம் – அ·தின்மை. இவ்வாறு மயிர்பிடிங்கிக்கொண்டு துணியின்றி யலைந்த பாண்டிநாட்டை உலகுய்யவந்த உத்தமர் காத்துச் சநாதன தர்மத்தில் நிறுத்தியருளினார்கள். இந்தச் செய்ந நன்றியைக் கொல்லத்துணியுந் தமிழனுக்குஞ் சைவப்போலிக்கும் ஐயோ!
******
நாடெய்திய நலன்
******
பாண்டித்தமிழர் பல்விளக்கப் பழகினர்: ஸ்நாநஞ் செய்யத் தலைப்பட்டனர்; துணியுடுக்கத் தொடங்கினர்; மயிர் பிடுங்குவதை மறந்தனர்; சமயப் பகையைத் தகர்த்தனர். நாடெங்கும் எமது ஞானமார்க்காண்டரால் நாகரிகவொளி பளிச்சென வீசியது. இயலிசைநாடக மென்னுந் தமிழ் மூன்றுந் தழைத்து அத்தவராஜ சிங்கத்தின் திருநாமங்களில் ஒன்றாய் விளங்கும் பாகியத்தைப் பெற்றது. ஞானத்தைப் பெறுதற்கும், பெற்றஞானத்தை யிழந்துவிடாமற் காத்தற்கும் பரமசாதனமாயுள்ள சிவாலயங்களெல்லாம் உய்ந்தன. நாத்திகச் சமணரால் கண்ணுக்கெட்டாத தூரஞ் சென்ற சிவஞானம் எமது முத்தமிழ்விரகரால் கைக்கெட்டிய சமீபத்தில் வந்தது. இன்னன எண்ணிறந்த பாக்கியங்களை யீந்தருளிய பாமாகாருண்ய சாகரரைத் தினைத்துணைத் தோஷத்துக் குட்படுத்திப் பேசினுந் தீராவிடும்பைதரும்.
******
சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க.
ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s