காயத்ரி மந்திரமெனும் சிவ மந்திரம்


திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுலோக பஞ்சக விஷயம்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை

—————————————————————————–
1. காயத்ரீ வல்லபத்வாத்.
உயர்கா யத்திரிக் குரிப்பொரு ளாகலின்
பொருள்:-
மந்திரங்களுக்குள் மேலான காயத்ரி மந்திரத்துக்குக்குச் சொந்தமான அர்த்தமாய் விளங்கலானும் என்பது.
காயத்ரி மந்திரம்:-
‘தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத்’ என்பது
அதன் பதவுரை:-
ய – எவன், ந: – நம்முடைய, திய:- புத்திகளை, ப்ர – நன்றாக, சோதயாத் – நடத்துவானோ, தத் – அந்த, ஸவிது: – சூரியனிலுள்ள, பர்க: – பர்க்கனாகிய, தேவஸ்ய – தேவனுடைய, வரேண்யம் – மகிமையை, தீமஹி – தியானிப்போம் என்பது.
அதன் கருத்து:-
சூரியனிடத்தில் ஒரு தேவனிருக்கிறான், அவன் பெயர் பர்க்கன். அப்பர்க்கதேவனை நாம் தியானிக்க வேண்டும் என்பது.
பங்கஜம் என்னும் பெயரையுடைய வல்லிக்குப் பங்கஜவல்லி என்ற பெயர்வந்தபடி, பர்க்கன் என்னும் பெயரையுடைய தேவனுக்குப் பர்க்கதேவன் என்ற பெயர் வந்தது.
இதனால காயத்திரியின் உபாசியப்பொருள் ஸவிதாவுமன்று தேவனுமன்று பர்க்கனேயாம் என்பது காண்க.
இனி, ஆராயவேண்டுவது அந்தப் பர்க்கப்பெயர் சிவபிரானுக்குரியதா பிறதேவர்க்குரியதா என்பது. வேதத்தின் ஞானபாகமாகிய உபநிஷத்துக்களே அவ்வாராய்ச்சியைச் செய்துள்ளன. மைத்திராயண் காயத்திரி மந்திரத்தை மூன்று பாதங்களாகப் பிரித்து உரை செய்துவிட்டு அதிலுள்ள பர்க்கப் பெயருக்கும் ‘அதபர்க…பர்காக்ய….பர்கா இதி ருத்ரோ ப்ரஹ்ம வாதிக:’ என்ற பகுதியில் பர்க்கன் என்னும் பெயருடையான் உருத்திரன் எனப் பிரமவாதிகள் சொல்லுகிறார்கள் என்று தெளிவாக உரைவகுத்திருக்கிறது. ‘பர்காக்ய’ என்று பர்க்கநாமம் சிவபிரானுக்கு ரூடிப்பெயராகவே அதில் வருதல் காண்க. அப்பால் அவ்வுப நிஷத்துத்தானே ‘அதபர்க இதி பாஸயதீமாந் லோகாந் இதி ரஞ்சயதீமாநி பூதாநி கச்சத இதி கச்சத் யஸ்மிந் நாகச்சத் யஸ்மா இமா: ப்ரஜாஸ்தஸ்மாத் பாரகத்வாத் பர்க:’ (இனிப் பர்க்க னென்றது ப – உலகங்களை விளக்கி நிற்போன். ர – எல்லாவுயிர்களுக்கும் பிரீதிவிளைப்போன், க – எல்லாவுயிர்களையும் அடக்கி வெளிப்படுத்துவோன். ஆகலின் பர்க்கனெனப்படுகிறான்) என்றுகூறி அப்பர்க்கச் சொல் அவனுக்கான யோகத்தையும் விளக்கிற்று. அதனால் அப்பெயர் அவனுக்கு யோகரூடியு மாதலறிக. வடமொழி வியாகரணம் பெரும்பாலும் யோகரூடியையும் ரூடியென்றே சொல்லிவிடும். திரிபுராதாபிநி ‘பர: சிவ: ……….பர்க் உச்யதே’ (பரசிவன் பர்க்கனென்று சொல்லப்படுகிறான்), ‘பர்கோதேவஸ்ய தீத்…..சிவாத்மாக்ஷரம் கண்யதே’ (‘பர்கோதேவஸ்ய என்ற வாக்கியத்தால் சிவனை ஆத்மாவாகவுடைய அக்ஷரம் சொல்லப்படுகிறது) என்கிறது. வடமொழி நிகண்டுகளும் அன்னசுருதிகளை யநுசரித்தே ‘பர்கஸ் த்ரயம்பக:’ ‘ஹர: ஸ்மரஹரோ பர்க:’ எனப் பர்க்கச்சொல்லைச் சிவநாமமாகப் படித்தன.
பங்கஜம் என்பதை யோகப் பெயரளவில் வைத்துக்கொண்டால் அது தாமரையையும் சேற்றில் முளைத்த மற்றச் செடிகளையுங் காட்டி விபசரிக்கும். ஆனால் அதனை ரூடிப் பெயராக வைத்துக் கொண்டால் அது தாமரையை மட்டுங் காட்டும். ஆகையால் யோகப் பெயரினும் ரூடிப் பெயரே தன் பொருளை உள்ளபடி காட்டவல்லதாதல் காண்க. மீமாம்ஸகரும் அதனாற்றான் (யோகாத் ரூடிர்பலியஸீ, ருடிர் யோக மபஹரதி) யோகத்தினும் ரூடியே வலியுடையதெனக் கொண்டனர். அப்படியே காயத்திரிமாதாவும் தன்தியேயவஸ்து அதுவோ இதுவோவெனப் பிறர் மயங்குமாரு யோகப் பெயர்களைத் தாங்காமல் சிவபிரானே அவ்வஸ்து என்று மந்த மதிகளுக்கும் விளங்கும்படி அவனுக்கே ரூடியாகிய பர்க்க நாமத்தைத் தன்மாட்டுத் தாங்கித் தன் பாதி விரத்தியத்தைக் காத்துக்கொள்வாளாயினாளென்க.
நிற்க, ப்ருஹதாரண்யகம் ‘யஸ்யாதித்யச் சரீரம் ய ஆதித்ய மந்தரோயமயத்யேஷத ஆத்மாந்தர் யாம்யம்ருத:’ (எவனுக்கு ஆதித்யன் சரீரம் எவன் ஆதித்தியனுக்குள்ளிருந்து அவனை யியக்குகின்றான் அவனே ஆத்மாவின் அந்தர்யாமி, அமிர்தன்) என்றும், முண்டகம் ‘ஸ¤ர்யத்வாரேண விரஜா: ப்ரயாந்தி யத்ராம்ருதஸ்ஸ புருஷோஹ யவ்ய யாத்மா’ (பாபஹீனர்கள் சூரியதேஜோ மார்க்கத்தால் அமிர்தனும் அவ்யயனுமான புருஷன் இருக்குமிடத்தை யடைவார்கள்) என்றும் கூறி ஆதித்தியனுக்குள்ளிருப்பவனை அமிர்தன் புருஷன் என்று அழைக்கின்றன. ஜாபாலம் ‘சதருத்ரியே ணேத்யேதாந்யேவ ஹவா அம்ருதஸ்ய நாமாநி’ (சதருத்ரீயத்தி வடங்கிய பெயர்கள் அமிர்தனுடைய நாமதேயங்கள்) என்றும், கெளஷீதகிப்ரஷ்மணம் ‘தேநாம்ருதத்வஸ்யேசாநம்’ சுவேதாகவதரம் ‘உதாம்ருதத்வஸ்யேசாந:’ (அமிர்தத் தன்மையை யளிப்பவன் ஈசானன்) என்றும், தைத்திரியம் ‘அம்ருதோ ஹிரண்மய:’ (அமிர்தனாவான் பொன்வண்ணன்) என்றும் கூறியதால் அந்த அமிர்தநாமமும், நாரதபரிவ்ராஜகம் ‘புருஷோத்தமோத்த்மம் ஸர்வேச்வரம்….அவ்யயம்’ (அவ்யயனும் புருஷோத்தமோத்தமனும்சர்வேசுவரனே) என்று கூறியதால் அந்தப் புருஷநாமமும் சிவநாமங்களேயாமென்பது சித்தமாயிற்று. இன்னும் பாசுபதப்ரஹ்மம் ‘அந்தாதித்யே ஜ்யோதி: ஸ்வரூபோ ஹம்ஸ:’ (ஆதித்தியாந்தர்யாமியாகிய ஜோதி ஹம்ஸஸ்வரூபம்) என்று கூறிய ஹம்ஸத்தை ப்ரஹ்மவித் ‘ஹம்ஸ ஏவபரோ ருத்ரோ’ (ஹம்ஸமாவரன் ருத்ரனே) ‘ஹம்ஸஏவ மஹேச்வர:’ (ஹம்சமாவான் மகேசுவரனே) என்று விளக்கியது. அதனாலும் ஆதித்தியனிடத்திலிருக்கும் அந்தர்ஜோதி சிவபிரானேயாதல் வெளி. மேலும் ஆதித்தியன் சிவபிரானது அஷ்டமூர்த்தங்களுள் ஒன்று. அதில் அவன் உக்ரன் என்னும் பெயரால் விளங்குகிறான். ‘ஸ¤ர்யஸ் யோக்ர:’ என்பது வேதம். ‘அருக்கனாவானரனுருவல்லனோ’ என்பது தேவாரம்.
ஆதித்தியாந்தரியாமி பொன்வண்ணனென்பதை ‘ஸ¤ர்யோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:’ (சூரிய மண்டலத்தின் அதிதெய்வமாகிய ஆதித்தியனுக்கு அந்தரியாமி ஹிரண்மய புருஷர்) என்ற ந்ருஸிம்ஹ பூர்வதாபிநியாலும் ‘ய எஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:’ (ஆதித்தியாந்தரியாமி ஹிரண்மய புருஷர்) என்ற நாராயனம் மைத்திராயண் சாந்தோக்யங்களாலும் அறிக, கைவல்யம் ‘அஹமீசோ ஹிரண்மயோஹம்’ (ஈசனும் நானே பொன்வண்ணனும் நானே. இது சிவன் சொல்) என்றதாலும், முண்டகம் ‘ருக்ம வர்ணம் கர்த்தார மீசம்’ (பொன் வண்ணரும் கர்த்தரும் ஈசரும்) என்றதாலும், நாராயணம் ‘நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்ய வர்ணாய ஹிரண்ய ரூபாய ஹிரண்ய பதயேம்பிகாபதய உமாபதய பசுபதயே நமோநம:, (பொற்றோளருக்குப், பொன்வண்ணருக்குப் , பொன்னுருவினருக்குப், பொன்னுக்கிறைவருக்கு, அம்பிகாபதிக்கும் உமாபதிக்கு, பசுபதிக்கு நமஸ்காரம் நமஸ்காரம்) என்றதாலும், பஸ்மஜாபாலம் ‘ஹிரண்யபாஹ¤ம் ஹிரண்யரூபம் ஹிரண்யவர்ணம் ஹிரண்யநிதி மத்வைதம் சதுர்த்தம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீத மேக மாசாஸ்யம் பகவந்தம் சிவம்’ (பொற்றேளரும் பொன்னுருவினரும் பொன் வண்ணரும் பொன்னிதியும் இரண்டற்றவரும் சதுர்த்த சப்தவாச்சியரும் பிரம விஷ்ணு ருத்ரர்களைக் கடந்தவரும் உபாஸிக்கத் தக்க ஏகரும் ஷாட்குண்ய சம்பந்தருமான சிவபெருமான்) என்றதாலும் சிவபிரானே அந்த ஹிரண்மய புருஷர் என்பது நன்கு விளங்கும். ‘பொன்னார் மேனியனே’ ‘பொன்வண்ண மெல்வண்ண மவ்வண்ண மேனி…… ஈசனுக்கே’ என்ற தமிழ் வேதமுங் காண்க.
‘ஸ ஆதித்யோ விஷ்ணுச் சேச்வரச்ச’ என்பது ப்ரஹ்ம வாக்கியம். இதிலுள்ள விஷ்ணுச்சேச்வர: என்ற தொடரை இருவகையாகப் பொருள் கொள்ளலாம். விஷ்ணுவை யோகப் பெயராக வைத்து வியாபியாகிய ஈசுவரன் எனச் சிவபரமாக வுரைத்தல் ஒன்று. ஈசுவரனை யோகப் பெயராக வைத்து ஐசுவரியத்தையுடையவனாகிய விஷ்ணுவென விஷ்ணு பரமாக வுரைத்தல் இன்னொன்று. இவ்வாக்கியம் துரிய வஸ்துவைப் பிரஸ்தாபிக்கின்றது. வேதமுழுவதும் துரிய வஸ்துவைச் சிவநாமங்களாலேயேவிளக்கும்; விஷ்ணு நாமங்களால் விளக்கவே மாட்டாது. அத்தகைய மற்ற வாக்கியங்களுக்கேற்பவே இந்த வாக்கியத்தையும் பொருள்கொள்ள வேண்டும். கொள்ளின் இதற்கு முதல்வகைப் பொருளே சிறக்கும். ஆகையால் இந்த வாக்கியத்தாலும் ஆதித்தியனிடம் வியாபித்திருப்பவன் சிவபிரானே யென்பது தெளிவு.
சிலர் ‘அப்பர்க்கச்சொல் பர்க: என்பதன்று பர்கஸ் என்பதேயாம். பர்க: என்பதற்குத்தான் ருத்ரன் என்று அர்த்தம். பர்கஸ் என்பதற்கு அவ்வர்த்தமில்லை, தேஜஸ் என்பதே அர்த்தம்’ என்று கூறி அதை யோகப்பெய ராக்கித் தம்மனம் போன தெய்வங்களுக்கெல்லாங் கொண்டுபோய் ஒட்டவைத்துக் காயத்திரி தேவியின் பாதிவிரத்தியத்தைக் கெடுக்கப் பார்ப்பர். சிவபிரானது ரூடிநாமங்களில் அன்னார் கொண்ட அசூயையே அதற்குக்காரணம். மேலும் வேத வேதாந்தங்களில் வருந் தெய்வப் பெயர்களை யோகப் பெயர்களாக வைத்தே விவகரிப்பதாயின் எந்தத் தெய்வத்துக்கும் எந்தப் பெயருஞ் சொந்தமாகாதென்பதை அவரறியார். ஆகலின் மேற்காட்டிய சுருதிப் பிரமாணங்களை விரோதித்து நிற்கும் அவருரைகளனைத்தையும் பிரமவாதிகளல்லாத பாஷண்ட வாதிகள் செய்த தூர்த்த வியாக்கியானங்களென்று ஒதுக்கி விடுவதே வைதிகோத்த மர்க்குக் கடனாகும். பர்க்கச் சொல் பர்கஸ் அன்று என்பதை ஸ்ரீமத் ஹரதத்தாசாரிய சுவாமிகள் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தானு மறிக.
இனிப், பர்க்கச் சொல்லை பர்க்கஸ் என்று வைத்துக்கொண்டால் அப்போதும் அது சிவதேஜஸையே சுட்டும். பிரத்தியக்ஷ தேஜஸ்களுள் ஆதித்திய தேஜஸே அதியுக்கிருஷ்டமானது. சிவதேஜஸ் ஒன்றையே ஆதித்திய தேஜஸ் என்றும் அதனினும் மேம்பட்ட தேஜஸ் என்றும் வேதம் வர்ணித்துள்ளது. ‘ஆதித்ய வர்ணம்’ (ஆதித்திய நிறமுடையவனை), ‘சிவ ஏவகேவல: ததக்ஷரம் தத்ஸவிதுர் வரேண்யம்’ (கேவலம் சிவமொன்றே. அது அக்ஷரம், அது ஸவிதாவுக்கு மேலானது) என்ற ச்வேதாச்வதரம் காண்க. கடல் வண்ணன், கருவண்ணன், முகில் வண்ணன், காயாம்பூவண்ணன், புறம்போலுள்ளங்கரியான் என்பனவாதிய இலக்கணங்களையுடைய நாராயணன் முதலிய பிறதேவர்கள் அத்துனைச்சிறந்த ஒளியுடையவர்களாக மாட்டார்கள். எனவே ஆதித்தியனுடைய இருதயத்தில் அவர்கள் இருப்பதுமில்லை. ஆனால், கூரேச விஜயம் என்னுஞ் சுவடி சூரிய மண்டலத்திலிருப்பவன் நாராயணன்றானென்பதை ‘த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்திய வர்த்திநாராயணஸ் ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: | கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீட ஹாரீ-ஹிரண்மயவுபு:| த்ருத சங்க சக்ர தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மிவாக்ஷ¢ணி’ என்று சாந்தோக்கியங் கூறுவதாகச் சொல்லி நிரூபிக்கப் பார்க்கும். சாந்தோக்கியத்தில் ‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷ¢ணீ’ என்பது மட்டும் உண்டும். அம்மேற்கோளின் மற்ற பாகங்களனைத்தும் அவ்வுபநிஷத்திற் கிடையா.
சிலர் சூரிய நாராயணன் என்ற பிரயோகத்தைக்கொண்டு சூரியாந்தரியாமி நாராயணனே யென்பர். அது தப்பு. சூரியர்கள் பன்னிருவர் என்றொரு கணக்குண்டு. அவருள் விஷ்ணுவென்று பெயருள்ள சூரியனொருவனிருக்கிறான். சூரிய நாராயண னென்பது அந்தச் சூரியனாகிய விஷ்ணுவையே குறிக்கும். அவ்வுண்மையை ‘யாக்ஞ்வல்க்யோஹவை மஹாமுநி ராதித்ய லோகம் ஜகாம தமா தித்யம் நத்வாபோ பகவந் நாதித்யாத்ம தத்வ மநுப்ருஹீதி ஸஹோவாச நாராயண:||’ (யாக்ஞ வல்கிய மஹாமுநிவர் ஆதித்தியலோகம் புகுந்தனர். அவ்வாதித்தியனை அவர் வணங்கிப்பகவானே! ஆதித்தியனே! ஆத்தும தத்துவத்தைக் கூறுதியென நாராயணன் கூறுகின்றனன்) என்ற மண்டலப்ராஹ்மணத்தாலுந் தெளிக. சிவசூரியன் ராமச்சந்திரன் என்ற பிரயோகங்களும் பிரசித்தம். சிவசூரியன் என்பதற்குச் சிவனை அந்தரியாமியாகவுடைய சூரியனென்றும், ராமச்சந்திரன் என்பதற்கு ராமனை அந்தரியாமியாகவுடைய சந்திரனென்றும் பொருளுரைத்தல் சிறக்கும். விஷ்ணுவைப் பார்வதியின் புருஷக் கோலமென்று உபசரித்தலுண்டு. ‘போகீ பவாநீ புருஷேச விஷ்ணு: க்ரோதேச காளீ சமரேச துர்க்க:’ என்பது காண்க. பார்வதியைச் ‘சந்த்ர மண்டல மத்ய வர்த்திநீம்’ என்கின்றது த்ரிபுராதாபிந். ஆகையான் ராமசந்திரனென்பது விஷ்ணுவைச் சந்திரமண்டல மத்தியவர்த்தி யென்பதைக் காட்டிற்றென்க.
காயத்திரி மந்திரத்தைப்பிராமணர்கள் ஜபிப்பார்கள். அவர்கள் வணங்கும் தெய்வமும் பிராமணத் தெய்வமாகவேயிருக்க வேண்டும். ‘ஈசாந:….ப்ரஹ்மணோதிபதி…..ஸதாசிவோம்’ என்னும் நாராயணத்தால் உருத்திரனே தேவர்களுட் பிராமணனென்பது விளங்கும். மனுஸ்கிருதியும் ‘விப்ராணாம் தைவதம் சம்பும் க்ஷத்ரியாணாந்து மாதவ:| வைச்யாநாந்து பவேத் ப்ரஹ்மா சூத்ராணாம் கணநாயக:||’ (பிராமணருக்குத் தெய்வம் சிவன். க்ஷத்திரியருக்குத் தெய்வம் விஷ்ணு. வைசியருக்குத் தெய்வம் பிரமன். சூத்திரருக்குத் தெய்வம் இந்திரன்) என்றது.
ப்ருஹஜ்ஜாபாலம் ‘சிவ வக்ஷஸ்திதம் நகே நாதாய ப்ரணவே நாபி மந்த்ர்ய காயத்ர்யா பஞ்சாக்ஷரேணாபி மந்தர்ய ஹரிர் பஸ்மத்தை நகத்தா லெடுத்துப் பிரணவம் காயத்திரி பஞ்சாக்ஷரம் இவற்றானே யபிமந்திரித்து விஷ்ணுவின் சிரசு முதலிய அங்கங்களிற் பூசி) என்றதாலும், பஸ்மஜாபாலம் ‘த்யக்த்வா பஸ்மதாரணம் ந காயத்ரீம் ஜபேத்’ (பஸ்மதாரண மின்றிக் காயத்திரியை ஜபித்தல் கூடாது) என்றதாலும் காயத்திரி சிவ சம்பந்த முடையதாதல் காண்க.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s